• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; உருமாறிய ம.நீ.ம. கட்சியை மக்கள் விரைவில் காண்பர்- கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கும் என்று அதன் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் தோல்வியைத் தழுவினார்.

பாலுக்கு காவல் பூனை.. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர் ராஜகோபாலன் பாலுக்கு காவல் பூனை.. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர் ராஜகோபாலன்

சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரும்பாலான 2-ம் நிலை தலைவர்கள், வேட்பாளர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:

மூச்சு உள்ளவரை பாதுகாவலன்

மூச்சு உள்ளவரை பாதுகாவலன்

மாற்றம் என்றும் மாறாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தைத் தேடுபவர்களாய் நாம் உள்ளவரையில் நம் கொடி புத்தொளியுடன் பறந்து கொண்டே இருக்கும். மூச்சு உள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.

பழைய புள்ளி, சுள்ளிகள்...

பழைய புள்ளி, சுள்ளிகள்...

நாம் ஒரு சிறு விதைதான். இந்த விதையை வீழ்ந்தது; வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணை பற்றிவிட்டால் அது காடாகும்; நாளை நமதாகும். உயிரே! உறவே! தமிழே! ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக் கூடாது.

சர்வாதிகாரம் எது?

சர்வாதிகாரம் எது?

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாக தெரிந்திருக்கிறது.

அது ஜனநாயகமே அல்ல

அது ஜனநாயகமே அல்ல

பிறகு காலச் சூழலில், கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைப்பதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீகக் கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகத் தெரிகிறது. அது ஜனநாயகமே அல்ல.

தூர்ந்து போகாது மய்ய கிணறு

தூர்ந்து போகாது மய்ய கிணறு

நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்து போய்விடாது என்பது தற்கால தாகசாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்குப் புரியாது. 40 ஆண்டுகாலம் இறைத்து நீர் பார்த்ததில் உடல் சற்றே இளைத்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம். இதுதான் நம் மூலம். இதுதான் நாம் செய்யப் போகும் விவசாயம் என்று களமிறங்கிவிட்ட நமக்கு நம் நீர்நிலையைச் சுற்றித்தான் வேலை.

நாடோடிகள், வியாபாரிகள்

நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படி அல்ல. ஓரிடம் தங்கமாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள். சில நேரம் திரும்பவும் சென்றவழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் நம் ஊரணியை, நீர்நிலையை அவர்கள் மீண்டும் அசுத்தப்படுத்த விடமாட்டோம் எனும் உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையுடன் தொடர வேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகம் அறிய வேண்டும். தம் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க்குற்றச்சாட்டுகளை நாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. காலம் பதில் சொல்லும்.

தரம் குறைய கூடாது

தரம் குறைய கூடாது

உண்மை எல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்க சொல்கிறீர்களா? என வெகுண்டு குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே! உண்மை பேசு! உறவே! வாதாடு! என்னருமை தமிழே போதும் அதற்கு! மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும்.

உயிருள்ளவரை அரசியல்

உயிருள்ளவரை அரசியல்

கட்சி உள்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்களது ஆதாயத்துக்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள். நம் கொள்கையில் என்றும் தெளிவும் பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

English summary
Actor Kamal Haasan said that "I am in politics for rest of my life".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X