என்னதான் செய்தார் சஞ்சு சாம்சன்? ஆடாமலே ரசிகர்களை ஜெயித்த சேட்டன்! ஓயாத “சாதிவெறி” பிசிசிஐ ஹேஷ்டேக்
சென்னை: கேரளாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடாமலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தது எப்படி? கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதை அலசுவோம்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டியில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஐபிஎல்-இல் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.
அரசை விமர்சித்த எழுத்தாளருக்கும் 1.5 கோடி வீடு - பெருந்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

வாய்ப்பு மறுப்பு
ஆனால், அவர்களைவிட பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பல ஆண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக அவர் ஒரு சில போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டாலும், பெஞ்சில்தான் அமர வைக்கப்படுகிறார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளித்துவிட்டு அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி நீக்குவது வாடிக்கையாகி இருக்கிறது.

நியூசிலாந்து தொடர்
இதே நிலைதான் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியிலும் நடந்தது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தாலும், லோயர் ஆர்டரிலேயே களமிறக்கப்பட்டார். அதிலும் நிதானமாக ஆடி பந்துகளை வீணடிக்காமல் 36 ரன்களை அவர் சேர்த்தார்.

சாதிவெறி பிசிசிஐ ஹேஷ்டேக்
ஆனால் நேற்று நடைபெற்ற 2 வது போட்டியில் தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டு சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார். அதே நேரம் அவரைவிட குறைவான ரன்களை எடுத்த ரிஷப் பண்ட் அணியில் தொடர்ந்தார். இதுதான் ரசிகர்களை கோபமடைய செய்தது. கடந்த வியாழக்கிழமை சூர்யகுமார் யாதவுக்காக #CastiestBCCI என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்த ரசிகர்கள், நேற்று சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக #SupportSanjuSamson என டிரெண்ட் செய்தார்கள்.

பிபா உலகக்கோப்பை
இந்த நிலையில் கத்தாரில் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியை காண சென்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சஞ்சு சாம்சனை ஆதரித்து பேனர்களை உயர்த்திப் பிடித்தது தற்போது டிரெண்டாகி வருகிறது. இதனை அவர் கேப்டனாக பொறுப்பு வகிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது.

பெருகும் ஆதரவு
இந்திய அணியிலிருந்து புறக்கணிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க சஞ்சு சாம்சனுக்கு ஆதரவும் பெருகி வருவதை இதன் மூலம் பார்க்க முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு கிடைக்கும் ஆதரவை காட்டிலும் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு அபிரிமிதமானதாக இருக்கிறது.

ஏன் ஆதரவு?
இதற்கு முக்கிய காரணம் அவர் மீது ரசிகர்ளுக்கு ஏற்பட்டு இருக்கும் அனுதாபம் மட்டுமில்லை. முதல் தர போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் அவர் ஆடிய விதத்தை ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். தரமான அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் ஆடுகளத்தில் நடந்துகொள்ளும் விதம் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன.

ஐபிஎல்லில் அசத்தல்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ள அவர், ஐபிஎல் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 138 போட்டிகளில் விளையாடி 3526 ரன்களை குவித்து உள்ளார். பெரிய வீரர்களே சதம் அடிக்க திணறும் நிலையில் இதில் 3 சதங்களையும் 17 அரைசதங்களையும் அவர் விளாசி உள்ளார்.

ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு
சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 9 ஆண்டுகளில் 16 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். பலமுறை அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. சில சொதப்பலான ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் அவரை சேர்க்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால், சாம்சனை விட பல முறை சொதப்பிய ரிஷப் பண்டுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது பிசிசிஐ.

ஒருநாள் போட்டிகள்
ஆனால், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சாம்சன் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர், இதுவரை 11 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதில் 10 போட்டிகளில் பேட்டிங் செய்து 330 ரன்களை குவித்து உள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரியும் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகமாக 66 என்ற அளவில் வைத்திருக்கும் இவருக்கு வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஆதரவு
19 வயதில் இந்திய அணியில் அறிமுகமான இவருக்கு தற்போது 28 வயதாகிவிட்டது. இன்னும் தனது இருப்பை தக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறார். எனவே தான் கேரளா, ராஜஸ்தான் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இணையான ரசிகர்களை பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன். எனவேதான் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகளும் டிரெண்ட் செய்யப்படுகின்றன.