சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்!

Google Oneindia Tamil News

சென்னை: டைட்டிலை படிச்சதும், ஷகிலா பட போஸ்டர் மாதிரி இருக்குதேன்னு நினைச்சி தம்ப்ரீரீ... குபீர்னு நெட்டுகுத்தா நிமிர்ந்து உட்காராதீங்க, அக்கடான்னு ஹாயா சாய்ஞ்சு உட்கார்ந்து படிங்க. ஏன்னா, மேட்டர் அப்படி.

ஆட்டோகிராஃப் படத்தில் சேரன், ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதேன்னு பாடிகிட்டே வாடகை சைக்கிளில் வலம் வருவாரே அந்த சீன் ஞாபகம் இருக்கா? எங்க சித்தப்பா, பெரியப்பா காலங்களில் இப்படி ஊருக்கு பத்து சேரன்கள் இருந்தார்கள்.

இன்று ஊர் மாறிவிட்டது, சித்தப்புகள் மாறிவிட்டார்கள், வாடகை சைக்கிள்களும் மாறிவிட்டன. இப்படி நம் அன்றாட வாழ்வில் நம்மோடு பின்னிப் பிணைந்திருந்த எத்தனையோ விஷயங்கள், கால ஓட்டத்தில் சத்தமில்லாமல் கழன்றுகொண்டன. அதையெல்லாம் கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தி ரீவைண்டு பண்ணி பார்க்கலாமா மக்கா...

வாலிபப் பசங்க

வாலிபப் பசங்க

ஒருகாலத்தில் வாலிப பசங்களின் மன்மத வாகனம் இந்த வாடகை சைக்கிள்தான். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றலாம். அதனால் அதற்கு Hour cycle என்றும் இன்னொரு பெயர் இருந்தது. இருக்கிற நாலு ஓட்டை சைக்கிளில் உயர்தர சைக்கிளாக தேடி அரைமணி நேர வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதையும் நாலு பேர் ஆளுக்கு கொஞ்ச நேரம் ஓட்டுவோம்.

உள்ளூர் பிசினஸ்மேன்கள்

உள்ளூர் பிசினஸ்மேன்கள்

அரைமணி நேர வாடகை அம்பது காசு. யாராவது ஒரு அண்ணன், சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டே, நாலு சைக்கிளை சைடில் வாடகைக்கு விட்டு, உள்ளூர் வியாபார காந்தமாக கலக்கிக் கொண்டிருப்பார். டீக்கடை, சலூன் கடைக்கு அடுத்தபடியாக அதிகம் அரசியல் பேசப்படும் இடம் இதுபோன்ற சைக்கிள் கடைகள்தான்.

ஹீரோக்களின் சைக்கிள்கள்

ஹீரோக்களின் சைக்கிள்கள்


80கள் வரை வந்த படங்களில் ஹீரோ தனது நண்பர்களுடன் சைக்கிளில் கல்லூரிக்கு போவது, யாராவது பத்து பேர் சைக்கிள் எடுத்துக்கொண்டு ஹீரோவை துரத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் நிறைய காணக் கிடைத்தன. எம்ஜிஆரும், சரோஜாதேவியும் ஒரு படத்தில் ஆளுக்கொரு சைக்கிளை மிதித்தபடி பாட்டு பாடிக் கொண்டே போவார்கள். அதெல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

டிசைன் டிசைன் மாடல்கள்

டிசைன் டிசைன் மாடல்கள்


பொங்கல், தீபாவளி மாதிரி விசேஷங்கள் வந்தால் சைக்கிளுக்கும் ஹாண்டில் பாரில் குஞ்சலம் கட்டுவது, சக்கரத்தில் உள்ள ஸ்போக்ஸ் கம்பிகளை மணிகளால் அலங்கரிப்பது என சைக்கிளை, ஃபேஷன் ஷோவுக்கு மாடலை ரெடி பண்றா மாதிரி தயார் செய்வார்கள். இப்படி எல்லாம் ஆஹா..ஓஹோவென்றிருந்த சைக்கிள்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக காணாமலே போய்விட்டன. அதை வாடகைக்கு விட்டு வந்த அண்ணன்களும் அப்படியே டெவெலப் ஆகி டூ வீலர் மெக்கானிக்குகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டார்கள்.

பழகிட்டு காணாமப் போயிருச்சே

பழகிட்டு காணாமப் போயிருச்சே

இதேபோல அடிக்கடி நம்மோடு ஒண்ணுமண்ணா பழகி, இப்போ காணாமல் போன இன்னொரு ஜீவன் நம்ம போஸ்ட் மேன். தபால்காரர் என்பவர் எங்களுக்கு எப்போதுமே ஆச்சர்யமான ஒரு மனிதர். எப்போ எதைக் கொண்டு வந்து தருவாருன்னே தெரியாது. மணியார்டர் தந்து மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவார்.. ஏதேனும் மரணச் செய்தி தாங்கிய தந்தியை தந்து வீட்டையே களேபரத்திலும் ஆழ்த்துவார். இப்போதெல்லாம் அமேசான் காரத் தம்பியும், ஸ்விக்கி ஆப் தம்பியும் தான் அடிக்கடி வீட்டுக்கு வருகிறார்கள். கூரியர் பாய்களின் கூட்டத்தில் காக்கி தபால்காரர்கள் காணாமலே போய்விட்டார்கள்.

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் தனது படங்களில், ஏதாவது பெரிய ஹோட்டலில் தங்கிவிட்டு, டெலிபோன் ஆபரேட்டரை கூப்பிட்டு யாரையாவது கனெக்ட் பண்ண சொல்லுவார். இப்படி பலரையும் பலரோடு கனெக்ட் செய்த அந்த கவுன் போட்ட டெலிபோன் ஆபரேட்டர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதேபோல பிசிஓ பூத் வைத்து பல கமலிகளின் காதலுக்கு தண்ணீர் வார்த்துக்கொண்டிருந்த மணிவண்ணன்களும், இந்த செல்போன் யுகத்தில் தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்கள்.

எல்லாமே போச்சு

எல்லாமே போச்சு

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரொம்ப செழிப்பாக இருந்த இன்டர்நெட் கஃபேக்களும், ஃப்ரீ டேட்டா வந்த பிறகு இழுத்து மூடப்பட்டு விட்டன. நான் கல்லூரி படிக்கும் காலங்களில் கல்லூரி விட்டதும், நேரே இந்த இன்டர்நெட் சென்டர்களுக்குதான் போவோம். அங்கு பெயர் தெரியாத யாருடனாவது, மை டியர் டயானா.... என்ற ரேஞ்சுக்கு கடலை போட்டு காசை கரியாக்கினோம். இதேபோல இளசுகளின் காசை அதிகமாக சுண்டி இழுத்த இன்னொரு இடம், 'பலான' படம் ஓடிய தியேட்டர்கள். ஒரு காலத்தில் தமிழ் திரை உலகம் டல்லடித்தபோது, சிறுநகர தியேட்டர்களில் பகல் ஆட்டத்திற்கு சாமி படங்களும், பாம்பு படங்களும் போடப்பட்டன. இவைதான் வீட்டில் இருந்த அம்மணிகளை தியேட்டருக்கு வரவைத்தன. சில ஆண்டுகளில் சூடுபிடிக்க ஆரம்பித்த சின்னத் திரை சீரியல்கள் இந்த பகல் காட்சியில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டன. அப்புறம் பல இடங்களில் பகல் காட்சி என்பது பலான காட்சி ஆகிவிட்டது.

பிட்டும் காணோம்

பிட்டும் காணோம்

சுற்றுவட்டாரத்திலேயே எந்த தியேட்டரில் 'பிட்டு' தரமாக இருக்கும் என்பது இளசுகள் வட்டாரம் முழுவதும் வாட்சப் இல்லாத காலத்திலேயே வைரலான தகவலாக இருந்தது. ஆனால் இன்று இதுபோன்ற தியேட்டர்கள் எல்லாம் ரைஸ் மில்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இன்றைய இளசுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமலே அவர்களுக்கு தேவையானது அவர்களின் செல்போனிலேயே கிடைக்கிறது. அந்த கால 'பிட்டு' இன்று 'கிளிப்' என்று பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

டைப்பிஸ்ட்டுகள் மாயம்

டைப்பிஸ்ட்டுகள் மாயம்

அப்போதெல்லாம் பெரும்பாலும் எல்லா அலுவலகத்திலும் டைப்பிஸ்ட் என்று ஒருத்தரோ பலரோ இருப்பார்கள். உயர் அதிகாரி என்றால் அவருக்கு ஒரு பி.ஏ, டைப்பிஸ்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த டைப்பிஸ்ட் வேலையை குறிவைக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக டைப்ரைட்டிங் சென்டர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தன. இரண்டு ஏ4 பேப்பரை கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு டைப்ரைட்டிங் கற்றுக்கொள்ள செல்வோம். ட்யூஷன் சென்டரைப் போல டைப்ரைட்டிங் சென்டர்களும் ரொம்பவே ரொமான்டிக்கான இடம்தான். நம்மை ஓரக் கண்ணால் பார்த்தபடி நம்மாளு, அந்த மிஷினில் பட படவென தன் வெண்பட்டு பிஞ்சு விரல்களால் டைப் அடிக்கும்போது, நம் இதயத்தின் ஆழம் வரை அந்த பட.. பட.. சத்தம் போய் சேரும் விந்தையை எப்படி வார்த்தைகளில் விவரிக்க முடியும். நம்ம நித்தி பாணியில் சொல்வதானால், மீ.. லுக்கிங் அட் மீ... டைப்பிங் டு மீ.. அபவுட் மீ... என்று போய்க்கொண்டே இருக்கும். ஹூம்... அதெல்லாம் ஒரு காலம். அந்த டைப்ரைட்டர்களும் இப்போது இல்லை, அவை மீது நர்த்தனம் ஆடிய அந்த அழகு விரல்களும் இப்போது இல்லை.

பட்டியல் நீளும்

பட்டியல் நீளும்

இப்படி காணாமல் போன வேலைகளை பட்டியலிட ஆரம்பித்தால் அது அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகும். இது ஏதோ கடந்த காலத்தில் மட்டும் நடந்தது, இனி நடக்காது என்று நினைத்துவிடாதீர்கள். டெக்னாலஜியின் வளர்ச்சி, பல வேலைகளை வருங்காலங்களில் இல்லாமல் ஆக்கிவிடும். டிரைவர் இல்லாமல் ஓடும் கார்கள் தற்போது பரீட்சித்து பார்க்கப்படுகின்றன. அவை முழு வெற்றி பெற்றுவிட்டால், டிரைவர் என்ற இனமே அழிந்துவிடும். மெஷினே மொழிபெயர்ப்பு பணியை செய்ய ஆரம்பித்திருக்கிறது. இது இன்னும் பக்காவாக செட் ஆகிவிட்டால், பத்திரிகை, டிவி, இணையதளங்களில் வேலை செய்யும் பலரின் வேலை காலியாகிவிடும். எனவே இப்போ நீங்க செய்கிற வேலை இன்னும் எத்தனை ஆண்டுகள் தாங்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதில் வருகின்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டால்தான் இனி வாழ முடியும். உஷாரா இருந்து பொழப்ப காப்பாத்திக்கங்க உறவுகளே.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

- கௌதம்

English summary
From rented cycles to Shakeela movies we cannot forget so many things in the past. Here is a round up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X