சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபைக்குள் குட்கா: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து:ஹைகோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸையும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்த குட்கா பொருட்கள் வெளிப்படையாக தடையை மீறி விற்பனை செய்யப்படுகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

இதனை நிரூபிக்கும் வகையில் 2017-ல் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் தடையை மீறி விற்கப்பட்ட குட்கா பொருட்களை எடுத்துச் சென்று காட்டினர். இது சட்டசபையின் உரிமையை மீறிய செயல் என்பதால் உரிமை குழுவிற்கு சபாநாயகர் பரிந்துரைத்தார்.

முதலாவது நோட்டீஸுக்கு தடை

முதலாவது நோட்டீஸுக்கு தடை

அந்த பரிந்துரையில் விசாரணை நடத்துவதற்காக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக் குழுவால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பெஞ்ச், நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாக கூறி அதன் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது.

2-வது உரிமை மீறல் நோட்டீஸுக்கும் தடை

2-வது உரிமை மீறல் நோட்டீஸுக்கும் தடை

இதையடுத்து, உரிமைக்குழு கூடி இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களும், தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் புதிதாக வழக்குகளை தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.

உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. அப்போது, சட்டசபை செயலாளர் தரப்பில் அரசின் மூத்த சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி ஆஜராகி, சட்டசபைக்கு என்று ஒரு மரபு உள்ள நிலையில், முன் அனுமதி எதுவும் பெறாமல், தி.மு.க., எம்.எல்.ஏக்கள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை உள்ளே கொண்டு வந்துள்ளதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்கு குறைவு ஏற்பட்டது இல்லை என்றும் தெரிவித்தார். எனவே பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியதாக திமுக உறுப்பினர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதம்

அரசு வழக்கறிஞர் வாதம்

உரிமைக்குழு சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமை குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட குட்கா பொருளை கொண்டு வந்து காட்சி படுத்தியதற்கு என சுட்டிக்காட்டி இருந்ததாகவும், தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளை காண்பித்ததற்காக என திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழுவை விசாரிக்க உத்தரவிட்டதாகவும், அதன் பேரிலேயே தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

எந்த பொருட்களுக்கு தடை?

எந்த பொருட்களுக்கு தடை?

அப்போது நீதிபதி, எந்தெந்த பொருட்களை கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா என கேள்வி எழுப்பிய நிலையில், பேரவை உரிமைக்குழு தரப்பில் உரிமை, எது உரிமை மீறல் என்பதற்கு ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டமன்றத்தாலோ வரையறை செய்யப்படவில்லை எனவும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது புகை பிடிக்க கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல் தான் சட்டசபை நடவடிக்கையும் என தெரிவிக்கப்பட்டது. பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளதாகவும், இது சட்டசபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

திமுக வாதம்

திமுக வாதம்

சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும் எனவும், அதன் பின்னர் பேரவை தான் இதில் இறுதி முடிவெடுக்கும் என தெரிவித்து, பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லையென வாதிடப்பட்டது. திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது என தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை பொருத்திப் பார்க்க வேண்டுமென வாதிட்டனர். உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

2-வது நோட்டீஸ் ரத்து

2-வது நோட்டீஸ் ரத்து

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு அது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் என பெயருக்கு திருத்தம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமை குழுவில் இருந்து தாங்களாகவே ஒ.பி.எஸ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டுமெனவும், தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும் என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிசம்பர் 4-ந் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்குகளில் இன்று காலை நீதிபதி அளித்த தீர்ப்பில், இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Madras High court will deliver its verdict on breach of conduct against DMK MLAs today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X