60 சீட் பேரம்... கூட்டணி கட்சிகளிடம் சாதிக்கும் பாஜகவின் பார்முலா..ஒர்க் அவுட் ஆகுமா தமிழகத்தில்?
சென்னை: பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை நெருக்கடிக்குள்ளாக்கி சாதிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பார்முலா தமிழகத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல.. கூட்டணி கட்சிகளையும் மிஞ்சி ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியமைக்கும் பாஜகவின் அரசியல் சாணக்யத்தனம்.. தமிழகத்தில் செயல்படுத்துமா? விளைவுகள் எப்படி இருக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவாகவே பாஜகவின் பலம் என்னவென்றால் முதலில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தங்களை எதிர்த்து போட்டியிடும் கட்சியை காலி செய்யும். அத்துடன் அடுத்தடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சிகளின் பலத்தை தன்னுடைய பலமாக மாற்றும் ஒரு கட்டத்தில் கூட்டணி கட்சியை விட அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும்.
கூட்டணி கட்சிகள் வேறு வழியில்லாமல் பாஜகவின் சொல்படியே நடக்க வேண்டிய நிலைக்க தள்ளப்படும். இதுவே கடந்த கால வரலாறுகளில் நாம் பார்த்தவை. தமிழகத்திலும் இதை பாஜக செயல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
லடாக்கில் உயிரிழந்த, ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

மதசார்பற்ற ஜனதா தளம்
ஏனெனில் இதற்கான வரலாறுகளை கர்நாடகாவில் இருந்து தொடங்கினால் சரியாக இருக்கும். கர்நாடகாவில் மிகவும் வலுவாக இருந்த மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து கட்சியை வளர்த்தது. ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து கட்சியை மேலும் வலுவாக்கியது. இப்போது மதசார்பற்ற ஜனதா தளத்தின் பெரும் பலமான பல தொகுதிகள் மொத்தமும் பாஜக வசம் போய்விட்டது. காங்கிரஸ் கட்சியையும் கையோடு காலி செய்தது. 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைத்து வருகிறது பாஜக.

சிவசேனாவின் பலம்
அடுத்ததாக மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டோம் என்றால் அங்கு பலமான கட்சி என்றால் ஒரு காலத்தில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சி தான். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த சரத்பவார் கட்சி வலிமையாக இருந்தது. பல ஆண்டுகளாக சிவசேனா உடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக ஒரு கட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகள் சிவசேனாவையும் மிஞ்சி அதிக இடங்களில் வென்றது. ஆட்சியும் அமைத்தது. முதல்வராக முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே கைகயை பிசைந்து சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் சிவனோவைவிட அதிகம் இடம் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்து வருகிறார். தற்போது மூன்று கட்சிகளையும் விட பாஜக வலிமையாக உள்ளது.

வெற்றி பெற்ற பாஜக
அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த பீகாரை எடுத்துக்கொண்டால் 110 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களில் வென்று உள்ளது அதே வேளையில் 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது அதாவது கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 28 இடங்களில் குறைவாக வென்றுள்ளது. பொதுவாக மக்களின் எதிர்ப்பு மனநிலை ஆளும் கட்சி கூட்டணிகளுக்கு மொத்தமாகவே எதிர்ப்பாக இருக்கும். இங்கு ஆச்சர்யமான மாற்றம் என்னவென்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவும் ஐக்கிய ஜனதா கட்சிக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது தான். தேர்தல் பிரச்சாரங்களில் பீகாரின் வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் செய்த பணிகள் தொடர்பாக எதுவும் பேசாமல் மத்திய அரசின் சாதனைகளை மட்டுமே பெருமளவில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசியதுதான் பாஜக வெற்றிக்கு காரணம். பாஜகவின் கூட்டாளியான லோக் ஜனசக்தி கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி கட்சியின் வெற்றியை பெருமளவில் தடுத்தது. அதனை முறியடிக்க பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

பாஜக ஆட்சி
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அக் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை தங்கள் வசம் கொண்டு வந்து அதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொண்டு தற்போது ஆட்சி செய்து வருகிறது பாஜக. கோவா மற்றும் மிசோரமில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை பெருமளவில் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடித்தது.

அதிர்ச்சியில் கட்சிகள்
தேர்தலில் வெல்லவும் தேர்தலுக்கு பின்பும் ஆட்சியமைக்கவும் பாஜகவினர் மேற்கொள்ளும் இந்த யுக்திகள் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதே நிலைதான் நாளை தமிழகத்திலும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் செயல்கள்
அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து இந்த முறை தேர்தலை சந்தித்தால் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி ஓரளவிற்கு கணிசமாக உயரும் என்றும் ஆனால் அதிமுகவிற்கு பாதகமாக அமையுமா அல்லது சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனெனில் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து பாஜக இதுவரை பெரிய அளவில் பேசவில்லை. வேல் யாத்திரை, மத்திய அரசின் சாதனைகளை பேசி வருகிறார்கள். பாஜகவின் செயல்கள் அந்த கட்சிக்கு செல்வாக்கை அதிகரித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

60 சீட் கேட்கும் பாஜக
பூஜ்ய நிலையில் உள்ள பாஜக ஆளும் அதிமுகவிடம் இந்த முறை 60 சீட் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி 60 சீட்டுகள் வாங்கி போட்டியிட்டு அதில் ஓரளவு வெற்றி பெற்றாலே பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி தான். பாஜகவின் அதிரடிகளால் அதிமுக திகைப்பில் உள்ளது.