• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சைக்கிள் சின்னம் அம்போ- 2-ம் கட்ட தலைவர்கள் எஸ்கேப்- எப்போது பாஜக ஜோதியில் வாசனின் தமாகா ஐக்கியம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் தேர்தலுக்குப் பின் கட்சிகள் எந்த பாதையில் பயணிக்கும்? அவற்றின் எதிர்காலம் எல்லாம் என்னவாகும் என்பது விவாதங்களாகி வருகின்றன.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக 6 சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இது மதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

27 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக, திமுகவின் உதயசூரியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனிக்கட்சி கண்டதுதான் மதிமுக. இப்போது அத்தனையிலும் சமரசம் செய்து கொண்டு திமுகவின் ஒரு அங்கமாகவே மதிமுக ஆகிவிட்டது. இதனால் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் திமுகவுடன் மதிமுக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற கருத்து தேர்தல் களத்தில் பேசுபொருளாக இருந்தது.

த.மா.கா. மூப்பனார்

த.மா.கா. மூப்பனார்

ஏறத்தாழ இதேநிலைமைதான் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. எந்த அதிமுக கூட்டணியை எதிர்த்து ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினாரோ அவர் வாழ்ந்த காலத்திலேயே அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் என்பது வரலாறு.

ராகுல் கிடுக்குப்பிடி

ராகுல் கிடுக்குப்பிடி

அவரது மறைவுக்குப் பின்னர் காங்கிரஸில் மொத்தமாக கரைந்தது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் பாஜக சார்பு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்ந்து நல்லுறவை ஜி.கே.வாசன் வளர்த்து வந்தார். காங்கிரஸ் கட்சியிலும் தனி ஆவர்த்தனமாக இருந்து வந்தார். இதனால் ஜி.கே.வாசனை ஒதுக்கி வைத்தாக வேண்டும் என்பதில் ராகுல் காந்தி பிடிவாதம் காட்டினார்.

வாசன் த.மா.கா.

வாசன் த.மா.கா.

இதனால் வேறுவழியே இல்லாமல் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே.வாசன் தொடங்கினார். 2-வது முறையாக த.மா.கா. உதயமான போது அறியப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர் இதனை ஏற்கவில்லை. ஏன் மாஜி தமிழ் மாநில காங்கிரசார் கூட காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசனை நம்பி வர தயாராகவில்லை. எப்படியும் தங்களை நட்டாற்றில் கைவிட்டுவிடுவார் ஜி.கே.வாசன் என்பதுதான் அவர்களது கருத்தாக இருந்தது.

த.மா.கா- பாஜக உறவு

த.மா.கா- பாஜக உறவு

2-வது முறையாக த.மா.கா. உருவானது முதலே பாஜகவின் நிழல் அணியாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது அந்த கட்சி. அத்துடன் எப்போது வேண்டுமானாலும் த.மா.கா, பாஜகவுடன் இணைந்துவிடும்; தமிழக பாஜக தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகள் எல்லாம் வலம் வந்தன. பின்னர் இதனை ஏதோ ஒரு காரணத்துக்காக ஜி.கே.வாசன் மறுத்தும் வந்தார். அந்த அளவுக்கு பாஜகவுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்து வைத்திருந்தார் வாசன்.

வாசனுக்கு ராஜ்யசபா சீட்

வாசனுக்கு ராஜ்யசபா சீட்

ஜி.கே.வாசன் காட்டிய இத்தகைய அளப்பரிய விசுவாசத்துக்காகத்தான் அவருக்கு ராஜ்யசபா சீட்டையே அதிமுகவிடம் இருந்து வாங்கி கொடுத்தது பாஜக. இத்தனைக்கும் அதிமுகவில் அத்தனை 2-ம் கட்ட தலைவர்கள் ராஜ்யசபா சீட்டுக்கு ஆளாய் பறந்து கொண்டிருந்தனர். அத்தனை பேருடைய அதிருப்திக்கு மத்தியில்தான் ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை தூக்கி கொடுத்தது அதிமுக. அதற்கு ஒற்றை காரணம் டெல்லி பாஜக மேலிடம் போட உத்தரவு மட்டும்தான்!

12 சீட் த.மா.கா.

12 சீட் த.மா.கா.

தற்போதைய சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் வாசனின் த.மா.கா.வுக்கு 12 சீட்டை வாங்கித் தருவதில் பாஜகவின் டெல்லி மேலிடம் படுதீவிரமாக இருந்தது. பாஜகவே 40 சீட் கேட்கும் போது கூட்டாளி வாசனுக்கும் 12 சீட் வாங்க அந்த கட்சி முயற்சித்ததில் வியப்பேதும் இல்லைதான். ஆனால் பாஜகவுக்கே 20 சீட்தான் என கடையை மூடியது அதிமுக. இதனால் தமாகாவுக்கு கடைசியில் 6 சீட் என கறாராக பேசியது அதிமுக.

பாஜகவால் 6 சீட்

பாஜகவால் 6 சீட்

கட்சியில் இருக்கிற சோ கால்ட் தலைவர்களுக்கு சீட் கொடுக்கத்தான் 12 கேட்டோம்.. அப்படி கிடைக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள் என்றெல்லாம் வாசன் மனம்கலங்கிப் பேசிப் பார்த்தார். ஆனால் வழக்கம் போல டெல்லி தலையிட்டு அதிமுக கொடுக்கிற சீட்டை வாங்கிட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும் என்ற சொல்ல.. அப்புறம் என்ன ஜி.கே.வாசன்- ஓகேஜி என களத்துக்குப் போய்விட்டார்.

தலைவர்கள் எஸ்கேப்

தலைவர்கள் எஸ்கேப்

ஆனால் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்திய 2-ம் நிலை தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் கோவை தங்கம், சீட் கிடைக்காத கோபத்தில் வாசனைவிட்டு தப்பி ஓடி ஸ்டாலினிடம் அடைக்கலமாகிவிட்டார். இதேபோல் வெளியே அறியப்படாத பலரும் த.மா.கா. எனும் கூடாரத்தை காலி செய்துவிட்டு எதிர்கால நலன் கருதி முடிவெடுத்துவிட்டனர். இப்போதைக்கு ஜிகே வாசன், விடியல் சேகர் என ஒன்றிரண்டுபேர்தான் அறியப்பட்டவர்களாக உள்ளனர் த.மா.கா.வில்..

பாஜக மட்டுமே எதிர்காலம்

பாஜக மட்டுமே எதிர்காலம்

மேலும் சட்டசபை தேர்தலில் ஒருவேளை தமாகா எத்தனை இடத்தில் வென்றாலும் அது அதிமுக கணக்கில்தான் இருக்கும். அந்த கட்சிக்கு என இருந்த சைக்கிள் சின்னமும் இப்போ அம்போவாகிவிட்டது. அதேபோல் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும் இல்லை என்றாகிவிட்டது. வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏக்களும் கட்சிக்கு சொந்தம் இல்லை.. அதிமுகவுக்குதான் என்கிற நிலை. இதற்குப் பின்னரும் த.மா.கா. என்கிற தனிக்கட்சி போணியாகும் என்பதில் அந்த கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்பட வாய்ப்பே இல்லை. இப்போதைக்கு த.மா.கா.வுக்கு முன் இருக்கும் ஒரே வாய்ப்பு பாரதிய ஜனதா கட்சி ஜோதியில் ஐக்கியமாவது மட்டுமாகவே இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

English summary
Sources said that Rajya Sabha MP GK Vasan's TMC may merger with BJP After the Tamilnadu Assembly Election Results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X