கருணை காட்டிய வருணபகவான்... சென்னையை குளிர்வித்த மழை.. பரவலாக பெய்ததால் மக்கள் பரவசம்
சென்னை: சென்னையில் சில இடங்களில் இன்று இரவு மழை பெய்தது. அண்ணாநகர், சாலிக்கிராமம், மதுரவாயல், முகப்போர், வளசரவாக்கம், போரூர் உள்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் பரவசமடைந்தனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கோடைக்காலத்தை போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசியில் சில இடங்களில் மழை பெய்கிறது.
இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவில் மட்டுமே நேற்று விழுந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
பாஜகவுக்கு எதிர்ப்பு! டீஸ்டா செதல்வாட்டை விடுவிக்ககோரி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்நிலையில் ஜூன் 28 ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரகை்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜூன் 29, 30 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மழை
மேலும் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று இரவு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

எந்தெந்த இடங்களில் மழை
அதன்படி அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, சூளைமேடு, கேகே நகர், வடபழனி, சாலிகிராமம், அசோக்நகர், வரசரவாக்கம், போரூர், மதுரவாயல், முகப்பேர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவில் மழை பெய்ததால் மண் குளிர்ச்சியடைந்துள்ளது. பரவலாக பெய்த இந்த மழையால் மக்கள் பரவசமடைந்தனர். இருப்பினும் இந்த மழை தொடர்ந்து சில நாட்கள் பெய்தால் சென்னையில் இதமான சூழல் நிலவும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே ஜூன் 29, 30ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.