சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - தனி மனித இடைவெளி அவசியம் : தமிழக அரசு

கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்துலீர், திருப்பூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று கூடுதலாக உள்ளது. மேலும், நாளொன்றுக்கு 85,000 சோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 6,000 நபர்களை தாண்டியுள்ளது.

Get vaccinated to prevent the spread of corona - TN Government

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4,000க்கும் குறைவாக இருந்து, தற்போது மீண்டும் அதிகரித்து சுமார் 46000 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நாளொன்றுக்கு சராசரியாக 10க்கு மேல் பதிவாகி வருகிறது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் போக்கு சற்று கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இச்சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

தற்போது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவுவதற்கான காரணங்களான முகக்கவசமின்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணிகளை பொறுத்தவரை அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது ஆகியன முக்கிய காரணங்களாக தெரிய வந்துள்ளன. மேலும், வங்கிகள், பள்ளிகள், நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கூட்டாக சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இந்நோய் தொற்று காரணமாக நிலவும் சூழலை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில் குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களுக்கும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்விற்கு பின்பு, நோய்த் தொற்றின் விகிதத்தை குறைப்பதற்காக, கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்கினார்கள்.

பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும்,சோதனைகளை நாளொன்றுக்கு 90,000 பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சைதமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

நோய் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் வரை 8,92,682 முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் உள்ள 14,47,069 நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10.4.2021 அன்று 1,309 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாக படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக '108' அவசரகால ஊர்திகள் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.

கொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமிகொரோனா வேகமாக பரவுகிறது... சமூக பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் பழனிச்சாமி

கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும். 10.4.2021 வரை 16,37,245 விதி மீறல்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூபாய் 17,92,56,700/- அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழாக்களில் கோவிட் நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றப்படுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 11.04.21 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37,80,070 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் 11.4.2021 அன்று வரை 54,85,720 தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பெற்று, நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

மேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

எனவே, அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, கொரோனா தொற்று நீங்கிட, சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.

நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Everyone who qualifies for the Govt vaccination should be vaccinated. The Tamil Nadu government has announced that it needs to reassure the public about the vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X