நவீன தீண்டாமை.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடி உணவு விடுதியில் 'நவீன தீண்டாமை' கடைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மாணவர்களிடம், கல்வி நிறுவன நிர்வாக மன்னிப்பு கோரியுள்ளது.
சென்னை ஐஐடியில், சுத்தமான சைவம் என்று ஒரு பிரிவும், சைவம் சாப்பிடுபவர்கள் என்ற மற்றொரு பிரிவும், அசைவம் சாப்பிடுவோர் என்று 3 பிரிவுமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும், என்பதும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நோட்டீசும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது வெளியானது. இதை நவீன தீண்டாமை என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இதுபோன்ற நடைமுறைகளை ஏற்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்று தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விடுதி விவகாரங்கள் செயலாளர் மாணவர்களிடம் மன்னிப்பு கோரி மாணவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். சிரமமின்றி மாணவர்கள் செல்வதற்காகவே தனி வழி அமைக்கப்பட்டதே தவிர ஜாதி வெறுப்பாட்டிற்கு அல்ல. ஹோட்டல் உணவு வழங்கும் தனியார் நிறுவனம் கேட்டதாலேயே இத்தகைய முடிவில் ஈடுபட்டதாகவும் விடுதி கண்காணிப்பு குழு எந்த அறிவுறுத்தலையும் இது தொடர்பாக வழங்கவில்லை எனவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.