கையெழுத்தே இல்லயே.. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது.. ஓ பன்னீர் செல்வம் பரபர அறிக்கை
சென்னை: ‛‛சென்னையில் நாளை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்தின்றி கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சி தொண்டர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது'' என ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கியுள்ளது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதனை விடுவதாக இல்லை.
இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் முற்றியது. கூட்டத்தில் இருந்து பாதியில் கோபத்தோடு வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதையடுத்து மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.

சொந்த ஊரில் ஓ பன்னீர் செல்வம்
இதையடுத்து டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம் கட்சி விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று சென்னை திரும்பிய ஓ பன்னீர் செல்வம் இன்று தேனி மாவட்டத்துக்கு சென்றார். மேலும் அவர் தொண்டர்களிடம் நீதி கேட்டு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக தான் இன்று மதுரையில் இருந்து தேனி சென்ற ஓ பன்னீர் செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் திரளாக குவிந்து வரவேற்றனர்.

பெயரின்றி அறிக்கை
இந்நிலையில் தான் திடீரென்று ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் நாளை (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில்லாமல் தலைமை நிலைய செயலாளர் என பெயர் பொறிக்கப்பட்ட கடிதம் வாயிலாக அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு
இதற்கு ஓ பன்னீ்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரவில் அவர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: அதிமுக சட்ட, திட்ட விதி 20A (V)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதலுமின்றி கையொப்பம் இல்லாமல் தலைமை நிலைய செயலாளர், தலைமை கழகம் என்ற பெயரில் சட்ட திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கிணங்க 27.06.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தொண்டர்களை கட்டுப்படுத்தாது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமாக ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இபு்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம் கட்சியின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சியின் சட்ட திட்டத்துக்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணை்ப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கட்சி, தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.