"கண் சிவந்த" பாஜக மேலிடம்.. அங்கே ஓபிஎஸ் வைத்த வெடி.. இங்கே எடப்பாடி போட்டோவை வீசி அமர்க்களம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை, ஓபிஎஸ் ஆதரவாளர், அகற்றியும், மை ஊற்றி அழித்தும் ஆர்ப்பாட்டங்களை செய்து வருவது, தொடர்ந்து அதிமுகவை பதற்றத்தில் வைத்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து மிகப்பெரிய அளவில் மோதல் வெடித்தது.. பொதுக்குழுவில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ் மிகவும் இறுக்கமான முகத்துடன் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது..
எடப்பாடி பழனிச்சாமியை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள்.. ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

அவமானங்கள்
பிறகு ஜுலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இப்படி அதிமுகவில் தினமும் நொடிக்கு நொடி பரபரப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.. இதனால், கட்சி மறுபடியும் இரண்டாகுமோ என்ற கவலை தொண்டர்களை பீடித்து வருகிறது.. ஓபிஎஸ் விட்டுத்தர வேண்டும் என்று எடப்பாடியும், எடப்பாடி விட்டுத்தர வேண்டும் என்று ஓபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.. ஒற்றைத் தலைமைதான் என்பதில் இபிஎஸ், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓபிஎஸ்ஸும் இந்த நிமிடம் வரை தீவிரமாக இருக்கின்றனர்.

டெல்லி ஓபிஎஸ்
இந்நிலையில், நேற்று இரவே ஓபிஎஸ் டெல்லி கிளம்பி சென்றுள்ளார்.. ஏன், எதற்கு என்று தெரியவில்லை.. ஆனால், எடப்பாடியோ விடாமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்.. இதனிடையே, இரு தரப்பு ஆதரவாளர்கள், தங்கள் கோபத்தை, வன்மத்தை, அதிருப்தியை, வருத்தத்தை ஆங்காங்கே பதிவு செய்து வருகின்றனர்.. நேற்றைய தினம், ஓபிஎஸ் போட்டோக்களை, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அகற்றி எறிந்தனர்.. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கமுதி
ஆனால், இன்றோ, எடப்பாடி பழனிசாமியின், போட்டோக்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, எடப்பாடி படத்தையும் கிழித்தெறிந்துவிட்டனர்.. அங்கு ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருந்த எடப்பாடி பெயரை கூட அழித்துவிட்டு, கோஷம் போட்டனர். அதேபோல, தேனி மாவட்டம் போடியில் உள்ள அதிமுக ஆபீசிலும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ அகற்றப்பட்டுவிட்டது.. அந்தந்த அலுவலக வாயிலில் நின்று எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மை ஊற்றினர்
அலுவலகத்தின் வெளியே, எடப்பாடி போட்டோவை வைத்து, மை ஊற்றி அழித்தனர்... எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி எறிந்த போட்டோவும், வீடியோவும் அதிமுகவுக்குள்ளேயே அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ், என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. அதிமுக கட்சி விவகாரம் குறித்து மோடியிடமும், அமித்ஷாவிடமும் ஓபிஎஸ் பேசியதாகவும், எடப்பாடி மீதான புகார்களை, அவர்களிடம் ஓபிஎஸ் வாசித்ததாகவும், கூறப்படுகிறது..

அமித்ஷா
எனினும், அதிமுகவின் இந்த உட்கட்சி பிரச்சனையை மேலிட தலைவர்கள் விரும்பவில்லையாம்.. கட்சி ஒன்றாக இருந்தால்தான், வாக்கு சதவீதம் அப்படியே கூட்டணிக்கு திருப்ப முடியும், திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அதுமட்டுல்ல, எடப்பாடி பழனிசாமி பக்கம், பெரும்பாலான ஆதரவாளர்கள் தற்போது இருப்பதால், இந்த முறையும் ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி ஆதரவு தருமா என்பது சந்தேகம்தானாம்.. என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

சசிகலா
இந்த நிலையில், இன்று மாலை டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஓபிஎஸ், சென்னை திரும்பினார்.. அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.. டெல்லியில் மேலிடத்தில் விவாதித்தது குறித்து நாளைய தினம், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஒருவேளை டெல்லி பயணம் திருப்தியாக இல்லாவிட்டால், சசிகலா என்ற அஸ்திரத்தை ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.. எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ்ஸின் டெல்லி விசிட், அதிமுக கூடாரத்தை லேசாக அசைத்தே தீரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்,