சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாத்திரம் பறக்கும்.. மண்ட பத்திதரம்.. கல்யாண நாள் கலாட்டாக்கள்.. கணவர்களே உஷார்!

Google Oneindia Tamil News

நடிகை குஷ்பூ-இயக்குநர் சுந்தர் சி ஜோடிக்கு நேற்று 20வது திருமண நாள். இணையத்தில் பலரும் வாழ்த்துமழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். குஷ்பூ ஒருபடி மேலேபோய், ''இந்த காலகட்டத்தில் எதுவும் மாறவில்லை. நான் அப்படியே பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்'' என டிவிட்டரில் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

குஷ்பூ, சுந்தர் இடையில் மட்டுமல்ல, பல வீடுகளிலும் இதுதான் நிலைமை. திருமணமான ஆரம்ப கட்டத்தில் மாப்பிளைக்கு மயக்கம் தெளியவே பல நாட்கள் ஆகும். ஒருவழியாக மயக்கம் தெளியத் தொடங்கியதும், மீண்டும் அவர் மூர்ச்சித்துப் போகும் அளவிற்கு எதிர் தரப்பு அஸ்திரங்களை வீசும். இதையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழ்க்கைப் படகை ஓட்டினால்தான் கடைசி வரை இருவரும் மகிழ்ச்சியாக கரை சேர முடியும்.

எனது பக்கத்து வீட்டில் குடியேறியது ஒரு இளம்ஜோடி. சின்னஞ்சிறுசுகள் ஆரம்பத்தில் செல்லம், டார்லிங், அம்முக்குட்டி என்று அதகளம் செய்தார்கள். முதல் திருமண நாளை தடபுடலாக நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினார்கள். எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்! அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கத்து வீட்டில் வால்யூம் அதிகரிக்க ஆரம்பித்தது.

 நைஸாக வந்த பையன்

நைஸாக வந்த பையன்

அவர்கள் வீடு எந்நேரமும் உட்புறமாக பூட்டியே இருக்கும். திடீர் திடீரென பாத்திரங்கள் உருண்டோடும் சத்தம் கேட்கும். பல நாட்கள் ஆகியும் இதன் பின்னணி விளங்கவில்லை. ஒருநாள் மாலை நேரத்தில் அந்த பையன், அங்குமிங்கும் பார்த்தபடி நைசாக வெளியே வந்தான். நான் அவனைக் கூப்பிட, அவன் எதையோ சொல்லிவிட்டு நகரப் பார்த்தான். நான் விடவில்லை. கிட்ட போய் பார்த்தால் முகத்தில் லேசாகக் காயம். பிளாஸ்தரி போட்டு ஒட்டியிருந்தான். என்ன, ஏது என விசாரிக்க, வாயைத் திறக்க ரொம்பவே தயங்கினான். நானும் விடாப்பிடியாக வலியுறுத்த, வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொட்டத் தொடங்கினான்.

 கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் ( இந்த சமயத்தில்தான் பாத்திரங்கள் பறந்திருக்கின்றன), இதில் தனக்கு ஏற்பட்ட காயம் எல்லாவற்றையும் பொறுமையுடன் விவரித்த அந்த பையன், ''சென்னையிலுள்ள அவளது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்'' என்கிற தகவலையும் சொன்னான். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் இத்தனை கலாட்டா. அப்புறம் இருவரையும் உட்கார வைத்து பேசி புரியவைத்து மீண்டும் இணைத்துவிட்டோம் என்பது தனிக்கதை.

 சகஜம்தான்

சகஜம்தான்

குடும்ப வாழ்க்கையில், அதுவும் ஆரம்பக் கட்டத்தில் சின்னச் சின்ன பிரச்சனைகள் தலைதூக்குவது வழக்கம்தான். அந்த காலங்களில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என ஒரு பெரும் படையே அருகில் இருந்தபோது இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம், தோன்றிய வேகத்திலேயே காணாமல் போய்விடும். ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட சூழ்நிலைகள் இல்லாததால், பிரச்சனைகள் பூதாகரமாகி விவாகரத்து வரை இழுத்துச் செல்கின்றன. நகர்ப்புறங்களில் இருவரும் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒற்றைச் சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல முடியாததே இதற்குக் காரணம். இப்படி இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய சூழலில் வீட்டு வேலைகளையும் இருவரும் பகிர்ந்து செய்வது ரொம்பவே புத்திசாலித்தனம்.

சரிசமமாக பிரித்து செய்யலாம்

சரிசமமாக பிரித்து செய்யலாம்

மதுரையில் தங்கியிருக்கும் அந்த புதுமணத் தம்பதியரில் பெண், எனது மனைவிக்கு மிகவும் நெருக்கமான உறவினர். அண்மையில் அவரை சந்தித்தபோது, ‘'காலையில் 8;30 மணிக்கெல்லாம் ரெண்டு பேருமே வீட்டை விட்டு வெளியேறணும். அப்பதான் ஆபிசுக்குப் போக முடியும். அதனால ரெண்டு பேருமே வேலைகளை சரிசமமாக பிரிச்சி போட்டு செய்வோம். நான் காய் வெட்டினால் அவர் அடுப்பை பார்த்துக் கொள்வார். நான் வாஷிங் மெஷினை ஆபரேட் பண்ணினால், அவர் வீட்டை க்ளீன் பண்ணுவார். இப்படி வேலைகளை பகிர்ந்து செய்யறதால குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியுது. ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாரு. ஆனால் நாளாக, நாளாகத் தேவையை உணர்ந்து அவரே செய்ய ஆரம்பிச்சிட்டாரு'' என சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. இன்றைய இளைய சமூகம், தனது வாழ்வியல் சிக்கல்களையும், அவற்றிற்கான தீர்வுகளையும் அறிந்து வைத்திருப்பது பாராட்ட வேண்டிய சங்கதி.

புரிஞ்சு வாழணும்

புரிஞ்சு வாழணும்

இப்படி புரிந்துவாழும் தம்பதிகள்தான் கல்யாண நாளை கடைசி காலம் வரை சந்தோஷமாகவும், மனநிறைவோடும் கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மராத்தான் ரேசில் பாதியில் நின்றுவிடும் பங்கேற்பாளர்களைப் போல இரண்டு, மூணு வருஷம் கல்யாண நாளை கொண்டாடிவிட்டு. அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துவிட்டவர்கள் போல் ஆகிவிடுகிறார்கள். எங்கள் பக்கத்துவீட்டு அங்கிள் சமீபத்தில் 60வது வயதில் திருக்கடையூரில் சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்டார். அதோடு விடாமல் சென்னையில் பிரம்மாண்ட விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்து தனது பால்ய நண்பர்கள் முதல் சமீபத்தில் அறிமுகம் ஆனவர்கள் வரை அனைவரையும் கூப்பிட்டு அசத்திவிட்டார்.

அல்லோகல்லம்

அல்லோகல்லம்

இந்த கல்யாண வரவேற்பிற்காக அவர் குடும்பமே ஒரு வாரம் கூடி சிலபல பிளான்களை போட்டு வீட்டையே அல்லோலகல்லோலப்படுத்திவிட்டார்கள். இவ்வளவு அலப்பறை தேவையா என்று கேட்டால், வாழ்க்கைன்னா தடபுடலா கொண்டாடித் தீர்க்க வேண்டாமா என்று திருப்பிக் கேட்கிறார்கள். ஆனா இதற்கு நேர் மாறாக ஐந்து, ஆறு ஆண்டுகள் ஆன பிறகே கல்யாண நாளை மறந்துவிடும் கோஷ்டிகள் தான் இங்கு அதிகம். இனிமே என்னத்த வாழ்ந்து... என்னத்த கொண்டாடி.. என்று சலிப்பாக பேசுபவர்களுக்கு ஒரே ஒரு தகவல். கொரோனோ போல திடீர் திடீரென வைரஸ்கள் வரும் காலத்தில் இருக்கிறோம். வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் இருக்கிற வரைக்கும் கல்யாண நாள், பிறந்தநாள் என ஒன்றையும் விடாமல் கொண்டாடி விடுங்கள். இருக்கிற காலம் இனிதே போகட்டும்.

 புரிஞ்சவன் பிஸ்தா

புரிஞ்சவன் பிஸ்தா

கல்யாண நாளில் என்ன விலை உயர்ந்த பரிசு கொடுக்கிறோம் என்பதை விட எத்தனை நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறோம் என்பதைதான் உலகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான பெண்களும் விரும்புவதாக ஒரு சர்வே சொல்கிறது. அதனால் கல்யாண நாளை கொஞ்சம் பக்காவாக பிளான் போட்டு கொண்டாடினால், அந்த வருஷம் முழுக்க வசந்தம்தான்.

புரிஞ்சவன் பிஸ்தா!

- கௌதம்

English summary
Life after wedding is very tricky and an art. We have to handle with care and more care.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X