சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. மக்களிடம் புரட்சி வெடித்து ரொம்ப நாளாச்சு சார்.. நீங்க ரொம்ப லேட்

Google Oneindia Tamil News

சென்னை: அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு,

எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல், உண்மையை அதன் தன்மையில் பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம் இது! உங்களின் உழைப்பு, நடிப்பு, துடிப்பு, அர்ப்பணிப்பு, திறமைகளை பார்த்து பிரமித்து போயுள்ள லட்சோபலட்ச ரசிகர்களில் ஒருவன் நான்.. யாருக்குமே கிடைக்காத சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்துக்கு முழு தகுதியானவர் நீங்கள்.. அதை எள்ளளவும் மறுப்பதற்கில்லை!

ஆனால் உங்களின் அரசியல் நிலைப்பாடுதான் எங்களை தலையை பிய்த்து கொள்ள வைத்துவிடுகிறது... 50 வருட காலமாக நாடி நரம்பெல்லாம் திராவிடர் ரத்தம் பாய்ந்த தமிழகம் இது.. ஒரு கட்டத்தில் அங்கேயும் சலிப்பு வரவும்தான் திமுக, அதிமுக வேண்டாம், அரசியல் விழிப்புணர்வு பெற்று, ஒரு மாற்றம் வராதா என்று பல காலமாக மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளனர்.. இது உண்மை.. யாரும் மறைக்க முடியாது.. ஆனால் இவர்களுக்கு மாற்று தேசியக் கட்சியா என்றால் அதுவும் இல்லை.. காரணம், இவர்கள் அவர்களை விட சுணக்கமாக இருக்கிறார்கள்.

 fans hot letter to actor rajinikanth

இந்த சமயத்தில்தான் உங்கள் அரசியல் வருகை குறித்த பேச்சு (உங்களைப் பொறுத்தவரை அது 2 வருஷம்தான்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அது 25 வருசம்தான்) கால்நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பமானது.. நாளடைவில் வெறும் கற்பனை என்று நாங்களே எங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டாலும் பஞ்ச் வசனங்களை பேசி பேசியே உங்கள் வருகையின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டு.. அதன்மூலம் உங்களது படங்கள் நன்றாகவே வசூல் செய்து விட்டன!

திராவிட கலாச்சாரத்தில் ஊறிப்போனவர்களை உங்கள் பக்கம் திசை திருப்புவது என்பது லேசுபட்ட காரியம் இல்லைதான்.. அதனால் உங்கள் வருகை ஒரு சவாலாகவே பார்க்கப்பட்டதும் உண்மைதான்.. ஆனால் லீலா பேலஸில் அத்தனையும் நொறுங்கிவிட்டது... அதாவது நீங்களே நொறுக்கி விட்டீர்கள். அண்ணாவை உங்களுக்கு பிடிக்கும் என்றீர்கள்.. அண்ணா வெறும் கவர்ச்சியால் மக்கள் மனதில் நிற்கவில்லை... அவரது அரசியல் வேள்வி மகத்தானது... அவரது சிந்தனைகள் மகோன்னதமானவை. புரட்சிகரமானவை.. வெறும் வாய் வார்த்தையில் அவர் நின்றதில்லை.. செய்து காட்டிய மகாத்மா.

நான் சிஎம் ஆகமாட்டேன் என்ற இந்த ஒத்த வார்த்தையை 2017-ம் ஆண்டாவது சொல்லி இருந்திருக்கலாமே... ஆனால் நான் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று மட்டுமே சொல்லி சஸ்பென்ஸை நீட்டித்தீர்கள். அண்ணாவுக்கு பிறகு யாரும் புதிய தலைவர்களை வளர்த்து விடவில்லை என்றீர்களே? ஆனால் அவர் எப்படி தலைவர்களை, ஒரு புதிய தலைமுறையை உருவாக்கினார் தெரியுமா... தெருதெருவாய், ஊர் ஊராய், ஓய்வு ஒழிச்சலின்றி போராடினார்.. சட்டமன்ற, எம்பி தேர்தல்களை எதிர்கொண்ட அண்ணாவின் களப்பணியில் 1 சதவீதமாவது நீங்கள் செய்ய வேண்டாமா?

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஒரு தொண்டனின் பெயரைகூட நினைவில் வைத்திருப்பார்.. அவரது பெயரை கூப்பிட்டு கருத்தும் கேட்டவர் கருணாநிதி என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள்தானே எம்ஜிஆர் ஆட்சி தர போவதாக சொன்னீர்கள்? எம்ஜிஆர் நல்ல தலைவர் இல்லாமல் போய்விட்டாரா? பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப்படுத்தி எம்ஜிஆர் போட்ட சத்துணவுதானே இன்று வரை பல ஆயிரம் பிஞ்சு வயிறுகளின் பசி நீக்குகிறது .. நீங்கள்தானே நான் பெரிதும் மதிக்கும் கலைஞர் கருணாநிதி என்றீர்கள்? நீங்கள்தானே தைரிய லட்சுமி ஜெயலலிதா என்றீர்கள்? இவர்களை எல்லாருமே புகழ்ந்துவிட்டு, அண்ணாவுக்கு பிறகு யாருமே இல்லைன்னு என்று சொன்னது உங்களுக்கே பெரிய முரண்பாடாக தெரியவில்லையா?

எதை புரட்சி என்று சொல்கிறீர்கள்? எழுச்சி வரட்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டால் எதுவரை அதற்கு காலநிர்ணயம்? நீங்கள் எப்போது வருவீர்கள் என்று சொல்லவே இல்லையே.. கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வெற்றிடம் இன்னைக்கு இருக்கிறது என்றும் சொல்கிறீர்கள்.. மறுபுறம் இன்றுள்ள அதிமுக, திமுக ஜாம்பவான்கள் என்றும் சொல்கிறீர்கள்? ஏன் இந்த முரண்பாடு? வெற்றிடத்தை காற்று நிரப்பும் இதுதான் எதார்த்தம்.. நீங்கள் நிரப்பத் தவறினால் வேறு ஒன்று வந்து நிரப்பி விடும்.. நீங்கள் வரும் வரை வெற்றிடம் காத்திருக்காது. உண்மையில் உலகில் வெற்றிடம் என்று எதுவுமே இல்லை என்பதுதான் அறிவியல்..!

71 வயது என்று ஏன் சொன்னீர்கள்? உங்கள் வயது நாடறியும்.. எனக்கு 71 வயது என்ன, இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நான் உங்களுடன் இருப்பேன், உங்கள் புரட்சியில் பங்கேற்பேன் என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லை.. எதற்காக வயதை குறிப்பிட்டீர்கள்? இதற்கு மேலும் என்னால் முடியாது என்று சொல்ல வருகிறீர்களா? 94 வயதிலும் பெரியார் பொதுக்கூட்டங்களில் பேசியபடியேதான் இருந்தார்.. சிறுநீர் வாளியை ஒருவர் கையில் பிடித்தபடி இருக்க, அப்போதும் கூட்டத்தில் பேசியபடியே இருந்தவர் தந்தை பெரியார்.. அவர் ஒரு பெரும் சமூகத்தையே தட்டி எழுப்பியவர்.. தனது அயராத சேவையால் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.. !

புரட்சியை கண்ணில் பார்த்தால்தான் கட்சியை தொடங்குவேன் என்றால் எப்படி? பொங்கி எழுங்கள் என்று நீங்கள் தூண்டி விடுவது போலாகாதா.. அரசுகளுக்கு எதிராக, கட்சிகளுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்து விட்டால், அதனால் வன்முறை வெடித்தால் என்னாவது.. அது உங்களது கொள்கைக்கு முரண்பாடானதாச்சே.. உங்களுக்குத்தான் போராட்டம் என்றாலே பிடிக்காதே.. நாடு சுடுகாடாகி விடும் என்றும் சொல்வீர்கள்.. உங்களையே நம்பி இருப்பவர்களுக்காகவாவது உங்கள் பேச்சு தன்னம்பிக்கையை தர வேணாமா? நான் தலைமையேற்று புரட்சியை தொடங்குகிறேன், உங்களில் முதல் ஆளாக நான் நிற்பேன் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்? 71 வயதாகிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டால் எப்படி?

சரி... உங்கள் பேச்சை நம்பியே புரட்சியில் இறங்கி, எழுச்சியையும் உருவாக்கிவிட்டார்கள் என்றே வைத்து கொள்வோம்.. அதன்பிறகு நீங்கள் கட்சியையும் ஆரம்பித்துவிட்டால், அவர்களின் பதவியையும் பிடுங்கிவிடுவேன் என்று சொல்கிறீர்கள்.. இப்படி இருக்கும் போது எதை நம்பி அவர்கள் புரட்சியில் எழுச்சியில் குதிப்பார்கள்..? சொத்துக்களை விற்று கட்சிக்காக பாடுபட்டு தேய்ந்து போன தேமுதிகவினர் கதை உங்களுக்குத் தெரியாதா.. அதை ரஜினியின் ரசிகர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்களா.. கட்சியை தொடங்கியபின் புரட்சியில் பங்கெடுத்தவருக்கு தரும் பலன் இதுதானா? ஊழல் செய்ய மாட்டார்கள் என்றே நம்புவோம்.. ஆனால் ஒரு பதவி கூட இல்லாமல் அவர்கள் எப்படி இருப்பார்கள்.. பிறகு எப்படித்தான் உங்களுக்காக ஓடி வருபவர்களை கெளரவப்படுத்துவீர்கள்?

கட்சி வேறு ஆட்சி வேறு என்று நீங்கள் முன்னெடுத்து வைக்கும் விஷயம் மேலோட்டமாக பார்த்தால் சிறப்பாகத்தான் இருக்கிறது.. பதவியேற்பு முடிந்தவுடன் ரகசிய காப்பு பிரமாணம் என்று ஒன்று உள்ளது.. அரசு சம்பந்தமான ரகசியங்களை வெளிநபருக்கு சொல்ல மாட்டேன் என்பதுதான் அதன் சாராம்சம்.. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த பிரமாணத்தை எடுத்து கொள்வார்கள்.. நீங்கள் கைகாட்டும் நபர்தான் முதல்வராக இருப்பார் என்றே வைத்து கொள்வோம்.. எப்படி முடிவு எடுப்பார்? எப்படி உங்களிடம் ஆலோசிக்க முடியும்? அவர் எப்படி சொல்வார்? அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களை அவர் உங்களிடம் சொல்ல முடியாது.. அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எப்படி அதை சரி செய்ய முடியும்?

ஒருவேளை அவர் உங்களிடம் விவாதித்தால் இது சட்டப்படி தவறும்கூட.. சட்டத்தில் அதற்கு இடமும் இல்லை.. எப்படி பார்த்தாலும் உங்களுக்கு பெயர் நிழல்தான்.. தவறு செய்தால் உங்களால் அவரை எப்படி கண்டிக்க முடியும்? எல்லோருமே ஆட்சியின் பின்னால்தான் போவார்கள், அதிகாரம் எங்கேயோ அங்கேதான் போவார்கள். நீங்கள் ஒருவேளை சோனியா காந்தி போல ஆக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்.. மன்மோகன் சிங்குக்கு கிடைத்த கெட்ட பெயர்தானே உங்களது முதல்வருக்கும் கிடைக்கும்.. "பொம்மை முதல்வர்" என்றுதானே கிண்டலடிப்பார்கள்.

நீங்கள் மனதார உண்மையை உணர வேண்டிய நேரம் இது.. தமிழக மக்கள் உண்மையில் எப்போதோ புரட்சியை ஆரம்பித்து விட்டார்கள்.. எழுச்சியுடன்தான் இருக்கிறார்கள்.. டாஸ்மாக்குக்கு எதிராக பெண்களின் கொதிப்பும் வேதனையும் ஒரு பேரெழுச்சிதான்.. அப்படிப்பட்ட பெண்களை தடியால் அடித்து கன்னத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஓங்கி அறைந்தாரே.. அங்கே நீங்கள் பொங்கி கொதித்தெழுந்து வந்திருக்க வேண்டும்.. அதுதான் தலைவனுக்கு அழகு.. நீங்கள் செய்தீர்களா ரஜினி சார்? தூத்துக்குடியில் நடந்ததை சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக சொன்னீர்கள்.. நெடுவாசலுக்காக நீங்கள் ஒரு டிவீட் கூட போடலையே சார்.. என்ன செய்தீர்கள் காவிரி டெல்டாவின் வளம் சூறையாடப்பட்டபோது.. எதுவுமே பேசலையே!

முல்லை பெரியாறுக்காக என்ன செய்தீர்கள்.. காவிரியில் நீர் தர மாட்டேன் என்று சொத்துக்களை எரித்தார்களே.. கூட்டம் கூட்டமாக பஸ்களை தீவைத்துக் கொளுத்தினார்களே.. என்னதான் செய்தீர்கள் சார்.. சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடிய விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினார்களே.. ஒரு வயதான பெண்.. அவருக்கும் கிட்டத்தட்ட உங்க வயதுதான் சார் இருக்கும்.. கைது செய்யப்பட்டாளே.. அந்த மூதாட்டியை பார்த்து கூடவா சார் உங்களுக்கு எழுச்சி வரலை?

தமிழக மக்கள் எப்பவுமே எழுச்சியோடும், விழிப்புணர்வோடும் இருப்பவர்கள் சார்.. அவர்களுக்கு யாரும் சொல்லி கொடுத்து எதுவும் வர வேண்டிய அவசியமே இல்லை.. நீங்கள்தான் ஏதோ ஒரு உலகத்தில் அமர்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. முதலில் தரைக்கு வாங்க சார்.. தெருவுக்கு வாங்க (பேட்டி கொடுப்பதற்கு அல்ல).. மக்களை சந்திக்க.. பிறகு பாருங்க சார்.. தமிழ் மக்கள் எப்படிப்பட்டவர்கள்னு உங்களுக்கே தெரியும். அரசியலுக்கும் உருப்படியாக வர மாட்டேன் என்று சொல்கிறீர்கள்.. சரி சமூக ரீதியாக ஏதாவது செய்வீர்கள் என்று பார்த்தால் அதையும் செய்யவில்லை.. செய்யும் மக்கள் பக்கமும் நிற்க மாட்டேன் என்கிறீர்கள்.. என்னதான் திட்டம் சார் உங்களுக்கு?

ஆண்டவன் சொல்றதெல்லாம் பிறகு இருக்கட்டும்.. முதலில் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட யோசிங்க சார்.. முதலில் உங்கள் கட்சிக்கென தெளிவான கொள்கையை வரையறுங்கள். அதை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். மாற்று அரசியல், பொருளாதார கொள்கைகளை முன் வையுங்கள்... இதெல்லாம் செய்தால்தான், "தலைவர்" என்று உங்களை அழைப்பதற்கு நீங்கள் செய்யும் நியாயமாக இருக்கும். அதை விட்டு விட்டு மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்காதீர்கள்.. மக்கள் "மூன்று முகம்" அலெக்ஸ் பாண்டியன் மாதிரி.. எந்த பக்கம் தொட்டாலும் பத்திக்கும்.. ஸோ, நீங்க கவனமாவே இருங்க!

Recommended Video

    ரஜினியின் ஒரே பேட்டி... 8 விதமான ஏமாற்றங்கள்

    இப்படிக்கு உங்களின் தீவிர ரசிகன்!!

    English summary
    rajinikanth politics: fan's open letter to super star rajinikanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X