சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் அச்சத்தில் லாபம் ஈட்ட முயற்சி.. பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரசை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாகக் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை 'கொரோனில் 92 பி', 'கொரோனில் 213 எஸ்பிஎல்' என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027 ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.

High Court fined Patanjali Ayurveda Rs 10 lakh for trying to make a profit by using peoples corona fears

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் என பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பான மனுவில், கொரோனில் பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

தென் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை.. முதல்வர் அறிவிப்பு தென் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை.. முதல்வர் அறிவிப்பு

மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி நிறுவனம், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, எந்தவித அங்கீகாரத்தையும் தேடாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The Madras High Court has fined Patanjali Ayurveda Rs 10 lakh for trying to make a profit by using people's fears to cure the corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X