திமுக, அதிமுக இந்து விரோத கட்சிகளாம்... தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் செல்லும் இந்து முன்னணி
சென்னை: இந்துக்களுடைய உரிமையை மீட்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஜூன் 28 ஆம் தேதி முதல் பிரச்சாரம் பயணம் செல்ல இருப்பதாக இந்து முன்னணி அறிவித்து இருக்கிறது.
ஜூன் 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கும் இந்த பிரச்சார பயணம் 34 நாட்களில் 37 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கப்படும் இந்த பிரச்சார பயணம் டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வட மாவட்டங்கள் வழியாக சென்னையில் ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
செம ஹீட் செய்தி...அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் சென்னையில் வெப்பம் அதிகரிக்குமாம்

இந்து உரிமைகள்
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்து இருப்பதாவது, "தமிழ்நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 2 ஆம் தர குடிமக்களாக இந்துக்கள் நடத்தப்படுகிறார்கள்.

34 நாட்கள், 37 மாவட்டங்கள்
அந்த உரிமையை மீட்பதற்காக இந்த பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஜூன் 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கும் இந்த பிரச்சார பயணம் 34 நாட்களில் 37 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்து கோயில்களை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

180 கோயில்கள் இடிப்பு
ஆக்கிரமிப்புகள் இருக்கும் இடத்தில் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களை இடிப்பதில்லை. கோயில்களில் ஏராளமான ஊழல்கள் நடந்து வருகின்றன. திமுக ஆட்சி அமைத்த பின்னர் நூறு ஆண்டுகள் பழமையாக 180 கோயில்களை இடித்து உள்ளார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக சொல்லி அவற்றை இடிக்கின்றனர்.

இந்துக்களுக்கு எதிரான திமுக, அதிமுக
திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் இந்துக்களுக்கு எதிராகவே உள்ளன. இந்து கோயில்களை பாதுகாக்க தனியாக வாரியம் ஒன்றை அமைத்திட வேண்டும். மத பாரபட்சம் பார்க்காமல் அரசு வழங்கும் சலுகைகளையும் உதவிகளையும் இந்து மக்களும் பெற்றிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிருத்தி இந்த பிரச்சார பயணத்தை நடத்த இருக்கிறோம்." என்றார்.