• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சட்டசபையில் பெண் சபாநாயகர்...நாம் தமிழர் அமைச்சரவையில் பெண்களுக்கு 50% இடம் - சீமான் நம்பிக்கை

|

சென்னை: இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 % பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம். நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநிலச் சட்டசபையின் அவைத்தலைவராக ஒரு பெண் எனப் பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்குக் கனிந்து வருகிறது என்று சீமான் நம்பிக்கையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு சீமான் எழுதியுள்ள கடிதத்தில்; என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது.

மகேந்திரகிரியில் ஆக்சிஜன் உற்பத்தி... வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் இஸ்ரோவிடம் கேட்கும் கேரளா மகேந்திரகிரியில் ஆக்சிஜன் உற்பத்தி... வாரந்தோறும் 10 மெட்ரிக் டன் இஸ்ரோவிடம் கேட்கும் கேரளா

கடுமையான உங்களது உழைப்பு மாபெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது. வியர்வை வடிந்த உங்களது முகங்கள் வெற்றிகளுக்கான புத்தொளி வீசுகிற ஒரு விடியலின் அடையாளங்களாய் மாறி இருக்கின்றன. பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து, தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக, நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காகக் கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண்போகாது.

புரட்சி வாழ்த்துக்கள்

புரட்சி வாழ்த்துக்கள்

"எப்போதும் வெற்றிக்கான அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது" என்கிறார் பேரறிஞர் வால்டேர். எதனாலும் ஒப்பிட முடியாத ஈடுஇணையற்ற உழைப்பினை வழங்கி நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அரசியல் அமைப்பினையும், அதன் வெற்றி சின்னமான விவசாயி சின்னத்தையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்து, வாக்குகள் சேகரித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்நேரத்தில் உள்ளத்தின் நெகிழ்ச்சியோடு என் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

50 சதவிகித பெண் வேட்பாளர்கள்

50 சதவிகித பெண் வேட்பாளர்கள்

அன்பு உறவுகளே.. யாரும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களை இத்தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம். இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 % பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம்.

பெண் சபாநாயகர்

பெண் சபாநாயகர்

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்குக் காட்ட நாளை நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்களுக்கு இடம், மாநிலச் சட்டமன்றத்தின் அவைத்தலைவராக ஒரு பெண் எனப் பல கனவுகளை நாம் நிறைவேற்ற போகின்ற காலம் நமக்குக் கனிந்து வருகிறது.

எளிய சமூக மக்களும் போட்டி

எளிய சமூக மக்களும் போட்டி

பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள், தமிழர் நிலத்தில் காலம் காலமாய்ப் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனப் பல முத்திரைகளை நாம் இந்தத் தேர்தலில் பதித்திருக்கிறோம்.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

சமரசம் இல்லாத நமது போர்க்குணம் பல இலட்சக்கணக்கான எளிய வாக்காளர்களின் வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. வாக்குக்குக் காசு கொடுக்காமல் 60 ஆண்டுக் கால அரசியல் சீரழிவை பற்றிப் பேசி, மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய தேர்தல் பணிகள் தமிழ் தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. சாதி-மத உணர்ச்சியினால் தமிழர் என்கின்ற தேசிய இனம் காலம்காலமாக வீழ்த்தப்பட்ட இனமாக, அடிமை இனமாக மாறிப்போன வரலாற்றை ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவிலும் இந்தத் தேர்தல் பரப்புரை வாயிலாக நாம் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கிறோம்.

நேர நெருக்கடி

நேர நெருக்கடி

வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இப்பூவுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்குமானது எங்களது அரசியல், என்பதனை உணர்த்த நமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சூழலியல் சார்ந்த கருத்துக்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பரப்புரைகளாக மாற்றினோம். குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், கிடைத்த நெருக்கடியான நேரத்தில் பெரும்பான்மையான தொகுதிகளுக்குப் பயணம் செய்து, எனது தம்பி தங்கைகளுக்கு, எனது உடன்பிறந்தார்களுக்கு வாக்குகள் சேகரிக்கிற பெரும் வாய்ப்பினை இந்தத் தேர்தல் வழங்கியது. நேர நெருக்கடி காரணமாக, நோய்தொற்று காலத்தின் கட்டுப்பாடுகள் காரணமாகச் சில தொகுதிகளுக்குப் போக முடியவில்லையே என்கிற பெரும் வலி எனக்குள் இருந்தாலும், எதையும் எதிர்பார்க்காத உங்கள் அனைவரின் கடுமையான உழைப்பும் என்னை நெகிழ வைத்தது.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகாலக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு எதிராக எளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. அப்பழுக்கற்ற உங்கள் வியர்வையினால் விளைந்தவை. நம் மொழி காக்க; நம் இனம் காக்க; நம் மண் காக்க; நம் மானம் காக்க; இன்னுயிர் தந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று நம்மை ஒவ்வொரு நொடியும் வழி நடத்தியது. கடுமையாக உழைத்து, கம்பீரமாக இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

படித்தவர்கள் வாக்கு

படித்தவர்கள் வாக்கு

நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி. அந்த நம்பிக்கை தருகிற பலத்தோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்று நமது இனமான கடமையைப் பூர்த்திச் செய்வோம்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு குறித்த நேரத்திற்குச் சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளைக் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை ராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டுமென இந்தச் சமயத்தில் வலியுறுத்துகிறேன். நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனைக் கண்டிட, முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும் என உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கையாக நில்லுங்கள்

நம்பிக்கையாக நில்லுங்கள்

கடுமையான நோய்த்தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு-வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து, கிருமி போக்கிகளைப் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படும்படி கோருகிறேன். நம்பிக்கையோடு நில்லுங்கள்! நாம் தமிழர் என கம்பீரமாகச் சொல்லுங்கள். புதியதோர் தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். உறுதியாக நாம் வெல்வோம்! நாளை நாம் பெறும் வெற்றியால் அதை உலகிற்குச் சொல்வோம் என்று சீமான் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

English summary
NTK leader Seeman is confident that tomorrow is the time for us to fulfill our many dreams of having 50 per cent women in the cabinet of the ruling Tamil Party and a woman as the Speaker of the State Assembly. For the first time in the history of Indian electoral politics, we have set a record of fielding 50% women candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X