• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Exclusive: பெண் சிசுவை கொல்லாதீர்கள்.. கல்வி கொடுங்க.. சொந்த காலில் நிற்பார்கள்.. கோமதி ஐஆர்எஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், பெண்களுக்கு 100 சதவீதம் கல்வியே பாதுகாப்பானது என சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் கோமதி ஐஆர்எஸ் அறிவுறுத்தியுள்ளார்.

  பெண் சிசுவை கொல்லாதீர்கள்.. கல்வியை கொடுங்க.. சொந்த காலில் நிற்பார்கள்.. கோமதி ஐஆர்எஸ்!

  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து தமிழை முதன்மை பாடமாக எடுத்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி கண்டவர் கோமதி ஐஆர்எஸ். இவர் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கத் துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.

  மதன் ஆடிய ஆட்டம் என்ன.. இப்போ போச்சா.. 2 ஆடி கார்கள் பறிமுதல்.. வங்கியிலுள்ள 4 கோடி முடக்கம் மதன் ஆடிய ஆட்டம் என்ன.. இப்போ போச்சா.. 2 ஆடி கார்கள் பறிமுதல்.. வங்கியிலுள்ள 4 கோடி முடக்கம்

  ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்:

  சிசு கொலையை தடுப்பது எப்படி

  சிசு கொலையை தடுப்பது எப்படி

  கே: பெண் சிசு கொலை இன்னும் பல கிராமங்களில் நடந்து வருகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

  ப: இது ஒரு பெரிய சமூக அவலம் . கிருஷ்ணகிரி, சேலம் , தருமபுரி மாவட்டங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. மதுரை, உசிலம்பட்டி ஆகியவற்றில் நடப்பதாக செய்திகளில் பார்த்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிறந்த கிராமங்களில் இது அதிகம் பேசப்பட்டு வந்தது. எனது வீட்டில் என் பெற்றோருக்கு 3 பெண் குழந்தைகள். 3ஆவது பெண் குழந்தையை வேண்டாம் என உறவினர்கள் கூறிய போது எனது பெற்றோர் அதை ஏற்காமல் எங்களை வளர்த்து இன்று நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளனர். பெண் சிசு கொலை அதிகம் உள்ள ஒரு இடத்தில்தான் எனது பெற்றோர் எங்களை நன்றாக வளர்த்தார்கள்.

  ஒரு பெண் குழந்தையை பாரமாகவே நினைக்கிறார்கள். பெண் குழந்தை என்றால் சீர் செய்யணும், கல்யாணம் செய்யணும், செலவுகள் அதிகம் என கருதுகிறார்கள். பெண் குழந்தைக்கு கல்வியை கொடுத்து முன்னேற்றினால் அவர்கள் சுயமாக சொந்த காலில் நிற்கும் போது யாருக்கும் பாரமாக இருக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து.

  பெண் சிசு கொலை

  பெண் சிசு கொலை

  கே: பெண் சிசு கொலையை தடுப்பது எப்படி?

  ப: செல்வ மகள் சேமிப்பு திட்டம் எனப்படும் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மூலம் இதை தடுக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைக்கான திருமணம், கல்விச் செலவுகள் பெரிய சுமையாக இல்லாமல் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் கிராம மக்களுக்கு போய் சேர வேண்டும். அப்போது பெண் குழந்தை பிறந்தால் அது படிக்கவோ திருமணத்திற்கோ நமக்கு பெரிய செலவு இல்லை என பெற்றோர் கருதும் நிலை உருவாகும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் அந்த மாதிரியான விஷயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பெண் குழந்தைகள் சொந்த காலில் நிற்பார்கள், அவர்கள் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள், நம்மையும் கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணங்கள் பெற்றோர் மனதில் வர வேண்டும். அவ்வாறு வந்துவிட்டால் பெண் சிசு கொலைகள் அதிகம் நிகழாது.

  சாதனை பெண்கள்

  சாதனை பெண்கள்

  கே: அனைத்து துறைகளிலும் பெண்கள் காலடி வைத்திருந்தாலும் அவர்களுக்கான ஆதரவு கரங்கள் என்பது குறைவாகவே உள்ளது , அது குறித்து உங்கள் கருத்து என்ன?

  ப: பெண்கள் எல்லா துறைகளிலும் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. பெரும்பாலான துறைகளில் அங்கு பணியாற்றும் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இல்லை என்பதுதான் உண்மை. ஐஆர்எஸ் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் 10 ஆண் அதிகாரிகள் இருக்கும் இடங்களில் 2 பெண் அதிகாரிகளே இருக்கிறார்கள். இந்த விகிதங்கள் சரிசமமாக ஆனால் மட்டுமே பெண்கள் எல்லா துறைகளிலும் வெற்றி அடைந்தார்கள் என சொல்ல முடியும். நமது சமுதாய கட்டமைப்பு ஒரு பெரிய காரணம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் படிக்க ஆரம்பித்தவுடன் உறவினர்கள் கேட்பது, அவளுக்கு கல்யாணம் செய்யவில்லையா என்பதுதான். இது பெற்றோர்களுக்கு கொடுக்கப்படும் சமுதாய அழுத்தமாகவே கருதுகிறேன். திருமணம் ஆனவுடன் அடுத்தது குடும்பம், இந்த பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள் இருக்க வேண்டியதுதான். ஆனால் நமது சமுதாயத்தில் அளவுக்கு அதிகமாக திணிக்கப்பட்டிருக்கிறது. பூஜை, விரதம், புனஸ்காரங்களில் பெண்களை சுற்றியே இருக்கிறது. ஆனால் அதில் முன்னிறுத்தப்படுவது யார் என்றால் ஆண்கள்தான். உதாரணமாக வரலட்சுமி பூஜை என எடுத்துக் கொண்டால் அதை செய்வது என்னவோ பெண்கள்தான், ஆனால் அது ஆணுக்காக (கணவர்) செய்யப்படுகிறது. எல்லா விழாக்களும் பெண்களை சுற்றியிருக்கிறது. ஆனால் முன்னிறுத்தப்படுவது ஆண். நம் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளத்தான் செய்ய வேண்டும். அதே நேரத்தில் நமக்குரிய ஆற்றலை, திறமையை நாம் வெளியே கொண்டு வரவேண்டும். சின்ன சின்ன தடைகளை தாண்டி வந்தால் மட்டுமே நாம் தன்னிறைவு அடைந்தோம் என சொல்ல முடியும். இந்தியா ஜனநாயகத்தின் 4 தூண்களான சட்டப்பேரவை, நீதித் துறை, நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 துறைகளிலும் பெண்கள் சரிசமமாக ஆக்கிரமிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும். பெண்களை முன்னேற்றாமல் செய்யும் முன்னேற்றங்கள் எதுவும் நிறைவு பெறாதவையாகவே இருக்கும்.

  அரசு பள்ளி

  அரசு பள்ளி

  கே: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டுள்ளீர்கள். உங்களை போல் சாதிக்க நினைப்போருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

  ப: பெற்றோர்களின் பார்வை முரண்பாடாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் லட்சங்களை கொட்டி கொடுத்து படிக்க வைக்கும் இவர்கள் படித்து முடித்தவுடன் அரசு வேலை வேண்டும் என்கிறார்கள். அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெறறோருக்கு வரவில்லை. நான் மட்டுமில்லை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். நான் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்துவிட்டு எம்எஸ்சி வேளாண்மை படித்தேன். பின்னர் தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழை முதன்மை பாடமாக எடுத்து தேர்வு எழுதினேன். அரசு பள்ளிகளில் நம்மிடம் இருக்கும் திறமைகளை இயற்கையாகவே அவர்கள் ஊக்கப்படுத்தி வளர விடுகிறார்கள். குழந்தைகளிடம் உள்ள திறமைகளை வெளிக் கொண்டு வரும் போக்கு அரசு பள்ளிகளில் அதிகம் உள்ளது. அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள் திறமைசாலியாக வந்துள்ளார்கள். களத்தில் பணியாற்றும் போது எந்த ஒரு பிரச்சினையையும் எளிதாக கையாளக் கூடிய சூழல் அவர்களிடம் உள்ளது.

  தனிப்பயிற்சி

  தனிப்பயிற்சி

  கே: சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க தனிப்பயிற்சி எடுக்க வேண்டுமா?

  ப: பள்ளிகளில் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடிப்பதற்குள் அரசு தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி கல்வியை முடித்துக் கொண்டு வெளியே வரும் போது இத்தனை போட்டித் தேர்வுகள் இருக்கின்றன என்பதை அந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தேவையான எண்ணத்தை அதிகரிக்க கல்வித் துறையில் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வை எப்படி எழுத வேண்டும், அதற்கான நேர்காணலை எப்படி அணுக வேண்டும் என தெரிந்தாலே போதும். எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாஃப் செலெக்ஷன் கமிட்டி சார்பில் ஆண்டுக்கு 15 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வும் குறைவாகவே இருக்கிறது. அது போல் பொதுப் பணித் துறை நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பள்ளி, கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு இத்தனை வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் சிரமப்பட வேண்டியது கிடையாது என்பதை உணர்த்த வேண்டும். சென்னை எஸ்டிஐயுடன் அரசு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  சிவில் சர்வீஸ் தேர்வு

  சிவில் சர்வீஸ் தேர்வு

  கே: கிராமப்புற மாணவிகள் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்?

  ப: நம்மால் முடியாது என்ற வட்டத்தை போட்டுக் கொள்ள கூடாது. சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறிவிடு என்பதை போல் அவர்கள் சுற்றியுள்ள தடைகளை உடைக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதை சொல்ல தெரிந்தால் போதுமானது. நாம் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டியது அவசியம் இல்லை. தமிழை விட்டு வெளியே வரும்போது எல்லாருக்கும் பொதுவான உலக மொழி என்பது ஆங்கிலம்தான். நாம் நினைப்பதை அடிப்படை ஆங்கிலத்தில் சொன்னாலே போதுமானது. எந்த ஒரு துறையிலும் ஆங்கிலத்தில் ஒருவர் புலமை பெற்றிருக்க வேண்டும் என நினைப்பதில்லை. ஆங்கில பயத்தை விட்டுவிட்டு வெளியே வந்தால் நிறைய வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கும் இருக்கிறது. பெண் குழந்தைகளை பெற்றோர் படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு கல்வியா ஆண்களா என கேட்டால் நான் 100 சதவீதம் சொல்வது கல்விதான். எந்த ஆணும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. அந்த கல்வியும் 50 சதவீத பாதுகாப்பைத்தான் தரும். அந்த கல்வியை வைத்து நிரந்தர வேலையை பெறும் போதுதான் 100 சதவீத பாதுகாப்பு பெண்களுக்கு கிடைக்கும்.

  பெண்கள்

  பெண்கள்


  கே: சாதிக்க துடிக்கும் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

  ப: ஒரே ஒரு பதில்தான் பெண்கல்வி. படிப்பதற்கான சந்தர்ப்பங்களை எங்கெல்லாம் கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது. சுயமாக உங்கள் காலில் நில்லுங்கள். பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க கல்விதான் முக்கியம். எங்கள் குடும்பமே கல்வியால் உயர்ந்த குடும்பம்தான். எங்கள் வீட்டில் என் அம்மா, சகோதரிகளுடன் சேர்த்து 4 அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமை எனது தந்தைக்கு உண்டு. பெண்களுக்கு வருமானம், கல்வி மிக முக்கியமானது.

  லட்சியம் என்ன

  லட்சியம் என்ன

  கே: குழந்தை திருமணம் குறித்து உங்கள் கருத்து என்ன?

  ப: கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க போராடி கொண்டிருக்கும் போது குழந்தை திருமணம் என்பது கூடுதல் சமூக அவலம்தான். இந்த மாதிரியான திருமணங்களை எல்லாரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த முயற்சி செய்வதுதான் தீர்வு.

  English summary
  Gomathi IRS says that Every girl should get education and jobs to stand on their own legs.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X