நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர் ரவி! முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
Recommended Video - Watch Now
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது.
ஆனால் அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார். இதையடுத்து திமுக கட்சி ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்படுங்க.. ஆளுநர் தனியாக முடிவெடுக்க தேவையே இல்லை..உச்ச நீதிமன்றம் பளீர்!

ஆளுநர் ரவி
ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதலாக இது உருவெடுத்தது. அதோடு நீட் மசோதாவோடு சேர்த்து மேலும் 11 மசோதாக்கள் ஆளுநர்கள் முன் நிலுவையில் இருந்தது. இது தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் ஆளும் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

மசோதா
இந்த முறை ஆளுநர் சட்டப்படி மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. இதனால் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மோதல் மேலும் பெரிதானது. ஆளுநர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு எதிராக இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் மூலம் கருப்பு கொடியும் காட்டப்பட்டது.

முடிவு எடுத்தார்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போவதாக கடந்த வாரம் செய்திகள் வந்தன. ஆளுநர் விரைவில் இதில் முடிவு எடுப்பார் என்று செய்திகள் வந்தன. அதன்படியே தற்போது ஆளுநர் இந்த நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் பேச்சு
அப்போது, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம்.

ஆளுநர் மசோதா
இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமர் அவர்களையும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சி
இநதத் தொடர் முயற்சிகளின் பயனாக, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை ஆளுநரின் செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமர்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.