EXCLUSIVE: குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்குமா? என்ன சொல்கிறார் மருத்துவர்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் சொல்வதைபோல் மன அழுத்தம் குறைந்தால் மட்டும் குழந்தை பிறக்கும் என்பது அறிவியல்பூர்வமான வாதம் இல்லை என மருத்துவர் சையத் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இதன் இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று விரைவில் நடைபெற உள்ளது.
ஒரு காலத்தில் சமையல் நிகழ்ச்சிகள் என்றாலே அதை பெண்கள் மட்டும் பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி நகைச்சுவையை உள்ளே சொருகி அனைத்து வயதினரும் பார்க்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது குக் வித் கோமாளி.
என்னாது நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன் மீண்டும் கர்ப்பமா? குக் வித் கோமாளியிலிருந்து விலகுகிறாரா?

வெங்கடேஷ் பட்
விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வந்தனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு விலகியதால் வெங்கடேஷ் பட் மட்டும் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தையா?
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். குழந்தை பிறப்பதற்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அந்த பெண்ணிடம், குழந்தையுடன் வந்திருந்த மற்றொரு பெண், "குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார். மனஅழுத்தம் குறைந்து, சந்தோஷமாக இருப்பாய். விரைவில் குழந்தை பிறக்கும்." என சொல்லி உள்ளார்.

அணிவகுக்கும் மீம்கள்
அதைக் கேட்டு அந்த பெண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்க துவங்கி உள்ளார். தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் மெய் சிலிர்ப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் அந்த அளவிற்கு மன அழுத்தம் குறைவதாகவும் கூறினார்கள். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். குக் வித் கோமாளி பார்த்தால் எப்படி குழந்தை பிறக்கும், எனக்கேட்டு பலர் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மருத்துவர் சையத் ஹபீஸ் விளக்கம்
இந்த நிலையில், வெங்கடேஷ் பட்டின் பேசியது மருத்துவ ரீதியாக சாத்தியமானதா? அதை மருத்துவ அடிப்படையில் எப்படி எடுத்துக்கொள்வது என்ற கேள்விகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மருத்துவர் சையது ஹபீசிடம் பேசினோம். அதற்கு பதிலளித்த சையது ஹபீஸ், "குழந்தையின்மை என்பது ஒரு பெரிய பிரச்சனை. இந்த நிகழ்ச்சியில் சொன்னதை போல் மன அழுத்தம் இல்லாவிட்டால் மட்டும் ஒருவர் கர்ப்பமடைவார் என்பதையும், மன அழுத்தால் இருந்தால் கர்ப்பமடைய மாட்டார் என்பதையும் தொடர்புபடுத்த முடியாது.

அறிவியல்பூர்வமான கருத்து அல்ல
குழந்தையின்மை சிகிச்சை வெற்றிபெறுவதற்கும் வெற்றிபெறாததற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் என்பது குழந்தையின்மைக்கான காரணங்களில் 100 ல் 10 சதவீதம் மட்டுமே. குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்களை நாம் சொல்லலாம். இதுபோல் மன அழுத்தம் குறைந்தாலே குழந்தை பிறந்துவிடும் என்பது அறிவியல்பூர்வமான கருத்து அல்ல. சொல்லப்போனால் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கு இதில் மலட்டுத் தன்மை இருக்கிறது. அதை பற்றியெல்லாம் பலரும் பேசுவதில்லை." என்றார்.