சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுழன்றடித்த "சூறாவளி" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா!

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்

Google Oneindia Tamil News

சென்னை: "படவாய்ப்புகள் என்னமோ வருது... ஆசையாதான் இருக்கு... ஆனா, பாழாப்போன இந்த உடம்பு ஒத்துழைக்க மாட்டுதுய்யா!" என்று தீராத கலைதாகத்துடன் அன்று சொன்னார் பரவை முனியம்மா.. இன்று அந்த தவிப்பு, சோகம், விசும்பல் மொத்தமாக அடங்கிவிட்டது.. போராடி போராடி இழுத்து பிடித்து வைத்து வந்த பரவை முனியம்மாவின் உயிர் இன்று பிரிந்து சென்றுவிட்டது.. வயது 77!!

Recommended Video

    Paravai Muniyamma passes away | பரவை முனியம்மா காலமானார்

    எவ்வளவு திறமைகள் இருந்தும் வாழ்நாளெல்லாம் அறியப்படாதவர் திடீரென ஒருநாள் பார் போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவார்... அந்த வகையில் பரவை முனியம்மாவையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

    மதுரை மாவட்டத்தில் இருக்கும் பரவை என்ற ஊரில் ஊரை சேர்ந்தவர்.. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம்.. 20 வயதிலேயே கும்மி பாட்டுக்களை பாட ஆரம்பித்துவிட்டாலும் திரை உலகம் வாரி அணைத்து கொண்டது இவரது 60 வயதில்தான்!

    சூறாவளி காத்து

    சூறாவளி காத்து

    "வயசாயிடுச்சே.. இனிமே நம்மளால என்னத்த சாதிக்க முடியும்" என்ற வழக்கமான புலம்பல் வரிகளுக்கு ஒரு முடிவு கட்ட வந்தவர்தான் முனியம்மா.. என்ட்ரியே "தூள்"ஆக இருந்தது.. பரவையில் இருந்து புறப்பட்டு வந்த இந்த "சூறாவளி காத்து" சுழண்டு சுழண்டு அடித்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. 20 வருடமாக தமிழ் சினிமாவில் கோலோச்சினார்.

    பதக்கங்கள்

    பதக்கங்கள்

    தமிழகம் தொடங்கி வெளிநாடுகள் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் ரொம்பவும் ஃபேமஸ்.. குவிந்த பட வாய்ப்புகள் மூலம் கலைமாமணி பட்டம் உட்பட ஏராளமான பதக்கங்களை வீடு முழுக்க அடுக்கி கொண்டாரே தவிர, இவருக்கு ஏனோ பணம் சம்பாதிக்க தெரியவில்லை. "என்னய்யா நல்லாயிருக்கியா" என்று யாரை பார்த்தாலும் வெள்ளந்திதனமாய் கேட்க தவறாத முனியம்மாவிடம் என்னமோ பணத்தை கரெக்டாக பேசி வாங்கும் கறார் தன்மை கடைசிவரை வரவேயில்லை.. கிடைத்த ஊதியம் குடும்பம் நடத்தவே சரியாக இருந்ததே தவிர, சேமிப்புக்கு என்று எதுவுமே மிச்சமில்லை.

    மண் பாத்திரங்கள்

    மண் பாத்திரங்கள்

    சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோதே "கிராமப்புற சமையல்" என்ற நிகழ்ச்சியின் மூலம் டிவியிலும் ஃபேமஸ் ஆனார் முனியம்மா.. முழுக்க முழுக்க மண்பாத்திரங்களை வைத்து சமைத்து காட்டிய பெருமை இவருக்குதான் போய் சேரும்.. இல்லத்தரசிகளிடையே பெரிய அளவில் ஹிட்டானது இந்த நிகழ்ச்சி. அம்மியில் அரைத்து விட்டு.. மண்பானை சட்டியில் குழம்பு வைத்து கொண்டே முனியம்மா பாடும் நாட்டுப்புற பாட்டுக்கு ஒட்டுமொத்த தமிழகமே சரண்டர் ஆனது!

    நிதியுதவி

    நிதியுதவி

    இதற்கு பிறகுதான் இவருக்கு வறுமை வாட்ட தொடங்கியது.. இவர் கஷ்டப்படுகிறார் என்ற விஷயம் கேள்விப்பட்ட உடனேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். அதாவது அந்த பணத்தை பேங்கில் செலுத்தி, அதன் வட்டி இவருக்கு மாத மாதம் கிடைப்பது போல வழிசெய்து தந்திருந்தார்.. முனியம்மாவின் கடைசி நேர மருத்துவ செலவு வரை இந்த வட்டி பணமும், எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து கிடைக்கிற மாதாந்தர உதவித்தொகையையும்தான் ஒருவகையில் உதவியது என்பதை மறுக்க முடியாது. அதேபோல நடிகர் சங்கம் உட்பட ஏராளமானோர் தங்களது பங்கினை சரியாகவே செய்தனர்.. உடன் நடிப்பவர்களை தன் பேரன், பேத்தியாகவே பாவித்து வந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்!!

    உடல்நலம்

    உடல்நலம்

    வறுமை, மாற்றுதிறனாளி மகன், இவைகளையும் தாண்டி.. 2014-ல் கணவரின் மரணம் பரவை முனியம்மாவை ரொம்பவே நிலைகுலைய செய்துவிட்டது.. இயல்பாகவே இருக்கும் ரவுசு, குசும்பு பேச்சு லேசாக குறைய தொடங்கியது.. எதையோ பறிகொடுத்ததை போலவே இருந்தார்.. உடல்நலம் இந்த சமயத்தில்தான் அவருக்கு குன்ற தொடங்கியது.. 3 மகன்கள், 3 மகள்கள்... இதில் செந்தில் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.

    வணக்கம்

    வணக்கம்

    அரசாங்கம் சார்பில் ஏதாவது உதவிகள் கிடைக்குமா என்றுகூட பலமுறை முயற்சி செய்தார்.. இவரை நினைத்துத் தான் பரவை முனியம்மாவுக்கு எப்போதுமே கவலை.. தன் கண்காணிப்பிலேயே மகனை அரவணைத்து காத்து வைத்திருந்தார்.. ஆனால் யார் வீட்டுக்கு வந்தாலும் கையெடுத்து அவர்களுக்கு வணக்கம் சொல்லும் பழக்கத்தை இந்த வளர்ந்த குழந்தைக்கு சின்ன வயசிலேயே கற்று தந்திருந்தார் பரவை முனியம்மா!

    வதந்திகள்

    வதந்திகள்

    எனினும் உடல்நலம் அதிகமாகவே பாதிக்கப்பட.. ஆஸ்பத்திரி சிகிச்சையும் ஆரம்பமானது.. சிவகார்த்திகேயன் உட்பட நல்லுள்ளங்கள் பரவை முனியம்மாவை அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த சமயங்களில் வெளிவந்த வதந்திகளுக்கும் பஞ்சமில்லை.. பதறியடித்து கொண்டு போன கலையுலக பிணைப்புகளிடம் "நான் நல்லா இருக்கேன்ய்யா.. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க.. தைரியமா இருங்க" என்று தன்னை சந்திக்க வந்தவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தந்தார்.

    சாதனை

    சாதனை

    "சந்தோஷமா திரும்பி வாங்காத்தா.. காத்திட்டிருக்கோம் உங்க பாட்டுக்களை கேட்க" என்று அவரது கையை அழுத்தமாக பிடித்து சொல்லிவிட்டு வந்த பேர, பிள்ளைகள் ஏராளம்.. ஆனால் தமிழ்சினிமாவுக்கே இது போதாத காலம் போலும்.. இன்று விடிகாலையில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.. நாட்டுப்புறப்பாட்டினை திரைத்துறையில் புகுத்தி.. தனது கம்பீரமான குரலாலும், மதுரை மண்ணுக்கே உரிய தன் நடை, பாவனை, வெள்ளந்தி பேச்சாலும் மக்களை சுண்டி இழுத்தவர் பரவை முனியம்மா.. சாதிக்க வயது ஒரு தடை என்பதை சுக்குநூறாக பொசுக்கி நொறுக்கி தள்ளியவர்.. உங்களை எங்களால மறக்கவே முடியாது ஆத்தா!

    English summary
    famous singer folk singer cum actress paravai muniyamma passed away
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X