சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

Google Oneindia Tamil News

சென்னை: ஜமாத்துல் உலமா சபையின் அறிவுறுத்தல் படி வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய பெருமக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மைதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லீம் சமுதாயம் எல்லா சோதனை காலகட்டங்களிலும் முன்மாதிரி சமுதாயமாக திகழ்ந்துள்ளதாகவும், அந்த வகையில் இப்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கை மன ஓர்மையுடன் ஒத்துழைப்பு தருவது கட்டாய கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரடங்கு

ஊரடங்கு

பேரன்பிற்கும், பெருமரியாதைக்குமுரிய பெரியோர்களே, சகோதர - சகோதரியரே! உங்கள் அனைவர் மீதும் எல்லாம்வல்ல இறைவனின் பேரருள் என்றென்றும் நின்று நிலவட்டுமாக என நான் பிரார்த்தித்தவனாக, ஒரு சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.

கொரோனா தொற்று இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற நிலையில், உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்தான் நமது இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் உயிர், உடல் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடு மத்திய - மாநில அரசுகள் இந்த ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.

ஒத்துழைப்பு தருக

ஒத்துழைப்பு தருக

வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வரை இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் நாட்டு மக்களாகிய நமது நன்மைக்கே என்பதையும், நம்மை ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது என்றும் கருதி, நாம் அனைவரும் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு, காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு, அரசு அதிகாரிகள் - மருத்துவர்களின் வேண்டுகோள்களுக்கு மன ஓர்மையுடன் ஒத்துழைப்பளிக்க வேண்டியது இன்றைய நமது கட்டாயக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நாம் ஒருபோதும் கடுகளவும் மாறியோ, எல்லையைத் தாண்டியோ செல்லக் கூடாது என உங்கள் அனைவரையும் நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

வீட்டில் தொழுகை

வீட்டில் தொழுகை

முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கை - கால்களைக் கழுவுவது, உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்து கொள்வது என்பனவெல்லாம் அன்றாடம் ஐவேளைத் தொழுகைக்காக நாம் செய்து வரும் பழக்கவழக்கம்தான் என்றாலும், அரசாங்கம் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் வழங்கும் இதுபோன்ற ஆலோசனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, எந்தச் சூழலிலும் நாம் விட்டிராத வாராந்திர ஜும்ஆ தொழுகையைத் தவிர்க்கவும், அன்றாடம் பள்ளிவாசல்களில் நாம் தொழும் ஐவேளைத் தொழுகைகளையும் அரசு ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெறும் வரை வீட்டிலேயே தொழுமாறும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நமக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது. அதற்கும் முழுமையாகக் கட்டுப்பட வேண்டியது நமது கடமையாகும்.

உதவிகள்

உதவிகள்

"அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க, தான் மட்டும் புசிப்பவன் என்னைச் சேர்ந்தவனல்ல!" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பொன்மொழி இந்தக் காலச் சூழலில் நம் அனைவருக்கும் நினைவுக்கு வந்திருக்கிறது. அதன்படி, தற்போதைய ஊரடங்கு உத்தரவால் வீடடங்கி இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான நமது அண்டை வீட்டார், அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பனவற்றை ஆய்ந்தறிந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. அதை உணர்ந்தவர்களாக நம் சமுதாயம் அந்த அறப்பணிகளைத் தொடர்ந்து பரவலாகச் செய்து கொண்டிருக்கிறது.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

இவ்வாறாகச் செய்யும் உதவிகளை நாமாகவே சுயமாகத் திட்டமிட்டுச் செய்யாமல், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விபரங்களைக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், அந்தந்தப் பகுதிகளின் காவல்துறை உயரதிகாரிகள், அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, அந்த வழிகாட்டலின் படி செய்துகொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் நாமே இந்த உதவிகளைச் செய்வது என்பதுவும் இயலாத ஒன்று.

அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

அரசு அறிவித்துள்ள உதவித்தொகை என்பது போதுமானதாக இல்லை. எனவே, குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாயாவது உதவித்தொகையாக ஒதுக்கியளிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். இதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு, ஆவன செய்திட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

முன்மாதிரி

முன்மாதிரி

இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாய மக்களான நாம் இந்த நாட்டில் எல்லா வகையான சோதனைக் காலகட்டங்களிலும் முன்மாதிரி சமுதாயமாக இருந்து வந்திருக்கிறோம். அதே முன்மாதிரியைப் பின்பற்றி - அமைதி காத்தல், அரசு வரம்புகளுக்குள் நின்று அனைவருக்கும் உதவி செய்தல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடாமல் கண்காணிப்போடு இருத்தல் என நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒற்றுமை உணர்வோடு ஆதரவுக் கரத்தைத் தொடர்ந்து நீட்டியுதவ வேண்டும் என உங்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம்வல்ல இறைவன் இப்படிப்பட்ட சோதனையான காலகட்டத்திலிருந்து நம்மையும், இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும், உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களையும் விடுவித்து, அனைவருக்கும் நல்ல வாழ்க்கைச் சூழலை விரைந்து தர வேண்டும் என அவனிடத்தில் நான் உளமாரப் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அதுபோலப் பிரார்த்திக்குமாறு உங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

English summary
indian union muslim league national president khader mohideen open letter to islamic peoples
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X