“ஒரு நன்றி.. ஒரு முக்கிய கோரிக்கை" முதல்வர்-ஆளுநர் சந்திப்பின்போது நடந்தது என்ன?: அடுத்த பிளானே வேற!
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், திமுக அரசின் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் நேற்று மாலை ஆளுநரை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பற்றிய பேச்சுகள் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முதலில் நன்றி சொல்லியுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு- நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தல்!

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்த மோதல் போக்கு
முன்னதாக, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பியனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரை மாற்றக் கோரி திமுக எம்.பிகள் நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வைத்த தேநீர் விருந்தையும் தமிழக அரசு புறக்கணித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

நன்றி சொன்ன முதல்வர்
இந்நிலையில் நேற்றைய சந்திப்பின்போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் உருவாக்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நன்றியுடன் தொடங்கிய இந்தச் சந்திப்பு கோரிக்கைகளாக நீண்டுள்ளது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்
மேலும், இந்தச் சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்ளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமசோதா, பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரியுள்ளார்.

முக்கியமான மசோதா
அதிலும் குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும் என ஆளுநர் ரவியிடம் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின். இந்த மசோதாவே ஆளுநருக்கு செக் வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான். பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும், இணை வேந்தராக சுகாதாரத்துறை அமைச்சரும் இருப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் இந்த மசோதா.

அழுத்தம் கொடுத்த ஸ்டாலின்
அட்மிஷன்கள் தொடங்கும் நேரம் என்பதால் இந்த மசோதாவை இழுத்தடிக்கக் கூடாது என்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின். தனது அதிகாரத்தைப் பறிக்கும் இந்த மசோதாவை ஆளுநர் நிராகரிப்பார் என்றே கூறப்படுகிறது. வேந்தராக தனது இடத்தை உறுதி செய்யும் வகையில் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தி திருப்பி அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்து என்ன?
பாஜக அரசின் கொள்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு ஆளுநர் குடைச்சல் கொடுத்து வருகிறார். அவரது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளையும் ஈடுபடுத்தி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என்றும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனால் விரைவில் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனான சந்திப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.