செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல.. அண்ணாமலை, பாஜகவை குறிப்பிடாமல் கருத்திட்ட கமலின் மக்கள் நீதி மய்யம்
சென்னை: தன்னை புறக்கணிப்பதாக இருந்தால் தாராளமாக புறக்கணித்துக்கொள்ளுங்கள் என மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேரம் பேசுவதை போல் அண்ணாமலை விமர்சித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
அண்ணாமலையின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

செய்தியாளர் கேள்வி
நேற்று தமிழ்நாடு பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், "பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பேரம் பேசிய அண்ணாமலை
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு "200 ரூபாய் நிச்சயம்" என்று பேசினார்.

ரூ.1000 வாங்கிக்கொள்ளுங்கள்
இதற்கு அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை பேசினார். இதற்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கணக்கில் பதிவிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கண்டனம்
"தமிழகத்தில் அண்மைக்காலமாக பத்திரிகையாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது. பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால் அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல. ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டியது அவசியம்." என குறிப்பிடப்பட்டு உள்ளது.