5 கிலோ தங்க கட்டி, ரூ.100 கோடி அன்னிய முதலீடு.. பால் தினகரன் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்
சென்னை: மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஏராளமான ஆவணங்கள், 5 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.100 கோடி வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக ஆலோசிக்க, வருமான வரித்துறை அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பால் தினகரன் நடத்தி வரும், இயேசு அழைக்கிறார் அமைப்பின் அலுவலகங்கள், கோவையிலுள்ள காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று காலை வரை 4 நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தின.
இன்றுடன் வருமானவரித்துறை சோதனைகள் நிறைவடைந்துள்ளன. அதில் சில முக்கிய விஷயங்களை ஊடகங்களுடன் ஐடித்துறை பகிர்ந்துள்ளது.

5 கிலோ தங்கக் கட்டிகள்
இன்று காலை வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் விடுதியிலிருந்து 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதற்காக தங்கக் கட்டிகளாக மாற்றினர் என்ற கேள்விக்கு வருமானத்திலிருந்து சில பகுதியை தங்கக் கட்டிகளாக மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

நேரில் ஆஜராக நோட்டீஸ்
மேலும், ரூ.100 கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடு நடந்துள்ளது. ஆனால், இதற்கு, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவில்லை. எனவே அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அடுத்த வாரம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பால் தினகரன் நேரில் ஆஜராக வேண்டும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதற்காக பால் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.100 கோடி முதலீடு
பால் தினகரன் வெளிநாட்டில் வசிக்கிறார். எனவே, என்ஆர்ஐ பிரிவில் வருகிறார். எனவே, வெளிநாடுகளில் அவர் செய்யும் முதலீடுகள் குறித்து முழு விவரத்தை இந்தியா பெற முடியாது. ஆனால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் ரூ.100 கோடி முதலீடு செய்தது பற்றி மட்டும் விசாரிக்கலாம்.

ஆன்லைனில் பரிவர்த்தனை
அதேநேரம், வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்த மற்றொரு தகவல் என்னவென்றால், வந்த வருவாயை பால் தினகரன் மறைக்கவில்லை. ரெய்டுக்கு அவரது தரப்பு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறது என்பதுதான். 10 ரூபாய், 20 ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரை பால் தினகரன் இந்தியாவில் நன்கொடை பெற்றுள்ளார். ஆனால் அனைத்தையுமே ரூபாயாக வாங்காமல், ஆன்லைனில்தான் வாங்கியுள்ளனர். அவை அனைத்துக்கும் முறையாக கணக்கு பராமரித்துள்ளார். இவ்வாறு ஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.