சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிர் எங்கே போகிறது?... மறக்க முடியாத மாரிமுத்து தாத்தா!

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மிகப் பெரிய புதிர்.. பதில் இல்லாத கேள்வி என்ன என்றால்.. மரணத்திற்குப் பிறகு நமக்கு என்னாகும்.. நாம் எங்கே போவோம்.. இதுதான்.

மரணங்கள் ஏன் நிகழ்கின்றன என்ற கேள்விக்கு பதில் என்னவாக இருக்க கூடும். மரணங்கள் இல்லை என்றால் ஒருவேளை மக்கள் தொகை கூடி இந்த பிரபஞ்சம் தாங்காது என்று தான் கடவுள் மரணத்தை வடிவமைத்திருக்க கூடும் என்று பலர் சொல்வது என்னவோ எதார்த்த உண்மையாக இருக்கலாம். அனால் மரணிப்பவர் நமக்கு பிரியமானவர்கள் என்கிற பட்சத்தில் மட்டும் இந்த உண்மையை ஏனோ மனசு ஏற்று கொள்வதில்லை.

நம்மை விட்டு ரொம்ப தூரம் போன உயிர்களை பற்றி மனசு எப்போதும் அவ்வப்போது சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி நான் சந்தித்த மரணங்கள் பற்றிய என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

கிளி வீடு தாத்தா

கிளி வீடு தாத்தா

சிறுவயதில் மரணம் என்றால் ஒரு பூச்சாண்டி மாதிரி தான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறேன். யமன் வருவானா அவன் வந்து பாசக்கயிறு காட்டி அவர்களை இழுத்துப் போவானா என்று எல்லாம் எனக்கு தெரியாது. எந்த மரணத்துக்கும் அப்பா என்னை அழைத்து போவதில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியாது. ஏதாவது துக்க சம்பவம் என்றால் எப்பவும் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது தான் வழக்கம். அப்போ அஞ்சாம் கிளாஸ் இருக்கும். எங்க வீட்டு பக்கத்திலே ஒரு மரணம் . வயசான தாத்தா. நாங்க ஒரு சின்ன ஓட்டு வீடு வாடகைக்கு கொடுத்து இருந்தோம் . அந்த வீட்டுக்கு பெயர் கிளி வீடு . கிளி வீடு என்றதும் கிளி வளர்க்கிறாங்க என்று தானே நினைச்சிருப்பீங்க இல்ல. அந்த வீட்டுல இருந்த அக்கா பேரு கிளி. அதனாலே அது கிளி வீடு ஆச்சு. வருஷங்கள் போய் இப்போ அதில் எத்தனையோ குடும்பங்கள் மாறி மாறி வந்தாச்சு. அனால் அது இப்போதும் கிளி வீடு தான் எங்களுக்கு. அந்த வீட்டில வாடகைக்கு இருந்தவங்க, வீட்டில உள்ள தாத்தா தான் இறந்து விட்டார் என்று வந்து சொல்லிட்டு போனாங்க..

அம்மாவின் அதிர்ச்சி

அம்மாவின் அதிர்ச்சி

அம்மா அப்படியாம்மா என்று முகம் வாட கதவை பிடித்து கொண்டு கேட்ட விதம் என்னை எதோ செய்தது. தான் ஆக்கிக் கொண்டிருந்த மீன்குழம்பை பிள்ளைகளுக்கு வச்சுட்டு போய் விடலாம் என்று அடுப்பங்கரைக்குள் நுழைந்தார். குழம்பை வச்சுட்டு மாமி வீட்டில குடுத்துட்டு போறேன். நீங்க சாப்பிட்டு அங்கே விளையாடுங்க என்று சொன்னார். வழக்கமா விளையாட்டு சுவாரஸ்யத்துக்காக சரிம்மா சொல்லும் நான் இன்று எதோ நினைப்பில் அம்மா நானும் வரேம்மா என்றேன். நீசின்ன பிள்ளை அங்க வேண்டாம் என்று அம்மா சொன்னா. எனக்கு தாத்தாவைப் பார்க்கணும்மா என்று கண்ணை உருட்டிக் கொண்டு சொன்னேன். அம்மா ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்து விட்டு ம் அங்க வந்து அமைதியா இருக்கணும் னு சொன்னா. நான் வேகமா தலையாட்டினேன்.

தாத்தா

தாத்தா

தாத்தாவை பார்க்க நானும் கிளம்பினேன். எங்கு போனாலும் எனக்கு ரெண்டு கொண்டையிட்டு, மையிட்டு என்னை தேவதை மாதிரி அலங்கரிக்கும் அம்மா அன்று என்னை எதுவும் அலங்கரிக்கவில்லை. அம்மா புதுபாவாடை என்றேன் . வேண்டாம் இது போதும் வா னு அம்மா சொன்னா. ஏன் என்று நினைத்துக்கொண்டே செருப்புக்குள் கால் நுழைத்தேன் . எப்படியோ தாத்தாவைப் பார்க்க கூட்டிட்டு போறா அது போதும்னு நெனைச்சுகிட்டே நடந்தேன். (நான் பார்க்க போறது தாத்தாவை அல்ல தாத்தாவின் பிணம் என்பது அந்த வயசுக்கு புரியவில்லை போல . நான் சந்திக்க போற அனுபவத்தில், அனுபவம் இல்லாமல் அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.)

மாரிமுத்து தாத்தா

மாரிமுத்து தாத்தா

முத்து தாத்தா என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆமா மாரி முத்து தாத்தா அவரை முத்து தாத்தா னு தான் நான் கூப்பிடுவேன். தினசரி அவரைப் பார்ப்பேன். தினம் மாலை நான் கிளி அக்கா கூட விளையாடும் போது அவர் அப்படி டீ கடைக்கு போய் ஒரு சாயா குடிச்சிட்டு வரேன்னு போவாரு பாரு . எனக்கும் கிளி அக்காக்கும் முகம் ப்ரகாசமாகிடும். வரும்போது நிச்சயம் அவர் கையில் ஏதாவது இருக்கும். ஒரு நாள் கடலைமிட்டாய் , ஒரு நாள் பிஸ்கட் சில நாள் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆரஞ்சு மிட்டாய். அதை விட ரொம்ப பிடிச்ச தேன் மிட்டாய் என்று பாசமாய் கொண்டு தருவார். சாப்பாடுங்க பிள்ளைகளா என்று அவர் திணிக்கும் காகித பொட்டலத்துக்காக நாங்க ரோட்டோரத்தில் விளையாடியபடியே கண்ணை உருட்டி கிட்டு நிற்போம்.

அக்காவின் வீடு

அக்காவின் வீடு

கிளி அக்கா வீடு எங்க வீட்டுக்கு ரொம்ப கிட்ட தான். ரொம்ப தூரமெல்லாம் இல்ல . ஒரு சின்ன முடுக்கு அதை தாண்டினா அவங்க வீடு அவ்வளவு தான் வந்தாச்சு. வீட்டு வாசலில் அவ்வளவு கூட்டம். நாங்க பாண்டி ஆடும் இடம் எல்லாம் தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு நெறய முகங்கள். அந்த சின்ன கேட்டை திறந்திட்டு உள்ள போனோம். அந்த பெரிய நெடிய நாவல் பழ மர நிழலில் நெறைய நாற்காலி போட்டு நின்ன மனிதர்களில் ஒரு குரல் ரொம்ப நல்ல மனுஷம்பா என்று சொன்னது கேட்டது. ஆமா தாத்தா நல்ல தாத்தா ரொம்ப ரொம்ப நல்லா தாத்தா என்று எனக்குள்ளே முனுமுனுத்துட்டு நாங்க தினம் ஓடி பிடிச்சு விளையாடும் மரத்தின் அடியை கடந்து அந்த ஓட்டு வீட்டின் படிகளில் கால் வைத்தோம்.

கிளி அக்காவின் அம்மா

கிளி அக்காவின் அம்மா

அம்மாவின் கையை யாரோ பிடித்துக் கொண்டு என்னன்னவோ பேச ஆரம்பித்து விட்டார்கள். அம்மா கிளி அக்காவின் அம்மாவிடம் போய் உட்கார்ந்து அவளை சமாதானம் பண்ண முயற்சித்து கொண்டிருந்தாள். நான் கதவின் அருகில் இருந்து தாத்தாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். தாத்தா எப்போதும் போடும் லுங்கி போடலை. அதை விட ரொம்ப அழகா ஜம்முனு ஒரு பட்டு வேட்டி கட்டிருக்கிறார் என்று நினைத்து கொண்டே பட்டு ஜரிகையை பார்த்து ரசிக்கும்போது தான் உறுத்தியது தாத்தாவின் கால் பெருவிரல்கள் எதையோ வச்சு கட்டப்பட்டிருக்கிறது.

 மெளனத்தில் தாத்தா

மெளனத்தில் தாத்தா

எப்போதும் சிரித்த முகமாய் வளைய வரும் தாத்தாவின் மவுன கோலம் என்னை என்னமோ செய்தது . படுத்தே இருக்கும் தாத்தா எழும்ப மாட்டார் னு தெரிஞ்சு அவர் முகத்தின் அருகே இருந்த மெழுகுவர்த்தியும் ஊதுபத்தி புகையயும் சொல்லாமல் சொல்லிப் போனது. அவர் முகத்தை பாத்தேன். அம்புட்டு தான். பொல பொலனு கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பிச்சிட்டு எனக்கு. தாத்தா முகத்தில் சிரிப்பு இல்ல. தாத்தா முகத்தில் எப்பவும் இருக்கும் அந்த உற்சாகம் இல்ல. கருத்த தாத்தாவின் முகம் இன்னும் கருத்து இருந்தது . முகத்தில் வேற நாடியோடு சேர்த்து ஒரு துணியை கட்டி என்னவோ செய்து வைத்திருந்தார்கள். தாத்தா முகம் தாத்தா மாதிரியே இல்ல எப்படி ஆயிட்டாருனு நெனச்ச எனக்கு அழுகை ஓங்கி விக்கல் வந்துட்டு . அதுவரை என்னை கவனிக்காத கிளி அக்காவும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அம்மாவும் என்னை கை பிடித்துகொண்டாள்.

ஏசு சாமி கிட்ட போயிட்டாரு

ஏசு சாமி கிட்ட போயிட்டாரு

அம்மா சொன்னா அழுவாத டா. . தாத்தா ஏசு சாமி கிட்ட போயிட்டாரு . அதான் வேறு ஒண்ணுமில்லனு சொன்னா. அதற்குள் கோவிலில் இருந்து வந்த கூட்டம் ஒன்னு ஜெபமாலை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஏதேதோ வாசகங்கள் வாசித்தார்கள். ஏதேதோ ஆறுதல் வசனங்கள். ஆனா என் கண்ணு மட்டும் தாத்தா முகத்தில் தான் இருந்தது . மறுபடியும் என் விக்கல் அதிகமாக அம்மா என்னைய கை பிடிச்சு கூட்டிக் கொண்டு எங்க மாமி வீட்டில் விட்டுட்டு போனா. இதுக்கு தான் அங்க எல்லாம் நீ வர வேண்டாம்னு சொன்னேன். மாமி சாப்பிட பண்டம் தருவா சாப்பிட்டுட்டு விளையாடிட்டு இரு . நான் அடக்கத்துக்கு போயிட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டு போனா.

மனசு வரலை

மனசு வரலை

விளையாட்டு எப்போதும் எனக்கு இஷ்டம் தான். ஆனா அன்றைக்கு விளையாட்டில் மனம் லயிக்கவில்லை . அவங்க தந்த தின்பண்டங்களும்
இனிக்கவில்லை. ஏதோ யோசனையாய் இருந்தது. அம்மா வந்ததும் அவ்வளவு தான் அம்மாகிட்ட கேட்டுட்டேன் மனசை குடைந்து கொண்டிருந்த விஷயத்தை . ஏன் மா தாத்தாவுக்கு இப்படி ஆச்சு ?... . என் முகத்தில் இருந்த சோகத்தை பார்த்து என் கன்னத்தை ஒரு கிள்ளு கிள்ளி அது ஒன்னும் இல்ல கண்ணு.

எல்லாருக்கும் ஒரு நாள் கணக்கு உண்டு . இவ்வளவு நாள் தான் இந்த பூமியில் வாழுவாங்கனு கடவுள் எழுதி வச்சுருப்பாரு. அதான் தாத்தா போய்ட்டாரு. எதுல எழுதி வச்சிருப்பாருமா? னு கேட்டேன் . அது கடவுள் கிட்ட பெரிய புத்தகம் ஒன்னு இருக்கும் அதுல இருக்கும். அந்த நாள் கணக்கு முடிஞ்சா அவர் கிட்ட போய்ட வேண்டிய தான்.
சொல்லாதே தங்கம்

சொல்லாதே தங்கம்

ம் சொல்லிட்டே அப்போ நான் எப்போ மா போவேன் கடவுள் கிட்ட . ஐயோ அப்படி லாம் சொல்ல கூடாது தங்கம் என்று அம்மா என்னை தூக்கி அந்த கன்னத்திலும் இந்த கன்னத்திலும் நெறைய முத்தங்கள் தந்து சமாதானம் சொன்னாள். அவள் முத்தம் கொஞ்சம் சமாதானம் தந்தது என்னவோ வாஸ்தவம் தான். அனால் அதை விட இன்னொரு விஷயம் நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அழுகை வரல. அப்போ நான் ஒருநாள் இறந்து கடவுள் கிட்ட போகிறப்ப மறுபடி மாரிமுத்து தாத்தாவை பார்க்கலாம் . ஏன் அவர் தேன் மிட்டாய் கூட அவர் வாங்கி தருவார் . நினச்சு லேசா சிரிச்சிகிட்டேன். (தேன் மிட்டாய்க்காக தாத்தாவை தேடிய என்னை அல்பமா நினைச்சுடாதீங்க. அந்த வயசில அது தான் பெருசா தெரிஞ்சுது எனக்கு)

தாத்தா நேரம் முடிஞ்சது

தாத்தா நேரம் முடிஞ்சது

ம் என்று எதோ யோசனையாய் இழுத்தபடி அப்போ நான் இறந்து போனா மாரி முத்து தாத்தாவை பார்க்கலாமா என்று உற்சாகமாய் கேட்டது தான் தாமதம் அம்மாவுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம். இனி இப்படி பேசாதடி. தாத்தாவுக்கு நேரம் முடிஞ்சிட்டது. கடவுள் கூட்டிட்டு போய்ட்டாரு. அவ்வளவு தான். குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு படுப்போம் வா னு அவ சொன்ன தோரணையில் அதுக்கு மேல நான் ஒன்னும் கேக்கல. இல்லாட்டி அடி தான் விழும்னு எனக்கு தெரியும். அதனால அப்போதைக்கு அமைதி ஆயிட்டேன் . (இந்த கேள்வியை அன்னைக்கு மட்டுமில்ல பல நாள் அம்மா கிட்ட கேட்டிருக்கிறேன். அது அம்மாவை எப்படி பாதிச்சிருக்கும்னு அப்போ சத்தியமா எனக்குப் புரியல. அப்புறம் எனக்கு எதோ பேய் பிடிச்சிடக்கூடாதுனு பயந்து போய் தர்கால இருந்து ஒருத்தர் கிட்ட மந்திருச்சு ஒரு தாயத்து எல்லாம் வாங்கி கட்டி னு நான் கொஞ்ச நாள் அதோட தான் அலைஞ்சேன். அது வேற கதை!)

மாரிமுத்து தாத்தாவின் முகம்

மாரிமுத்து தாத்தாவின் முகம்

ஆனா அன்று இரவு மட்டும் இல்ல பல நாள் இரவு அந்த முகம் மாரிமுத்து தாத்தாவின் முகம். கடைசியா நான் பார்த்த கோலம் நியாபகம் வந்துகிட்டே இருக்கும். ரொம்ப ரொம்ப பயமா இருக்கும். அப்போல்லாம் தேன் மிட்டாய் கொண்டு தந்துட்டு முத்துப் பல் தெரிய சிரிக்கும் அந்த மாரி முத்து தாத்தாவின் சிரித்த முகத்தை கஷ்டப்படுத்தி நியாபகப்படுத்திக் கொள்வேன். காலப் போக்கில் அந்த கோர முகம் சீக்கிரம் கடந்து போகவில்லை என்னை விட்டு. அந்த முகம் என் மனதில் இருந்து மறைந்து போக பல வருஷங்கள் பிடித்தது என்பது உண்மை.

மனதில் பதிந்து போனவை

மனதில் பதிந்து போனவை


எத்தனையோ பேர் நம்ம கூட வாழுறாங்க ஆனா மனசில் பதிந்த உருவங்கள் சில தான் . அப்படி தான் முத்து தாத்தாவும். இப்போதும் பெட்டிக்கடை டி கடை எதை பார்த்தாலும் அவரின் பாசமான பொட்டலம் நியாபகம் வராம இருக்கிறது . அறியா வயதில் நான் அருகில் சந்தித்த அந்த முதல் மரணம் என்னை ரொம்ப பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் நான் இறந்து வீடு பக்கம் போவதே இல்லை. எதுக்கு மாரிமுத்து தாத்தா உருவம் வந்து என்னை பயமுறுத்தது போதாதா இன்னொன்னு வேறு வேணுமானுதான்.உயிர் எங்கே போகிறது என்று முதன் முதலில் என் அறியா வயசில் கேள்வியை கேக்க வச்ச மாரிமுத்து தாத்தாவின் மரணத்தில் என் பிஞ்சு உள்ளம் சந்தித்த அனுபவம் தான் இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் .

அடுத்த வார பதிவில் மரணம் என்று தெரியாமலே நான் கடந்து சென்ற ஒரு மரணம். பிரான்சிஸ்கம்மாள்....!

- இங்க்பேனா

(தொடரும் )

English summary
inkpena uyir enge pogirathu series part 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X