சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலம் விசித்திரமானது.. நான்கே ஆண்டுகளில் மொத்தமாக மாறிப் போன திமுக - காங்கிரஸ் உறவு!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான இன்றைய உறவுக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்த உறவுக்கும் இடையிலான வித்தியாசம்.. மலைக்கும் மடுவுக்குமானது... ஒரு ரீவைண்ட் ஸ்டோரி.

2014 லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் தமிழகத்தில் சந்தித்தது மிகப் பெரிய அவமானம். யாருமில்லாத கட்சியாக தனித்து விடப்பட்டது காங்கிரஸ். கடைசி வரை திமுக கூட்டணியில் இணைய முயன்றும் முடியவில்லை. இதனால் பி.எஸ். ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரஸ் பரிதாபமாக 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு படு தோல்வியைத் தழுவியது.

மறுபக்கம் காங்கிரஸை உதறி விட்டு சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிரடியாக தேர்தலை சந்தித்த திமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதேசமயம், 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மிரட்டியது.

காலம் விசித்திரமானது

காலம் விசித்திரமானது

காலம் எப்போதுமே விசித்திரமானது. அது நமக்கு தினசரி பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு ஞாபக மறதி இருக்கலாம். ஆனால் காலம் நமக்கு விட்டுச் சென்ற பாடத்தை மறக்க முடியாது. அப்படி ஒரு விசித்திரமான வரலாறு தான் இது.

ஜெ. காட்டிய அதிரடி

ஜெ. காட்டிய அதிரடி

2014 லோக்சபா தேர்தல். அதிமுக தேர்தலில் தனியாக போட்டியடும். கூட்டணி தேவையில்லை என்று அதிரடியாக அறிவித்து களம் குதித்தார் ஜெயலலிதா. சொன்னதோடு நிற்காமல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தார். புதுச்சேரிக்கும் வேட்பாளரை அறிவித்தார். அதை விட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராகவும் சொன்னது அதிமுக.

திமுக கொடுத்த பதிலடி

திமுக கொடுத்த பதிலடி

மறுபக்கம் திமுகவும் தன் பங்குக்கு ஒரு பதிலடியைக் கொடுத்தது. விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புதிய தமிழகம் ஆகியவற்றை கூட்டணியில் இணைத்து போட்டியிட்டது. திமுக 34 தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2, மற்றவர்களுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பாஜகவின் 3வது அணி

பாஜகவின் 3வது அணி

திமுக, அதிமுக இப்படி முடிவெடுத்த நிலையில் பாஜக ஒரு புதுக் கூட்டணியை உருவாக்கியது. அந்தக் கட்சி தலைமையில் மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, கொங்கு மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து குதூகலமாக போட்டியிட்டன. இதில் பாஜக, பாமக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. மற்றவை போண்டி ஆயின.

அந்தோ பரிதாப காங்கிரஸ்

அந்தோ பரிதாப காங்கிரஸ்

இப்படி ஆளாளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக் கொண்டு போய் விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் நடு ரோட்டில் அனாதரவாக விடப்பட்டது காங்கிரஸ். வேறு வழியே இல்லாமல் (சேருவதற்கு குட்டி கட்சி கூட கிடைக்கவில்லை) தனித்துப் போட்டியிட்டது.

தோல்வி அடைந்த முயற்சிகள்

தோல்வி அடைந்த முயற்சிகள்

திமுக கூட்டணியில் சேருவதற்கு காங்கிரஸ் மிகக் கடுமையாக முயன்றது. பல வழிகளிலும் திமுக தலைவர் கருணாநிதியை அவர்கள் நெருக்கிப் பார்த்தனர். ஆனால் கூட்டணிக்கான கதவை இறுக மூடி விட்டது திமுக. அதற்கான காரணம் - ஈழத்தில் நடந்த இனப்படுகொலை.

இனப்படுகொலைக்கு காரணம் காங்.

இனப்படுகொலைக்கு காரணம் காங்.

திமுக தலைமை காங்கிரஸை நிராகரிக்க முக்கியமான காரணம், ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு காங்கிரஸே காரணம் என்பதே. அந்தப் படுகொலையைத் தடுக்காமல் காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மக்களை சந்தித்தால் மக்கள் நம்மையும் நிராகரிப்பார்கள் என திமுக தலைமை கருதியது. இதனால்தான் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கவில்லை.

யாரும் தேவையில்லை - கருணாநிதி

யாரும் தேவையில்லை - கருணாநிதி

இதுதொடர்பாக கருணாநிதியிடம், தேசியக் கட்சியே இல்லாமல் கூட்டணி அமைத்துள்ளீர்களே. தேசியக் கட்சிகள் தேவையில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், எந்த தேசியக் கட்சியும் திமுகவுக்குத் தேவையில்லை. தேசியக் கட்சிகள் இல்லாதது பலவீனமல்ல என்று அதிரடியாக கூறினார். பிராந்தியக் கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்திக்கும் துணிவும், பலமும் திமுகவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

தலைகீழாக மாறிய சூழல்

தலைகீழாக மாறிய சூழல்

இந்த நான்கு வருட காலத்தில் காங்கிரஸ் தலைமை மாறி விட்டது. சோனியா போய் ராகுல் காந்தி வந்து விட்டார். கருணாநிதி மறைந்து விட்டார், மு.க.ஸ்டாலின் தலைவராகி விட்டார். ஜெயலலிதா மறைந்து விட்டார். அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. திமுகவும், காங்கிரஸும் பிரிக்க முடியாத கூட்டாளிகள் என்ற நிலைக்குப் போய் விட்டனர். ஒரு படி மேலே போய் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பே வெளியிட்டு விட்டார்.

ஆனால் அந்த ஈழப் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ்தான் என்ற குற்றச்சாட்டு மட்டும் என்ன ஆனது என்று தெரியவில்லை.. இப்போது சொல்லுங்கள், காலம் விசித்திரமானதுதானே!

English summary
In 2014 Loksabha elections DMK abandoned Congress and contested the polls with local allies. In 2019 polls both the parties are all set to face the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X