• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெடுஞ்சாலைகளில் எழுதப்படும் அரசியல் விளம்பரங்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து.. தடுக்க என்ன வழி?

Google Oneindia Tamil News

சென்னை: அந்தக் கட்சி, இந்த கட்சி என்று கிடையாது.. எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். நெடுஞ்சாலை பாலங்கள் மீது எழுதப்பட்டு.. பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக மாறிக்கொண்டிருக்கும் "தலைவா வாழ்க.." வகையறா, விளம்பரங்கள் பற்றி தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பிற எந்த மாநிலங்களோடு ஒப்பிட்டாலும், தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற நெடுஞ்சாலை சுவர் விளம்பரங்கள் அதிகமாக கண்ணை உறுத்துவதை நீங்கள் கவனிக்க முடியும்.

உள்ளூர் கட்சி நிர்வாகிகள் முதல், மாநில அளவிலான தலைவர்கள் வரை.. அவ்வளவு ஏன்.. தேசிய தலைவர்கள் பெயரை கூட இதில் எழுதி, அதற்கு விதவிதமான வண்ணம் தீட்டி , கட்சியின் சின்னங்களையும் வரைந்து வைத்திருப்பதை, இதுவரை நீங்கள் கவனித்ததில்லை என்றால், கண்டிப்பாக அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

உள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா? கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்! உள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா? கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!

வாகன ஓட்டிகள் கவனம் திசை திரும்பும்

வாகன ஓட்டிகள் கவனம் திசை திரும்பும்

"இதில் என்ன பிரச்சனை..? அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வரைந்து விட்டு போகட்டுமே?" என்று கூட சிலர் கேட்கலாம்.. ஆனால் விஷயம் அதுவல்ல. இதில் இரண்டு வகையான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று.. வாகன ஓட்டியின் கவனம் திசை திரும்புகிறது. நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் சென்று கொண்டு இருக்கும்போது, கலர் கலர் விளம்பரங்களை நோக்கி ஓட்டுநரின் கவனம் திசை திரும்பினால் என்ன நடக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது.

சாலை எச்சரிக்கைகள் மாயம்

சாலை எச்சரிக்கைகள் மாயம்

சரி, இதைக் கூட சமாளித்து ஓட்டுனர் வாகனத்தை இயக்கி விடுவார் என்றே வைத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் தான் இதைவிட பெரிய பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. ஏனென்றால், பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில், பாலங்கள் பொதுவாகவே, பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் சாலையை கடப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.. அல்லது நெடுஞ்சாலை வாகனங்கள் இடையே வரும் ஊர்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை என்பதால் பாலங்கள் மூலம் ஏறி வேகமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இதுபோன்ற சுவர்களில் ஊர்களுக்கு செல்லக்கூடிய வழித்தடம் பற்றிய வழிகாட்டியும் இடம் பெற்றிருக்கும்.

ரிப்ளக்டர்கள் மறைப்பு

ரிப்ளக்டர்கள் மறைப்பு

"மெதுவாக செல்லவும்", "வேகத்தடை இருக்கிறது" என்பது போன்ற சில குறியீடுகள் அங்கே எழுதப்பட்டிருக்கும். பாலத்தின் பக்கவாட்டு பகுதியை இரவு நேரங்களில் ஓட்டுனருக்கு எளிதாக புரிய வைப்பதற்கு ரிப்ளெக்டர் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். வாகன வெளிச்சம் அதில் பாய்ந்ததும், ரிப்ளக்டர்கள் பளிச்சென எதிரொலித்து, சாலை எங்கே முடிகிறது என்பதை காட்டும் என்பதால் ஆபத்தில்லாமல் டிரைவர்கள் வாகனத்தை இயக்க முடியும். ஆனால் இதுபோன்ற சுவர் விளம்பரம் அல்லது சுவரொட்டி அவை அனைத்தையும் முற்றிலுமாக மறைத்து விடுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கும், எந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதிலும் குழப்பம் ஏற்படுவதோடு, ரிப்ளக்டர்கள் மறைக்கப்படுவதால் பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. தங்கள் கட்சி தலைவர்களின் புகழை மக்களிடையே பரப்புவதற்காக, பிற உயிர்களின் பாதுகாப்புடன் விளையாடுவது எந்தவகையிலும் சரி கிடையாது என்பதை இது போன்ற விளம்பரங்கள் வரைபவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது கட்டாயம். அப்படி யாரும் செய்வதில்லை என்பதுதான் யதார்த்தம்.

பாலங்களின் பெயர் பலகைகள் ரொம்ப முக்கியம்

பாலங்களின் பெயர் பலகைகள் ரொம்ப முக்கியம்

பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அருகே தான் சென்னைக்கு செல்பவர்கள் இடது புறமாக திரும்ப வேண்டும் என்ற வழிகாட்டு குறியீடு இருப்பதை பலரும் பார்த்திருக்க முடியும். கூகுள் மேப் கூட பல நேரங்களில் குழம்பும் இடம் இது. ஏனெனில் இது போன்ற சிறிய குறுக்கு வெட்டு சாலைகளை கூகுள் மேப் துல்லியமாக கணித்துச் சொல்வதில் திணறக்கூடும். இந்த மாதிரி வழிகாட்டு பலகைகள்தான், இக்கட்டான நேரங்களில் ஓட்டுனர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். பலரும் பாலத்தின் பக்கத்தில் உள்ள இந்த பலகை தெரியாமல் சென்னைக்கு செல்லும் வழியை விட்டுவிட்டு, நேராக சேலம் செல்லும் மார்க்கமாக சென்று பிறகு தவறை தெரிந்து கொண்டு, பல கிலோமீட்டர்கள் கழித்து யூ டர்ன் போட்டு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது . இது ஒரு உதாரணம்தான். இப்படித்தான் பல்வேறு ஊர்களிலும் மேம்பாலங்களில் உள்ள பெயர் பலகைகள் ஓட்டுநர்களின் உற்ற நண்பனாக இருக்கின்றன. ஆனால் அதன்மேல் விளம்பரங்களை எழுதுவது நெடுஞ்சாலைகளில் நோக்கத்துக்கே எதிரானது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள்.

தடுக்க என்ன வழி?

தடுக்க என்ன வழி?

நெடுஞ்சாலைகளில் விளம்பரம் எழுதுவதை தடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.. அல்லது அதற்கு வழியில்லை என்றால் , குறைந்தபட்சம் விளம்பரங்கள் எங்கே எழுதப்படுகிறது என்பதை நெடுஞ்சாலைத் துறை கண்காணிக்க வேண்டும். ரிப்ளக்டர்கள் மீது மற்றும் வழிகாட்டு பலகைகள் மீது விளம்பரங்கள் எழுதப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு விடக்கூடாது. இது போன்ற விளம்பரங்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை விஷயத்தில் நீண்ட அனுபவம் கொண்ட பலரும் கருதுகிறார்கள். இவ்வாறு கட்டணம் வசூலிப்பது மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த முடியும் என்பது அவர்கள் கருத்து.

டி.ஆர்.பி.ராஜா கருத்து

டி.ஆர்.பி.ராஜா கருத்து

இதுகுறித்து, ஒன்இந்தியாதமிழ் சார்பில், மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும் திமுக என்.ஆர்.ஐ நலப் பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜாவை தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய பேசினோம். இதுபற்றி டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது: நெடுஞ்சாலை பாலங்கள் என்பது மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரக் கூடியது. பொது சொத்தில் யாருமே எழுதக் கூடாது. மேலும், இதை உறுதி செய்யும் வகையில், உச்சநீதிமன்றமும் நெடுஞ்சாலைகளில் விளம்பரங்கள் எழுதக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உரிய வகையில் அனுமதி பெற்று நெடுஞ்சாலையோரம், டோல்கேட் பகுதிகளில் விளம்பரம் எழுத நிறைய பேர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், டிரைவர்களுக்கு கவனம் சிதறும் என்பதால், அதைச் செய்யக் கூடாது என அரசு கூறிவிட்டது. கட்டணம் பெற்றுக் கொண்டு விளம்பரம் எழுத அனுமதித்தால் நிறைய வருவாய் கிடைக்கும். ஆனால் அதை எப்படி கட்சி நிர்வாகிகள் தங்களது சுய விளம்பரத்திற்கு பயன்படுத்த முடியும்?

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை

அரசு பெயிண்ட் அடித்து வைக்கும் இடங்களில், இதுபோல விளம்பரத்தை எழுதி வைக்கிறார்கள். பிறகு பெயிண்ட் மாற்றியடிக்கவும், அரசே செலவிட வேண்டியுள்ளது. வருமானமும் வராமல், பெயிண்ட்டுக்கும் அரசு செலவிட வேண்டியுள்ளது. இது, மக்களின் பணம்தானே.. எனவே ஒன்று, விளம்பரங்கள் எழுதுவதை முழுக்க முழுக்க தடுக்க வேண்டும், அல்லது, எழுதும் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்க வேண்டும். விளம்பரம் எழுத அனுமதிக்கும்போதும், ஹைவேக்களில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களில், அதாவது, கறுப்பு, வெள்ளை நிறங்களில் விளம்பரம் எழுத அனுமதிக்க வேண்டும். கண்ட கண்ட வண்ணங்களில் பெயிண்ட் அடிக்க கூடாது. அப்போதுதான், வாகன ஓட்டிகள், கவனம் சிதறாது. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் இதை நிறுத்த முடியும்.

 முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை

மாநில அரசு, இந்த மாற்றத்தை மாநில நெடுஞ்சாலைகளில் கொண்டுவர முடியுமே தவிர, தேசிய நெடுஞ்சாலைகளில் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை. அழகான தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்றால், பொது இடங்களில் நாம் இதுபோன்ற விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு, பதில் கலை நயத்தோடு ஏதாவது, எழுதலாம். அப்போதுதான், அந்த நகரத்திற்கும், மாநிலத்திற்கும் அழகு கூடும். பிற மாநிலங்களில் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பர கலாச்சாரம் இந்த அளவுக்கு இல்லை. தமிழ்நாட்டில்தான் அந்த கலாச்சாரம் அதிகம். அதுதான் நெடுஞ்சாலைகளிலும் எதிரொலிக்கிறது. இந்த கலாச்சாரத்திற்கு முதல்வர் முடிவு கட்ட ஆரம்பித்துள்ளார். இப்போது அது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டதே. அல்லது தெருவிற்கு தெரு, கட்அவுட்டுகளைத்தானே வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது, முதல்வர் போகும் இடங்களில் கூட பேனர்கள் வைக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டதோடு, அதை தீவிரமாக கண்காணிக்கவும் செய்கிறார். அவரால் முடிந்த மாற்றங்களை அவர் செய்கிறார்.

விழிப்புணர்வு தேவை

விழிப்புணர்வு தேவை

தேர்தல் நடக்கும்போதெல்லாம், விளம்பரங்களை மாற்றுவதற்கும், பெயிண்ட் அடிப்பதற்கும் ஏன் மக்கள் வரிப்பணம் வீணாக வேண்டும். பெயர் பதாகைகள், விளம்பர எழுத்துக்களால், கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் ஏற்படுவதையும் பார்த்துள்ளோம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுதான் வழி. கட்சி கொள்கை, கொடுக்கும் வாக்குறுதிகளை பார்த்துதான் மக்கள் ஓட்டுப் போடுவார்களே தவிர, சுவர் விளம்பரங்களை பார்த்து ஓட்டுப் போடப்போவதில்லை. இது கட்சி நிர்வாகிகள், தலைமைக்கு தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டுமானால் பயன்படுமே தவிர, ஓட்டுக்களை பெற பயன்படாது. இவ்வாறு தெரிவித்தார் டி.ஆர்.பி ராஜா. வாகன பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற நெடுஞ்சாலை விளம்பரங்களை தவிர்க்க வேண்டும், அதை தடுக்க வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே வரவேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

English summary
Political advertisements are written on the wall in the highway side bridges and flyovers causing accidents. The advertisements are hiding the roadside reflectors & name boards which are very helpful for the vehicle drivers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X