• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தந்தையர் தினம் 2020 ஆரிரோ ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்று தந்தையின் அன்பு தாலாட்டில் வளர்ந்தவள் நான். பெண்கள் தம் வாழ்வில் சந்திக்கும் முதல் ஆண் தந்தை தான். அவர் தான் பிள்ளைகளுக்கு உற்ற தோழரும் கூட. மனைவி பேச்சைக் கேட்காத கணவன்மார்கள் இருக்கின்றனர். ஆனால் மகள் பேச்சைக் கேட்காத தந்தையே இவ்வுலகில் இல்லை எனக் கூற முடியும்.

தந்தையின் அன்பு எளிதில் வெளிப்படாது. என் தந்தையும் அப்படித்தான். கணக்கு ஆசிரியராக அரசுப்பள்ளியில் பணிபுரிந்தார். ஆனால் அவர் ஒரு சிறந்த விவசாயி. தோளுக்கு மேல் தன் பிள்ளையைத் தூக்கி வைத்து எனக்கு உலகத்தைக் காட்டியவர். எங்களுடைய பலம் அவர் தான். வாழ்வில் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போரிட எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர். சிறு வயதில் சைக்கிளில் அவரோடு பயணித்த நாட்கள் இனிமையானவை. பாசம் கலந்த கண்டிப்பு இருக்கும்.

fathers day 2020 father is the first hero for every daughter

கணக்குப் போடுவதில் வல்லவர். அதிகாலையில் எழுந்து கிராமத்தில் தன் வயலுக்குச் சென்று விட்டு ஆசிரியப் பணிக்குச் சென்று மாலையும் விவசாயம் பிறகு வீடு என பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருப்பார். ஆறு பெண்களுக்கு நடுவில் ஒரு ஆண் பிள்ளை என் தந்தை. சிறுவயதிலேயே அன்னையை இழந்தவர். ஆனால் தம்பி பாசத்தில் அவரை மிஞ்சுவது கடினம். அவருடன் பேசிக்கொண்டே சைக்கிளில் ஊர் சுற்றும் அனுபவமே தனி தான்.

புதிதாக இருசக்கர வாகனம் வாங்கியபோது என்னை வண்டியில் அழைத்துச் சென்ற போது ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். என் தந்தை அதனால் மிகவும் வருந்தினார். பள்ளிக்குச் செல்லும் போதும் அவரோடு பைக் பயணம் தான். மதிய உணவு வேளையில் தாயைப் போலப் பார்த்து பார்த்து ஊட்டி விடுவார். சாப்பிட்டுவிட்டு அவரைச் சாப்பிட விடாமல் அவர் காலில் படுத்து பலநாள் உறங்கியிருக்கிறேன். கயிற்றுக்கட்டிலில் தந்தையோடு தூங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா. மாட்டுவண்டியில் தந்தை ஓட்ட நீங்கள் அதில் பயணம் செய்தததுண்டா. அடடா அந்த அனுபவத்தை நினைத்தால் உள்ளம் பூரிக்கிறது.

வளர்ந்தபிறகு என்னுடைய சிறந்த நண்பன் என் தந்தை தான். என் தந்தை என்னையும் என் தம்பியையும் சுமார் ஆறு ஆண்டுகள் கல்லூரிக்கு கொண்டுவிட்டு அழைத்து வருவார். எங்கள் ஊரே இதைப் பார்த்து அதிசயிக்கும். கஷ்டநஷ்டங்களையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். எல்லா வீட்டையும் போல எங்கள் வீட்டிலும் அப்பா மகன் சண்டையுண்டு. ஆனால் என் தந்தையின் பரிவையும் அவன் புரிந்து கொண்டான். தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் எங்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.

என் தந்தைக்கு நான் என்றால் உயிர். என் திருமணத்திற்கு முதல் நாள் அவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது என்றால் பாருங்கள் தந்தையின் அன்பை. என் தம்பி படித்து மூன்று மாதங்கள் வேலைக்காக அலைந்தபோது கவலைப்படாதே நிச்சயம் வேலை கிடைக்கும் ஆனால் முயற்சியை மட்டும் கைவிடாதே என்றார். அவர் வாக்கும் பலித்தது ஆம் என் தம்பி இன்று வங்கியில் வேலை செய்கிறான்.

என்னுடைய நிழல் என்று கூட சொல்லலாம். பெண் பிள்ளைகளை வளர்ப்பது கடினம் என்ற இந்தக் காலத்தில் எனக்கு அரணாகவும் நிழலாகவும் நின்றவர். அவர் எங்கள் ஆருயிர் தோழனும் கூட. என் மகள் பிறந்து நாற்பது நாளில் நவம்பர் 2015 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். பேத்தி என்றால் அவருக்கு உயிர். அவளைக் கொஞ்சும் போது குழந்தையாக மாறி விடுவார்.

தந்தையாக இருப்பது எளிதல்ல. எல்லோருக்கும் அவங்க அப்பா ஹீரோ தான். நான் உங்கள் எல்லோரிடமும் கேட்பது ஒன்று தான். அப்பா இருக்கும் போதே அவர்களிடம் பேசி விடுங்கள். அவர்கள் அழைத்தால் உடனே பேசி விடுங்கள். இல்லையெனறால் நீங்கள் பேசவேண்டும் என்று நினைத்தாலும் பேச முடியாது. தந்தை என்பவன் குடும்பத்தின் ஆணிவேர். அவர் இல்லையேல் குடும்பமே இல்லை. தந்தையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்காக இழந்தது அதிகம்.

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

English summary
Father's Day 2020: Father is the first hero for every daughter, says our reader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X