வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்.. தமிமுன்அன்சாரி வைத்த கோரிக்கை.. பதாகை ஏந்திய சினிமா இயக்குநர்கள்
சென்னை: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி முன்னெடுத்துள்ள இணைய வழி போராட்டத்திற்கு சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வெளிநாடுகளில் வேலையிழந்த தமிழர்களை தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் என பதாகை ஏந்தினர்.
இந்தப் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ஒருங்கிணைத்து வருகிறார்.
10-ம் வகுப்பு தேர்வு ரத்து- எடப்பாடியார் அறிவிப்புக்கு செம வரவேற்பு- ஆன்லைன் வகுப்புக்கு தடை வரும்?

வேலையிழப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் வேலையை இழந்து தாயகம் திரும்புவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் அவர்களை அழைத்து வருவதற்காக இயக்கப்படும் மீட்பு விமானங்கள் தமிழகத்திற்கு அதிகளவில் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக லண்டன், சிங்கப்பூர், மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இணையவழிப் போராட்டம்
இந்நிலையில் உலகம் முழுவதும் வேலையிழந்து, வருமானமின்றி, தாயகம் திரும்ப தயாராக உள்ள தமிழர்களை மீட்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடந்த 4 நாட்களாக இணைய வழி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் அவர் நடத்தி வரும் போராட்டத்திற்கு இந்திய கம்யூ.மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து, வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்கக்கோரி பதாகை ஏந்தி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

நடிகர்கள்
அந்த வகையில் சினிமா இயக்குநர்கள் ஜனநாதன், விக்ரமன், கவுதமன், மற்றும் நடிகர்கள் சத்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோரும் தமிமுன் அன்சாரியின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி குரல் கொடுத்துள்ளனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை அரசு தாங்கிப்பிடிக்கக்கோரி; தாம் பதாகையை தாங்கிப்பிடிப்பதாக நடிகர் டி.ஆர்.ராஜேந்தர் பஞ்ச் வைத்துள்ளார்.

சந்திக்க முயற்சி
பெங்களூர், கொச்சின், ஹைதராபாத், போன்ற நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவு மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல், தமிழகத்திற்கு இயக்கக்கோரி முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முயற்சி செய்து வருகிறார் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி.