“சற்றும் மனம் தளராத பத்மராஜன்.. 230வது முறையாக” - முதல் ஆளாக மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன்!
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் நபராக இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சார்பாக ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.
ஆஹா.. இந்தா வந்துட்டாருல்ல.. லிம்கா புகழ் பத்மராஜன்.. 227வது முறையாக களமிறங்கிய தேர்தல் மன்னன்..!

ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து
தமிழகத்தில், 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த இடங்களுக்கும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 6 இடங்களில் பிரதிநிதித்துவ அடிப்படையில் திமுக 4, அதிமுக 2 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.
தி.மு.க சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இன்னொரு சீட் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் ராஜ்யசபா வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

வேட்பு மனு
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் நபராக இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் இதுவரை 230வது முறையாக பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக பத்மராஜன் தெரிவித்தார்.

பத்மராஜன்
சாதாரண மக்கள் யாவரும் தேர்தலில் போட்டியிடலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒரு தேர்தல் விடாமல் வேட்புமனு செய்வதாகவும், இதுவரை தேர்தலுக்காக மட்டும் இதுவரை 50 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிக தேர்தல்களில் போட்டியிட்டு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தொடர்ந்து இடம்பெறுவதே தனது லட்சியம் என்றும் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மன்னன்
தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர். ஹோமியோபதி மருத்துவரான இவர் 1988ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலிலும் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.