என்னை கைது செய்ய போறாங்க... ஸ்டாலினின் குடும்ப ஆட்சிக்கு தலைவர் முடிவு கட்டுவார் - சூர்யா சிவா ட்வீட்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் என்னை கைது செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என அண்மையில் பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார்.
போனால் போகட்டும் போடா! மகனை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத திமுக எம்.பி.திருச்சி சிவா!

திமுக குடும்ப கட்சி
பாஜகவில் இணைந்த பின்னர், திமுகவை குடும்ப கட்சி என்று சாடிய சூர்யா சிவா, ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்குப் பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த சூர்யா சிவா பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார்.

பாஜகவுக்கு சென்றது ஏன்?
ஆளும்கட்சியாக வந்த பிறகும் பொறுத்திருக்குமாறு சொல்வது சரியாக படாததால் பாஜகவுக்கு சென்றுவிட்டேன் என சூர்யா சிவா விளக்கம் அளித்தார். பாஜகவில் தான் பதவியை கேட்கவில்லை என்றும், அவர்களும் எனக்கு எந்த உறுதிமொழியையும் தரவில்லை என்று தெரிவித்த சூர்யா, கட்சியின் தலைமையிடம் பேசிய பிறகு நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருப்பதாக தெரிவித்தார்.

சர்ச்சை பேட்டி
இந்த நிலையில் நேற்று தனியார் யூடியூப் சேனலுக்கு சூர்யா சிவா ஜி ஸ்கொயர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேட்டியளித்தார். அதில், ஜி ஸ்கொயர் போன்று 40 நிறுவனங்கள் இவர்களிடம் இருக்கிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் திருச்சியின் அனைத்து மருத்துவமனைகளும் கே.என்.நேரு கட்டுப்பாட்டில்தான் உள்ளன. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. 4 பேர் சொல்வதைதான் அவர் கேட்பார்." என்றார்.

பரபரப்பு ட்வீட்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை சூர்யா சிவா வெளியிட்டுள்ளார். அதில், "24 மணி நேரத்தில் என்னை கைது செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். எனக்கு இது நடக்கும் என்று தெரியும். உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நன்றி.

ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன
பொய் வழக்குகளை போடுவது திமுகவுக்கு பெரிய விசயம் அல்ல. எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எங்கள் தலைவர் உங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் வரலாற்று சிறப்புமிக்க நாளை ஏற்படுத்துவார்." என பதிவிட்டுள்ளார்.