கோடைக்கு இதமாக சென்னையில் கனமழை.. போண்டா, டீயுடன் கொண்டாடிய மக்கள்!
சென்னை: சென்னையில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் மாலை மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன் மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. காற்றின் திசை மற்றும் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.
ஹைய்யா.. குடை ரெடியா மக்களே.. இன்றும் நாளையும் அடிச்சு ஊத்த போகுது மழை.. எங்கேன்னு பாருங்க
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவே வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேலப்பனசாவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
அது நகரில் ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அசோக் பில்லர், கோயம்பேடு, கிண்டி, வடபழனி, முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
பல இடங்களில் மக்கள் மழைக்கு இதமாக சூடான டீ, காப்பியுடன் போண்டா , பஜ்ஜி சாப்பிட்டனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.