ஜெயலலிதா நினைவுநாள் ‘அன்றைக்கு'தான்.. ரெடியா? தொண்டர்களுக்கு திடீர் உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை : ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், ஜெயலலிதாவின் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஆறுமுகசாமி அறிக்கையை ஏற்காமல், டிசம்பர் 5 தான் நினைவு நாள் என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்படும் என்றும், அவரது நினைவு நாள் அன்று தான் என்றும் ஈபிஎஸ் தரப்பின் அறிக்கையில் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்தது எப்போது? "ட்வீட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பு" 2016 டிசம்பர் 4-ஐ நினைவுகூர்ந்த கஸ்தூரி!

டிசம்பர் 4 ஆ 5 ஆ?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது. ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இவு 11.30 மணிக்கு மரணித்ததாக மருத்துவமனை கூறப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணிக்கவில்லை, டிசம்பர் 4ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மரணித்துவிட்டார் என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி 3.50 மணிக்கு அவரது சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டினர். இதனால் எந்த தினத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்தது.

நினைவு நாள் டிசம்பர் 5
இந்தநிலையில் ஜெயலலிதா நினைவு தினம் தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.

எடப்பாடி மரியாதை
தன்னலம் கருதாது, தமிழ் நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும். ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளான 5.12.2022 - திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களுடைய நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

உறுதிமொழி
தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர். இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மன ஆறுதல்
ஜெயலலிதாவின் நினைவு நாளான 5.12.2022 அன்று, அவரைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள்
இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 5.12.2022 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.