அந்த "பைபாஸ்" உரையாடல்.. இரவோடு இரவாக ஒப்புக்கொண்ட காங்... திமுக "டீல்" முடிந்தது எப்படி.. டிவிஸ்ட்
சென்னை: கடந்த ஒரு வாரமாக திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது பலரும் அறிந்ததே.. ஆனால் திடீர் என்று திமுக ஒதுக்கிய தொகுதிகளை காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. நேற்று இரவு திடீர் என்று எல்லாம் மாறியதற்கு பின் வேறு ஒரு பின்னணி இருக்கிறது.. அப்படி என்ன நடந்தது?
கடந்த ஒரு வாரமாக.. ஒவ்வொரு நாளும் திக் திக் என்றுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சென்றது. அதிகாரபூர்வமற்ற முறையில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே காங்கிரசுக்கு திமுக பிடி கொடுத்து பேசவில்லை.
காங்கிரஸிடம் இந்த முறை இயல்பை விட திமுக கறார் காட்டியது. இவ்வளவுதான் கொடுக்க முடியும்.. என்று வெளிப்படையாக திமுக கை விரிக்கும் வகையில்தான் பேசியது. இத்தனை நாள் " பூ பாதையில்" சென்று கொண்டு இருந்த திமுகவின் இந்த "சிங்க பாதையை" காங்கிரஸ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
'எங்களுடன் வாருங்கள்'... மநீம பகிரங்க அழைப்பு - மனம் மாறுமா காங்கிரஸ்?

என்ன நடந்தது
இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் திமுகவிடம் காங்கிரஸ் 50 இடங்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டது. அதன்பின் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையில் 40 இடங்களை கேட்டது. ஆனால் திமுகவோ கொஞ்சம் கூட மசியாமல் ஒரேயடியாக 19 இடங்கள்தான் கொடுப்போம் என்று ஷாக் கொடுத்தது.. என்ன திமுக இப்படி பேசுகிறது என்று காங்கிரஸ் தரப்பே ஒரு பக்கம் ஆடிப்போனது.

மசியவில்லை
அதன்பின் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் எதிலும் திமுக மசியவில்லை. அதிக தொகுதியில் போட்டியிட போகிறோம்.. இடம் ஒதுக்குவது கஷ்டம்.. 19 இடங்களைத்தான் கொடுப்போம்.. என்று திமுக கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. காங்கிரஸ் இதனால் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருந்தது. தேசிய தலைமையும் இதில் எதுவும் பேச மாட்டோம் என்று மொத்தமாக கை விரித்துவிட்டது.

பேச மாட்டோம்
இன்னொரு பக்கம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி போன்றவர்களும் மொத்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்வத்தை இழந்தனர். திமுகவின் கறார் குணம் இவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்பின் மெல்ல மெல்ல திமுக 24 தொகுதிகள் வரை இறங்கி வந்தது. ஆனால் இதை ஏற்பதிலும் காங்கிரஸ் தயக்கம் காட்டி 30 தொகுதிகள் கேட்டது.

எத்தனை இடங்கள்
ஆனால் திமுக இதை ஏற்கவில்லை. இதனால் கூட்டணியை விட்டே வெளியேறிவிடலாமா என்றும் கூட காங்கிரஸ் ஆலோசனைகளை செய்தது. மநீம ஒரு பக்கம் தயாராக இருந்தது. ஆனால் மூன்றாவது அணி பாஜகவிற்கு சாதகமாக மாறும்.. இது பெரிய தவறாக முடியும் என்று உடனே மூன்றாவது அணி ஆசையை காங்கிரஸ் கைவிட்டது. இப்படி கூட்டணி பேச்சுவார்த்தை லாக் ஆன நேரத்தில்தான் டெல்லியில் இருந்து போன் வந்து இருக்கிறது.

போன்
டெல்லியை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள், திமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுக தலைவர்கள் ஒன்றாக கான்பிரன்ஸ் மீட்டிங் நடத்தி உள்ளனர். சம்பிரதாயத்தை தள்ளி வைத்துவிட்டு டெல்லியில் இருந்து நேரடியாக "பைபாஸ்" கூட்டம் நடத்தி உள்ளனர். இதில்தான் திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஏற்றது
காங்கிரசின் வாக்கு வங்கி, பழைய தேர்தல் வெற்றிகளை குறிப்பிட்ட திமுக இந்த வாதம் வைத்தது. இதில் 25 இடங்களை சட்டசபை தேர்தலில் ஒதுக்க திமுக முன் வந்தது அதோடு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியை கொடுக்கவும் திமுக முன்வந்துள்ளது. இதை கேட்டு டெல்லி தலைவர்கள் உடனே டீலிங்கை முடிக்கும்படி கூறியுள்ளனர். இதை தொடர்ந்துதான் தமிழக காங்கிரசும் இறங்கி வந்துள்ளது.

ராஜ்யசபா
இதில் திமுக சொன்ன சில முக்கியமான விஷயங்கள்தான் காங்கிரசின் மனமாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள். நேற்று இரவு 11 மணிக்கு பின்தான் இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளது. ஆனால் இரவாகிவிட்டது என்பதால் நேற்று இதில் கையெழுத்திடப்படவில்லை. இதனால் இன்று அதிகார்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.