• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஐடி ரெய்டுகளும்.. அதகளம் செய்யும் மீடியாக்களும்.. காதைக் கிழிக்கும் பிரேக்கிங் செய்திகள்!

|
  Money Ceased from Thalapathy Vijay Home | AGS Entertainments | Master Shooting

  சென்னை: மீடியாக்களுக்குத் தீனி போடுபவர்களில் ஐடி எனப்படும் வருமான வரித்துறையினருக்குத் தனியிடம் உண்டு. 'டெட் லைன்'' நெருங்கிய நிலையில் தலைப்புச் செய்திக்கு ஏற்ற சரக்குக் கிடைக்காததால் மீடியா வட்டாரம் திணறிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக ஐ.டி கைகொடுக்கும். அப்புறமென்ன ஒரே அதகளம், அமர்க்களம்தான்!

  '' இன்னாரது வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்'' என நாள் முழுக்க ஹை டெசிபலில் டிவிக்கள் செய்திகளை அலறவிடும். தலைப்புச் செய்தியின் முதல் பகுதி 'ஐடி அதிரடி சோதனை' என்பதாக இருந்தால், நிறைவு பகுதி நிச்சயம் 'முக்கிய ஆவணங்கள் பறிமுதல்' என்பதாகவே இருக்கும்.. மீடியாக்களைப் பொறுத்தவரை இது எழுதப்படாத விதி பாஸ்!

  income tax raids and tv breaking news

  முக்கிய ஆவணங்கள் என நாள் முழுக்க அலறும் மீடியாக்கள், அந்த முக்கிய ஆவணங்கள் எவையெவை, அதன்மூலம் எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி இதுவரை ஒரு தடவையாவது வாய்திறந்ததாக வரலாறு இல்லை. ஐடி ரெய்டுக்கு அழுத்தம் கொடுக்கவே முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் நிஜம். சரி நடப்பு விஷயத்திற்கு வருவோம்!

  நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்-யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் விசாரணை, அதனைத் தொடர்ந்து அவரது வீடுகளில் நடைபெற்ற ரெய்டுகள்தான் இன்றைய நாளிதழ்களில் பிரதான செய்தியாக இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல 'முக்கிய ஆவணங்கள் பறிமுதல்' தவிர வேறு சில செய்திகளும் இது தொடர்பாக றெக்கைக் கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன.

  பொதுவாக அந்த காலங்களில் வரி ஏய்ப்பு மட்டுமே ஐடி ரெய்டுகளின் பின்னணியாக இருக்கும். ஆனால் இப்போதைய ஐடி ரெய்டுகளின் பின்னணியில் வரி ஏய்ப்பு தவிர ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.வி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடி பேசினார் அந்த ஆடிட்டர். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்குள் ஆடிட்டர் தொடர்புடைய நிறுவனத்தில் அதிரடி ரெய்டு. அந்தளவிற்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மாதிரி தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்... ஐடி ஆபிசர்ஸ்.

  அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல்.. ரூ. 300 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ஐடி அறிக்கை

  ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் தெலுங்கு பட காட்சி போல துணை ராணுவப் படையினர் சகிதம் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்தனர் ஐடி அதிகாரிகள். மீடியாக்களின் லைவ் ரிலேவைப் பார்த்த மக்கள் ஆடிப் போனார்கள். ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துவிட்டதா என பதறினார்கள்.

  அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அலுவலகத்தில் தொடங்கிய ரெய்டு படலம் அண்ணாநகரிலுள்ள அவரது வீடு வரை நீடித்தது. மீடியாக்களின் அலறல் சத்தம் காதைக் கிழித்தது. வழக்கம்போல முக்கிய ஆவணங்களும் (!) பறிமுதல் செய்யப்பட்டன' கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. குறிப்பிட்ட அந்த ரெய்டில் என்னென்ன கைப்பற்றப்பட்டன, முறைகேடுகள் தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றி இதுவரை சிறிய அளவில் கூட செய்தி கிடையாது.

  அது மட்டுமா!

  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா, மற்றும் தினகரன் ஆகியோருக்கு நெருக்கமான 100க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் ஒரே சமயத்தில் ஐடி ரெய்டு நடைபெற்றது. சுமார் 500 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டனர். பிக், பிளாஷ் நியூஸ்களை தெறிக்கவிட்டு செய்தி சேனல்கள் தமிழகத்தை பரபரப்பாக்கின.

  ரெய்டுகளுக்கு கார்களை ரகசியமாக தேர்வு செய்ததில் தொடங்கி, பாதாள அறை, தங்கக் குவியல் என விதவிதமாக செய்திகள் சிறகடித்தன. தமிழகத்தின் மூலை முடுக்கிலெல்லாம் இது பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால் இந்த ரெய்டுகளில் என்ன பிடிபட்டன என்பதும் இதுவரை மூடுமந்திரமாகவே உள்ளது. ராணுவ ரகசியம் என்பார்களே...அதையெல்லாம் மிஞ்சிவிட்டது ஐடி ரகசியம்.

  சரி மீண்டும் நடப்பு விஷயத்திற்கு வருவோம்.

  ''விஜய்-யிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் உள்நோக்கம் இல்லை. இது வருமான வரித்துறையினரின் வழக்கமான நடவடிக்கையே'' என ஒரு சாரார் முட்டுக்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ '' இல்லை... இல்லை முழுக்க உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. சோழியன் குடுமி மட்டுமல்ல, ஐடி குடுமியும் சும்மா ஆடாது'' என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

  விஜய் விவகாரத்தில் இவ்வளவு கெடுபிடி காட்டும் ஐடி, ரஜினி விவகாரத்தில் காட்டிய தாராளம் இங்கே ரொம்பவே கவனிக்கத்தக்கது. வருமான வரியை முறையாகக் கட்டாததால் ரஜினிக்கு அபராதம் விதித்தது ஐடி. இதை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அசரவில்லை ஐடி. உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. நீண்ட காலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

  ஆனால் One fine day ஐடி துறை தனது வழக்கை வாபஸ் பெற்றது. 1 கோடிக்கும் குறைவான அபராதம் என்பதால் வழக்கு தேவைப்படவில்லை என்று அது கூற, நீதிமன்றமும் ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது. இப்படியாக தப்பினார் ரஜினிகாந்த்.. ஆக மொத்தத்தில் கடவுள் பாதி, மிருகம் பாதி என்கிற மாதிரி ஐடி ரெய்டுகளும், தொடர் நடவடிக்கைகளும் சீரியசும், காமெடியும் சேர்ந்த கலவையாகவே இருக்கின்றன.. பல நேரங்களில் புரியாத புதிராகவும் உள்ளன.. புவனா ஒரு கேள்விக்குறி போல!

  - கௌதம்

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Media houses become jubilant whenever IT raids are launched in VIPs house. Not it is Vijay who is in the eyes of the Media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X