கச்சத்தீவு.. திமுக வேடிக்கை பார்த்ததா? - இன்றைய விமர்சனங்களுக்கு அப்போது கருணாநிதி அளித்த பதில்..!
சென்னை : பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து பங்கேற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதற்கான தருணம் இது எனப் பேசினார்.
இதையடுத்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திமுக கூட்டணியில் இருக்கும்போதுதானே.. அப்போது ஏன் அமைதி காத்தீர்கள் என விமர்சித்து வருகின்றனர்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இந்நிலையில், இதேபோல மறைந்த ஜெயலலிதா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

கச்சத்தீவு விவகாரம்
கச்சத்தீவு விவகாரத்தில், இலங்கையும் இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டபோது அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதுகுறித்து பலமுறை பேசியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும்போதும், கச்சத்தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாகப் பேசினார்.

கருணாநிதி பதில்
ஜெயலலிதாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்போது அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, "1991ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன். தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்? இருந்தாலும் இப்போது அவர் கச்சத்தீவு பற்றியும், என்னைப் பற்றியும் பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன்.

திமுக எதிர்க்கவில்லையா?
1974-ம் ஆண்டிலேயே ஆகஸ்ட் 21-ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு பற்றி நான் முன்மொழிந்த தீர்மானத்தில் மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே தி.மு.க அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை.

விட்டுக் கொடுக்க முடியாது
மேலும் அந்தத் தீர்மானத்தில் நான் பேசும்போது, கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய அரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத்தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து தமிழக தி.மு.க. அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கச்சத்தீவு பிரச்சனையை முடிந்து விட்ட பிரச்சனையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டேன்.

திடீர் அறிவிப்பு
1974ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27-ஆம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை.

கண்டன போராட்டங்கள்
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு.க சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
பின்னர் ஒரு முறை செய்தியாளர்கள் கச்சத்தீவு பற்றி என்னைக் கேட்டபோது கூட, கச்சத்தீவை விட்டுக் கொடுக்கும்போது, தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அவர் சமாதானம் செய்து கச்சத்தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன. அந்த உரிமைகள் தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களை காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்குமான உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தன.

ஆளுநர் ஆட்சியில்
ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976-ல் நம்முடைய ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்சி தான் இருந்தது. ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது.
கச்சத்தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். எந்த அளவுக்கு கச்சத்தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.