சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆழ்மனதில் இருக்கும் காளகேயா.. அடிக்கடி வெளியே வா.. நிம்மதி தா!

By Gowtham
Google Oneindia Tamil News

சென்னை: நிம்டெ கட்ட க்ளெக்கு கொரடா ஜர்ரா உய்.. என பாகுபலியில் காளகேயத் தலைவன் நாக்கைத் தட்டிக் கொண்டு பேசியது நினைவில் இருக்கிறதா? அந்த காளகேய பாஷைதான் நம் கவலைகளுக்கான அருமருந்து என்றால் கேட்க அதிசயமாகத்தான் இருக்கும்.

பங்குச்சந்தை பாதாளத்தில் விழுந்துடுச்சேன்னு பெரியவங்களுக்கு கவலை, 5வது கிளாசுக்கே பப்ளிக் எக்சாம் வந்திருச்சேன்னு குட்டீசுக்கு கவலை. இப்படி ஆளுக்கு ஒரு கவலை, துயரம், துன்பம், துக்கம். அப்புறம் நிம்மதி எப்படி வரும் நம்ம பக்கம்.

Gibberish meditation method become popular

ஆசையே துன்பத்துக்கு காரணம், ஆசையைவிடுன்னு புத்தர் சிம்பிளா சொல்லிட்டு போயிட்டாரு. ஆனால் இதெல்லாம் நடக்குற கதையா பாஸ்னு நீங்க கேட்கலாம். இதைப்படிச்சா ஏதோ நிம்மதிக்கு வழி சொல்லுவான் போல இருக்கேன்னு லேசா ஆசை எட்டிப்பார்க்குறதுனாலதான் நீங்க வேலை வெட்டியை விட்டுட்டு இதைப் படிக்கிறீங்க. இப்படி வித்தியாசமா ரூட்டு பிடிச்சு எழுதினாதான் ஆபிஸ்ல இன்க்ரிமெண்ட் போடுவாங்கன்ற ஆசையில தான் நான் இதை எழுதிகிட்டு இருக்கேன். ஆக, ஆசையை நாம விடவே முடியாது. அதனால நிம்மதிக்கு வேற என்ன வழின்னு பார்ப்போம்.

மன இறுக்கத்தை போக்க ஆயிரம் வழிகள் சொல்றாங்க. அதில் முதன்மையானது தியானம். ஆனால் நம்மாள கண்ணை மூடிகிட்டு சும்மா எல்லாம் உட்கார முடியாதுன்னு சொல்றவங்களுக்காகவே ஒரு தியானம் இருக்கு. அதுக்கு பேர் ஜிப்ரிஷ் தியானம். இதை எப்படி செய்யனும்னு கேட்டீங்கன்னா அசந்து போயிடுவீங்க. அதாவது, ஆரம்ப நாட்களில் ஒரு இடத்தில தனியா வந்து கண்ணை மூடிக்கணும். அப்புறம் சத்தமா வாய்க்கு வந்தபடி கத்தணும்.

அட ஆமாங்க, நிஜமா வாய்க்கு வந்ததை கத்தணும். நீங்க கத்துறதுக்கு எந்த அர்த்தமும் இருக்கத் தேவையில்லை. அதாவது, ஆ.. இ.. ஊ.. ஏய்...டாய்னு கத்திகிட்டே இருக்கணும். முடிஞ்சா நம்ம காளகேயர்கள் மாதிரி, நிம்ர கிஸ்ட தும்ட குய்யா மைதா பையான்னு வாக்கியமா கூட கத்தலாம். ஆனா யோசிச்சு பேசக் கூடாது, மனசுல தோன்ற சத்தங்களை பேசனும். இதுதான் ரூல்ஸ். அதேபோல அப்படி கத்தும்போது உடம்பை ரிலாக்சா விட்டுரணும். நம்ம லொள்ளு சபா மனோகர் மாதிரி... கையை சுத்தி சுத்தி கத்தலாம்.. இல்லேன்னா சிம்பு மாதிரி விரல்ல விளையாடிக்கிட்டே கத்தலாம்.. ஜாலியா ஆடிக்கிட்டே கத்தலாம்.. ஓடிக்கிட்டே கத்தலாம். என்ன வேணா செய்யலாம். ஆனால் மூளையை கேட்டு செய்யக் கூடாது. மனசு சொல்றதை செய்யணும். இப்படி சில நிமிடங்கள் தொடர்ச்சியா செஞ்சிட்டு அப்படியே அமைதி படுத்துடுங்க, நம்ம ஷின்சான் சொல்ற மாதிரி அமைதி.. அமைதி... அமைதியோ அமைதி என்று அப்படியே ரிலாக்ஸ் ஆகிடுவீங்கன்னு சொல்றாங்க.

ஜோதா அக்பர் படத்தில் பெரிய பெரிய நீள் தொப்பிகளை போட்டுக்கொண்டு, பெரிய பாவாடை போன்ற உடை காற்றில் சுழல அப்படியே சூஃபி ஞானிகள் கண்ணை மூடிக் கொண்டு சுற்றிச் சுழல்வார்களே அதுகூட ஒரு வகை ஜிப்ரிஷ் தான். ஜாப்பர் என்ற சூஃபி ஞானிதான் இந்த தியானத்தை கண்டுபிடிச்சாராம். அதனால் தான் இதுக்கு ஜிப்ரிஷ் தியானம்னு பேரு வந்திச்சாம். அவர் இப்படிதான் தியானம் செய்வாராம். தன்னிடம் வரும் ஏராளமான மக்களுக்கு இதை கத்துக்கொடுத்து நிம்மதியோட வாழ வழி காண்பிச்சிருக்காரு. இப்படி செய்யும்போது நம் மனதிற்குள் இருக்கும் குப்பைகள் சத்தங்களாக வெளியில் வந்துவிடும், மனம் சுத்தமாகிவிடும் என்கிறார்கள். வாந்தி எடுத்தால், வயிறு லேசாவதைப் போன்றதுதான் இது.

சமூக கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்களால் நம்மால் நினைத்தபடி எல்லாம் வாழ்ந்துவிட முடிவதில்லை. நினைத்தபடி எல்லாம் வாழ முடிவதால்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் இருக்கின்றன. வயது ஆக ஆக, மூளை நம்மை கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது. சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை கூட அது அனுமதிப்பதில்லை. அதெல்லாம் மனதில் அழுத்தங்களாக சேர்ந்துகொண்டே போகும். எத்தனை பெரியவர்கள் கையை, காலை ஆட்டி நாட்டியமாடுகிறார்கள், குரல் கேவலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜாலியாக நண்பர்கள் மத்தியில் பாடுகிறார்கள். ஆசை இருந்தாலும், செய்ய முடிவதில்லை. ஆனால் இதெல்லாம் மனதிற்குள் அப்படியே இருக்கும். அதனால்தான் சிலர் குடித்தால் குழந்தையாகிவிடுகிறார்கள்.

இவை தவிர இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை தினமும் மனதிற்குள் போட்டு நிரப்பிக்கொண்டே இருக்கிறோம். அது ஒரு மெகா குப்பைத் தொட்டியைப் போல நிரம்பிக்கொண்டே இருக்கிறது. அதன் அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருபோதும் நாம் அந்த குப்பைத் தொட்டியை காலி செய்ய முயற்சிப்பதில்லை. அப்படி ஒரு முயற்சிதான் ஜிப்ரிஷ். நீங்கள் நண்பர்கள் குழுவாக சேர்ந்தும் இந்த தியானத்தை முயற்சி செய்யலாம். ஜிப்ரிஷிலேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது, பாட்டு பாடுவது என விதவிதமாக இதை முயற்சித்து பார்க்கலாம்.

புனாவில் படிக்கும் பல் மருத்துவ மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அடிக்கடி ஜிப்ரிஷ் செய்ய வைத்திருக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பிறகு அவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் முன்பு எடுத்ததை விட கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரிய வந்தது. அதேபோல அவர்களின் உடல் ஆரோக்கியமும் கணிசமாக மேம்பட்டிருக்கிறது. பதற்றம், மன இறுக்கம் போன்ற உணர்வுகள் தளர்ந்து, ஓய்வு நிலையில் இருந்ததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை எல்லாம் கேட்ட போது, எனக்கும் உடனே ஜிப்ரிஷ் செய்ய ஆரம்பித்துவிட வேண்டும் என நாக்கு நமநமக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் சென்னை நகரில் இப்படி கண்ணை மூடிக்கொண்டு கத்தினால் என்ன ஆகும். பக்கத்துவீட்டுக்காரன் நம்மை பைத்தியம் என்று நினைத்துவிட மாட்டானா என்ற பயமும் வந்தது. அதனால் சொந்த கிராமத்திற்கு போகும்போது இதை முயற்சித்து பார்ப்போம் என மனதை அடக்கிக் கொண்டேன்.

Gibberish meditation method become popular

வார இறுதியில் ஊருக்கு போன போது ஜிப்ரிஷ் தியானத்தை செய்து அந்த அதிஅற்புத அமைதியை அனுபவித்துவிட வேண்டும் என மனம் பரபரத்தது. காலையில் எழுந்தவுடன் விறுவிறுவென கிளம்பி ஊருக்கு வெளியில் வயல்வெளிக்கு சென்றுவிட்டேன். அங்கு சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு, ஆள் அரவம் இல்லாத இடமாக பார்த்து கத்துவோம் என்று சற்று உள்நுழைந்து போனேன். மனதில் தேக்கி வைத்திருந்த ஆர்வம் அணையை உடைத்துக் கொண்டு பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பித்தேன் ஜிப்ரிஷ்-ஐ. நான்ஸ்டாப்பாக ஒரு பத்து நிமிஷம் இப்படி மனதின் குப்பைகளை சத்தங்களாக சத்தம் போட்டு கத்தி வெளியேற்றினேன். அப்போதுதான் அந்த எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தது. திடீரென அருகில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு அண்ணன் விறுட்டென விருமாண்டி போல் எழுந்தார். தோளில் தொங்கிக்கொண்டிருந்த டவுசர் அவர் எங்கு என்ன பணியில் மும்முரமாக இருந்தார் என்பதை எனக்கு புரியவைத்தது.

என்னை வெறித்துப் பார்த்தவர், நாக்கை மடித்து ஜிப்ரிஷ்ஷில் ஏதோ சொல்லிவிட்டு விறுவிறுவென நடையை கட்டிவிட்டார். நானும் அக்கம்பக்கம் யாரும் பார்க்கல, அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா சூனாபானான்னு வண்டியை எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அதனால் நீங்களும் ஜிப்ரிஷ் தியானத்தை முயற்சி பண்ணுங்க, ஆனால் சுற்றிமுற்றி ஒருமுறை நல்லா பார்த்துட்டு முயற்சி பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.

English summary
Gibberish meditation method become popular nowadays in many nations, what is this and what one can get? here is the detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X