சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த எட்டில் நீ இருக்க புரிஞ்சுக்கோ.. ரஜினிகாந்த்தின் ஒத்த பேட்டி.. மொத்தம் 8 விதமான ஏமாற்றங்கள்!

ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் விளைவுகள் ஏராளமானவை

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சிக்கோ-ன்னு பாட்சா பாய் சொல்லி இருந்தது நம்மால் மறக்க முடியாது... ஆனால் ஒத்த பேட்டியால் மொத்தம் எட்டு விதமான கற்பனை கோட்டைகள் தகர்ந்து போயுள்ளன என்பதை வலியுறுத்த வேண்டி உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில்தான் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.. செய்தியாளர்கள் சந்திப்பு என்றால் பொதுவாக கேள்வி - பதில் நிகழும்.

அதனால் இதை செய்தியாளர்கள் சந்திப்பு என்று சொல்ல முடியாது.. அவர் மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார். அந்த வகையில் ரஜினிகாநத் பேசியதில் இருந்து தெளிவாகி உள்ள எட்டு விஷயங்கள்தான் இவை!

அதிமுக

அதிமுக

முதலாவதாக, அதிமுக தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.. ஏற்கனவே அதிமுகவில் 2 அமைச்சர்கள், 3 எம்பிக்கள் ரஜினி பக்கம் வருவதாக சொல்லி கொங்கு மண்டல ஈஸ்வரன் ஆருடம் சொல்லி இருந்தார்.. அவை இப்போது புஸ்ஸென்று ஆகிவிட்டது.. யாராவது ரஜினி பக்கம் போய்விடுவார்களோ என்று எடப்பாடியார் தரப்பு லேசான நடுக்கத்தில் இருந்த நிலையில், இப்போது நிம்மதி அடைந்துள்ளனர். (ஆனால், ராஜேந்திர பாலாஜி பற்றி மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியாது)

திமுக

திமுக

இரண்டாவதாக, ரஜினி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் இந்துத்துவ வாக்குகளை தன் பக்கம் இழுத்து கொண்டுவிடுவார் என்று திமுக தரப்பு பயந்தது.. இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு அத்தனை கோடி கொடுத்து, தங்கள் பக்கம் இழுத்து வந்து ஆலோசனை கேட்டது.. இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்பதை பிரச்சாரங்களில் கொண்டு செல்லலாம் என பிகே தரப்பு பிளான் செய்ய காரணமே ரஜினிகாந்த்தான்.. இப்போது திமுகவுக்கு ரூட் கிளியர் ஆகி.. தாங்கள் பயந்தது எல்லாமே கற்பனை என்று ஆகிவிட்டது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

மூன்றாவதாக, தெரிந்தோ, தெரியாமலோ அதிமுக-திமுக தரப்பை ரஜினிகாந்த் ஜாம்பவான்கள் என்று சொல்லிவிட்டார்.. அடிமை அரசு, பாஜகவின் நிழல் அரசு என்று இதுநாள் வரை கேட்டு வருத்தப்பட்டு இருந்த நிலையில், ஜாம்பவான் என்று ரஜினி சொன்னது அதிமுகவினருக்கு பூரிப்பை தந்துள்ளது.. இதேதான் திமுகவும், கலைஞருக்கு பிறகு பெரிய எழுச்சி திமுகவில் இல்லை என்ற மாயையை ரஜினிகாந்தே உடைத்துவிட்டு போயுள்ளார்.. ஸ்டாலின் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளதைகூட, திமுக தரப்பு பிளஸ் ஆகவே எடுத்து கொண்டுள்ளது.

ராமதாஸ்

ராமதாஸ்

நான்காவதாக, பாமக தரப்பு... எப்படியும் அன்புமணியை ஒரு பெரிய பொறுப்பில் உட்கார வைத்துவிட வேண்டும் என்பது டாக்டர் ராமதாஸின் நீண்ட கால ஆசை.. அந்த வகையில் ரஜினியை வைத்து ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தது.. எத்தனையோ சலசலப்புகள், யூகங்கள் வந்தாலும், ரஜினி கூட்டணி குறித்து மட்டும் வாய் திறக்காத நிலையில், பாமக சற்று ஏமாற்றமே அடைந்துள்ளது என்று சொல்லலாம்.. இனி பாமக தரப்பு டிமாண்டை ஓவராக வலியுறுத்தவும் முடியாது.. அதிமுகவை நிர்ப்பந்திக்கவும் முடியாது.. அதே சமயம் இனி அதிமுகதான் தங்களுக்கு எப்போதுமே என்ற நிலைக்கும் ரஜினி பேச்சு அமைந்துள்ளது. இதனால் அதிமுக தரப்பும் நிம்மதி அடைந்தாலும் பாமக தரப்புக்கு இது புஸ்ஸுதான்!

பாஜக

பாஜக

ஐந்தாவதாக, பாஜகவினர்.. இவர்களது அழுத்தம் காரணமாகவே இப்போதைக்கு கட்சியை ஆரம்பிக்கவில்லை என்று ரஜினி அறிவித்ததாக ஒரு பேச்சு உள்ளது.. தங்கள் பக்கம் ரஜினியை இழுக்க நீண்ட கால முயற்சியை பாஜக எடுத்து வந்தது.. பொன்.ராதா முதல் எச்.ராஜா வரை ரஜினியை விட்டுக் கொடுக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் தாங்கி வந்தனர்.. ஆனால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதில் தீவிரம் காட்டவும்தான், பாஜக அழுத்தம் தந்ததாக சொல்லப்பட்டது.. இப்போதைக்கு கட்சி ஆரம்பிக்கவில்லை என்று சொன்னதால் பாஜக தரப்பு குஷியாகவே உள்ளது.. அதே சமயம் பாஜக நாராயணன், குருமூர்த்தி, அர்ஜுன் சம்பத் போன்ற ஆதரவாளர்களின் நிலைதான் கேள்வி குறியாகி உள்ளது.

அமமுக

அமமுக

ஆறாவதாக டிடிவி தினகரன்.. அதிமுகவுடன் கூட்டணி முடியவே முடியாது என்று இப்போதுவரை கங்கணம் கட்டி கொண்டுள்ளார் தினகரன்.. ராயப்பேட்டை அதிமுக ஆபீசுக்கு பக்கத்திலேயே அமமுக ஆபீஸ் திறந்து அவர்களுக்கு கெத்து காட்டி வருகிறார்.. சமீபத்தில்கூட ஒரு வலுவான கூட்டணியுடன்தான் தேர்தலைச் சந்திக்கும் என்று தினகரன் சொல்லியிருந்தார்... அதற்கேற்றார்போல் ரஜினி தரப்புடன் பேச்சுவார்த்தை 2 முறை நடத்தப்பட்டதாக கூட சொல்லப்பட்டது.. ஆனால் அமமுகவின் அந்த கனவிலும் மண் விழுந்துள்ளது!

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

ஏழாவதாக, கமல்ஹாசன்... பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் மநீம தலைவர் கமல்ஹாசன் ரஜினியுடன் இணைவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.."தேவைப்பட்டால் ரஜினியுடன் கரம் கோக்கவும் தயார்" என்று கமல்ஹாசன்தான் சொன்னாரே தவிர, ரஜினிகாந்த் சொல்லவே இல்லை.. ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்ககூடாது என்று விடாப்பிடியாக உறுதியாக இருக்கும் கமல், ரஜினியை மலையாக நம்பினார்... ஆனால் கமலின் ஆசையும், எண்ணமும் நொறுங்கி போய்விட்டது.

மன்ற நிர்வாகிகள்

மன்ற நிர்வாகிகள்

இறுதியாக, ரஜினியின் தீவிர ரசிகர்கள்.. மன்ற நிர்வாகிகள்.. மாவட்ட செயலாளர்கள்.. இவர்கள்தான் பாவம் என்று சொல்ல தோன்றுகிறது.. எத்தனையோ காழ்ப்புணர்ச்சிகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் என்றாவது தங்கள் தலைவன் கட்சியை ஆரம்பித்துவிடுவார், தங்களை கைவிடாமல் காப்பாற்றி விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. "ஊருக்குப் போயி ரசிகர்கள்கிட்டேயும், நிர்வாகிகள் கிட்டேயும் என்ன சொல்றது? இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நாங்க போன மீட்டிங்லேயே சொன்னோமே... ஆனா, தலைவர் ஒரு முடிவு எடுத்துட்டுத்தான் போன மீட்டிங்கையே நடத்தியிருக்காரு" என்று நொந்து புலம்பி வருகிறார்கள்.

மீண்டும் பேட்டி

மீண்டும் பேட்டி

ஆக மொத்தத்தில் எட்டு விதமான ஏமாற்றங்களே இந்த ஒரு பேட்டியால் வந்துள்ளது. அதேசமயம், ரஜினியை குறித்து மதிப்பிட்டு விடவும் முடியாது. அவரே இந்த செய்தியாளர்கள் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மக்களின் மன ஓட்டத்தை பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லியுள்ளார்.. எனவே எப்போது வேண்டுமானாலும் இன்னொரு பிரஸ்மீட் வைத்து வேறொரு அதிரடியைக் காட்டவும் அவர் தயங்க மாட்டார்.. அதை மறுப்பதற்கும் இல்லை.!

English summary
An interview by Rajinikanth has left many party leaders dissatisfied
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X