சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயில் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சூப்பர் தீர்ப்பு.. பெருமகிழ்ச்சியில் சீமான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகமெங்கும் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என சீமான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி தொடுத்த வழக்கில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி கண்டிப்பாகத் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்டு மதுரை உயர் நீதிமன்றக்கிளை தீர்ப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

ஏற்கனவே, அரசருக்கரசன் பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குத் தமிழில் நடைபெறவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி சட்டப்போராட்டம் நடத்தி, தஞ்சை குடமுழக்கில் தமிழை ஓங்கி ஒலிக்கச்செய்து மொழி மீட்சியையும், பண்பாட்டு மீட்டெடுப்பையும் நிகழ்த்திக்காட்டியது.

அபராதம்

அபராதம்

அன்று தமிழன்னைக்குச் சாற்றிய மணிமகுடத்தில் மேலும் வைரக்கற்கள் பதித்தது போல, கரூர் ஆநிலையப்பர் கோயிலில் நடைப்பெற்ற குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டுமென்று, வீரத்தமிழர் முன்னணி சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில் இக்கோயில் குடமுழுக்கு மட்டுமின்றி, இனி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அனைத்துக் குடமுழுக்குகளும் உறுதியாகத் தமிழில் நடத்தப்படும் வேண்டுமென்றும், அவ்வாறு தமிழில் குடமுழுக்கு நடத்தப்படாவிட்டால் ரூபாய் 10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கி நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

தமிழ்

தமிழ்

இது வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். இதன் மூலம், பன்னெடுங்காலமாக நம்முடைய வழிபாட்டுத்தலங்களைவிட்டு அகற்றப்பட்டிருந்த அன்னைத்தமிழை மீண்டும் வீரத்தமிழர் முன்னணி கோபுரமேற்றி வரலாற்றுப் பெரும்புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. .

ஓராயிரம் ஆண்டுகளாக அன்னைத்தமிழ் நிலத்தில் அறத்தமிழர் ஆட்சி அகன்று, அந்நியர் ஆதிக்கம் மாறிமாறி நிலைப்பெற்று நீடித்த காரணத்தால் ஆட்சியதிகாரத்திலிருது அகற்றப்பட்ட தமிழ், மெல்லமெல்ல நம்முடைய மெய்யியல் கோட்பாடுகளிலிருந்தும், வழிபாடுகளிலிருந்தும், அகற்றப்பட்டு அந்நிய மொழிகள் முழுவதுமாக உட்புகுந்தன.

பெயர்கள்

பெயர்கள்

ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தியது. அதேபோல, சமஸ்கிருதத்தில் வழிபடுவதுதான் ஆன்மீகம்; ஆங்கிலத்தில் படிப்பதுதான் அறிவு; இந்தியில் பேசுவதுதான் தேசபக்தி எனப் போலியாகக் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களால் தமிழ்ப்பிள்ளைகளின் பெயர்கள் முதல் தமிழ்த்தெருக்களின் பெயர்ப்பலகை வரை அனைத்திலும் அந்நிய மொழிகள் குடிபுகுந்தன.

எதிலும் ஆங்கிலம்

எதிலும் ஆங்கிலம்

இந்தி எதிர்ப்புப்போரினைப் பயன்படுத்தி, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்' எனக்கூறி அதிகாரத்தைப் பிடித்த திராவிடக் கட்சிகளின் எழுபது ஆண்டுகால ஆட்சியில் தமிழ்வழிக் கல்வியைவிட ஆங்கிலவழிக் கல்வியே கோலோச்சி, ‘எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்' என்ற இழிநிலையே இன்றுவரை நிலவுகிறது. மறுபுறம், மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நாளுக்குநாள் பல்வேறு வழிகளில் வலிந்து திணிக்க முயல்கிறது.

தாய்த்தமிழ்மொழி

தாய்த்தமிழ்மொழி

இப்படி மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கும் தாய்த்தமிழ்மொழியை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க நாம் தமிழர் கட்சி ‘தமிழ் மீட்சிப்பாசறை' என்ற புதிய பாசறையைத் தொடங்கி, மொழி மீட்சியைச் செயலாக்கிக் கொண்டிருக்கிறது. அதன்மூலம், குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயரை வைக்கக் கோருதல், வணிகப் பெயர்ப்பலகையைத் தமிழில் மாற்றுதல், புதிய கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்குதல் எனப்பல்வேறு அரிய பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறது. அதைப்போலவே, அந்நிய பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து பாதுகாக்கவும், தொலைத்துவிட்ட தமிழர் மெய்யியலை மீட்டெடுக்கவும் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப்பிரிவாக வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவு கடந்த ஐந்தாண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சீமான் பாராட்டு

சீமான் பாராட்டு

அதன் தொடர்ச்சியான பெரும்பணிகளின் நீட்சியாக, சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தமிழைக் கோபுரமேற்றி மொழி மீட்சியைச் செயலாக்கம் செய்துகொண்டிருக்கிறது. அதற்காக உழைத்திட்ட வீரத்தமிழர் முன்னணி நிர்வாகிகளுக்கும், கரூர் மாவட்ட தம்பிகளுக்கும், சட்டப்போராட்டம் செய்து வென்றிட்ட வழக்கறிஞர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். இன்றைக்குச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகக் கோபுரமேறிய தமிழை விரைவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, அரியணையில் ஏறச்செய்வோம் என இந்நாளில் சூளுரைக்கிறேன்," இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Seeman is proud of the High Court verdict which has ordered temples in Tamil Nadu to perform Kudamulukku in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X