கோவையில் எய்ம்ஸ்.. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை..!
சென்னை: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்றும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனு விபரங்கள் வெளியாகியுள்ளது. இது என்னவென்பது குறித்து பார்க்கலாம்.

* தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
* முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கை குறைக்கும் வகையில் உள்ள விதிகள் நீக்கப்பட வேண்டும். மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய தகுதி தேர்வை நடைமுறைப்படுத்துவதற்கும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நீட் தேர்வாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு அரசு கைவிடவேண்டும். மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
* அதேபோல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும் என்றும், உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை காண வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
* அதேபோல் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கையை 7.5 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
* மேலும், 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.