சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முட்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி... அழியாத கோலமிட்ட.. மகேந்திரனை பறித்த 2019!

டைரக்டர் மகேந்திரனின் மறைவு மறக்க முடியாத பேரிழப்பாகும்

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்வியல் சிக்கல்களையும், உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலைமேதை டைரக்டர் மகேந்திரனை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.. எத்தனையோ இழப்புகளை திரையுலகம் சந்தித்தாலும்.. இந்த வருடம் மகேந்திரனின் மறைவு இன்னமும் நம்மால் ஜீரணித்து கொள்ள முடியாத ஒன்றாகும்!!

டைரக்டர் மகேந்திரனை தவிர்த்துவிட்டு தமிழ் திரையின் தரமான இயக்குனர் பட்டியலை நாம் தயாரிக்க முடியாது. அழுத்தமான கதையம்சமும்.. நேர்த்தியான படைப்புத் திறனும்.. எளிமையாக புரிய வைக்கும் ஆற்றலும் நிறைந்தவர் மகேந்திரன்.

இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை கலாபூர்வமானவை மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவை. எம்ஜிஆரின் உதவியால் டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த மகேந்திரன் சிறிது காலம் பத்திரிகையாளராகவும் இருந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

இதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை! இதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை!

முள்ளும் - மலரும்

முள்ளும் - மலரும்

இவரை முழுமையான ஒரு இயக்குனராக அறிமுகம் செய்த படம் "முள்ளும் மலரும்".. இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. முற்றிலும் புதிய கோணத்தில் ரஜினி, ஷோபாவின் இயல்பு, இனிமையான ராஜாவின் இசை, பாலுமகேந்திராவின் காமிரா.. போன்றவை முன்னணி கதாபாத்திரமாய் சிறப்பாய் நடித்தது.

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள்

இதையடுத்து உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுக்கள், நண்டு, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்றவை முக்கியமானவை. ஆர்ப்பாட்டமோ, அமர்க்களமோ இல்லாமல் தெளிந்த நீரோடை போல எளிமையான காட்சிகளாய் மனதில் சம்மணம் போட்டு உட்காரும் அமைதியான ட்ரீட்மென்ட்தான், மகேந்திரனின் தனி சிறப்பு ஆகும்.

உணர்வுகள்

உணர்வுகள்

திரைப்படம் என்பது பிரதானமான கண்காட்சி சாதனமாகும்... அங்கு காதுகளைக் காட்டிலும் கண்களுக்குத்தான் வேலை அதிகம் என்பதை துல்லியமாக புரிந்து கொண்டவர் மகேந்திரன். இவரது படத்தின் மொத்த வசனங்களையும் எட்டாக மடித்து சட்டைப் பையில் வைத்து கொள்ளலாம்... ஆனாலும் உள்மனது என்னமோ பாரமாகவே இருக்கும்... அதன் உணர்வுகள் சில காட்சிகளின் மூலம் உறுத்தும்!

ஷோபா

ஷோபா

நகைச்சுவை என்ற பெயரில் அருவருப்பான காட்சிகளோ, டபுள் மீனிங் வசனமோ இவரது படத்தில் இடம்பெற்றதில்லை என்பது கவனத்திற்குரிய விஷயமாகும். இவரது கதாநாயகிகள் ஷோபா, அஸ்வினி, சுகாசினி போன்றோர் கண்ணியம் மிகுந்தே - அதே நேரத்தில் நடைமுறை சமுதாயத்தின் பிரிக்க முடியாத நிஜங்களின் நகல்களாக ஒளிர்ந்தார்கள். இதன் மூலம் பெண்களுக்கு மகேந்திரன் அளித்த மதிப்பும் மரியாதையும் மகத்தானது... மற்ற ஆண்களுக்கும் இது எடுத்துக்காட்டானது!!

பூட்டாத பூட்டுக்கள்

பூட்டாத பூட்டுக்கள்

உதாரணத்திற்கு, மகேந்திரனின் புதுமையான படம் என்பதைவிட, புரட்சிகரமான படம் என்று சொன்னால் அது "பூட்டாத பூட்டுக்கள்"தான். இந்த சமுதாயத்தில் எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் அது ரகசியமாக செய்யப்படுமானால் அது நியாயமாகி விடுகிறது. ஆனால் சிறிய தவறாக இருந்தாலும் சரி.. அது பகிரங்கமாக இழைக்கப்படுமானால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடுகிறது என்பது யதார்த்த உண்மை! அவ்வாறு மன்னிக்க முடியாத குற்றத்தை வீட்டை விட்டு ஓடிப்போய், பகிரங்கமாக செய்த மனைவி.. மனம் வருந்தி திருந்திய பிறகு பெருந்தன்மையோடு ஏற்று கொள்ளும் இப்படத்தின் கணவனின் பாத்திரம் அற்புதமானது. ஏனென்றால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான உறவை தீர்மானிப்பது வெறும் செக்ஸ் மட்டுமே கிடையாது என்பதை இப்படத்தில் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்லி இருப்பார் மகேந்திரன்.

நெஞ்சத்தை கிள்ளாதே

நெஞ்சத்தை கிள்ளாதே

மற்றொரு படத்தை உதாரணமாக சொல்ல வேண்டுமானால் "நெஞ்சத்தை கிள்ளாதே" படத்தை கூறலாம். மனசு முழுவதையும் ஆக்கிரமித்து கொண்ட படம்தான் நெஞ்சத்தை கிள்ளாதே. சிற்பத்தை கல்லில்தான் செதுக்க முடியும் என்று யார் சொன்னது? வெறும் வெள்ளை துணியிலும் செதுக்கலாமே என்று இந்த படத்தில் நிரூபித்தார் மகேந்திரன்! தூரிகையில்லாமல்.. வண்ண வண்ண கலவைகள் இல்லாமல், கேமிரா என்ற மெஷினியே தூரிகையாக்கி, அற்புதமான பல வண்ண ஓவியத்தை இதில் படைத்து காட்டினார் மகேந்திரன். சுருக்கமாக சொன்னால், மனிதனின் துல்லியமான உணர்வைகூட நிராகரிக்காமல் அதையும் வெளிப்படுத்திய படம்தான் "நெஞ்சத்தை கிள்ளாதே"!

காலமானார்

காலமானார்

இவ்வளவையும் தந்த மகேந்திரன், திடீரென படங்கள் டைரக்ட் செய்வதை நிறுத்திவிட்டார். நாளுக்கு நாள் மலிந்து நலிந்து போன மசாலாத்தனங்களுக்கு கிடைத்த மவுசுகளை கண்டு ஒதுங்கியே இருந்துவிட்டார் போலும்.. நீண்ட இடைவெளிக்கு பிறகே ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டினார். எனினும், உடல்நலக்குறைவால், கடந்த ஏப்ரல் மாதம் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் மகேந்திரன்!

அழியாத கோலம்

அழியாத கோலம்

மிகக்குறைவான வசனங்கள், கண்கள் திகட்டி போகிற அளவுக்கு காமிரா ஜாலங்கள், உள்ளத்தை உருக்கும் ராஜாவின் தென்றலென இசை, படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் மகேந்திரனை என்றுமே நமக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்... மனதிற்குள் நீண்ட நாள் அசைபோடும் அளவிற்கு அற்புதமான படங்களை வழங்கி.. முள்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி... அழியாத கோலங்களை இட்டு சென்றவர்தான் டைரக்டர் மகேந்திரன்!

English summary
flashback 2019: one of the best tamil film director mahendran death and No one can fill mahendran's place
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X