"தர்மசங்கடம்".. கார்த்தி சிதம்பரம் என்ன இப்படி சொல்லிட்டாரே.. திமுகவின் "திராவிட மாடல்" சாத்தியமா?
சென்னை: திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி தரும் அளவுக்கு, காங்கிரசின் கார்த்தி சிதம்பரம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.
6 நாளில் 6 வது முறையாக அதிகரிப்பு.. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு..!
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், இலங்கையின் பொருளாதாரம், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்...

பொருளாதாரம்
அவர் சொன்னதாவது: இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் மிகவும் வேதனை தருகிறது.. அங்கு நடக்கும் ஆட்சி முழுக்க சிங்களர்களின் குடும்ப ஆட்சி.. ஒரே குடும்பத்திடம் முழு அதிகாரமும் உள்ளது... பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது... எனவே, அவர்கள் இந்தியாவை நோக்கி அகதிகளாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது..

பெட்ரோல், டீசல்
இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து அந்த நிதி பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள மக்களுக்கு மட்டும் சென்றடையாமல் நமது தமிழ் மக்களுக்கும் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும்.. டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு, காங்கிரஸ் போராட்டங்களை நடத்தினாலும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.. மக்களும் அவர்கள் இந்துதுவாவை ஏற்றுக்கொண்டு அவர்கள் விதிக்கும் வரியை ஏற்றுக்கொள்கிறார்கள்.

திமுக ஸ்டாலின்
பிரதமரும், நிதியமைச்சரும் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டுதான் இருக்கும்.. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தினை வரவேற்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் ஆண்டிற்கு ஒரு முறையல்ல, 3 முறை சென்று அங்குள்ள வளர்ச்சி, தொழில், மற்றும் அங்கு வாழும் தமிழர்களை சந்திக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு பயன்படும் என்றும்.. ஆனால், செல்வி ஜெயலலிதா, நடிகராக இருக்கும்போது வெளிநாடு சென்றவர் முதல்வரான பின் ஒருமுறை கூட வெளிநாடு செல்லவில்லை.

அண்ணாமலை
தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்.. இவர் இப்படி விமர்சனம் செய்வதை போல் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பயணம் செய்வதை விமர்சனம் செய்தால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.. பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.. பெண்களை காம பொருட்களாக ஆண்கள் பார்க்க கூடாது" என்றார்.

திராவிட மாடல்
இறுதியில், திமுகவின் திராவிட மாடல் குறித்த கேள்வியை கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.. அதற்கு கார்த்திக் சிதம்பரம், திராவிட மாடல் என்ன என்பதற்கு அறிஞர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

திமுகவின் திராவிட மாடல்
தமிழகத்தில் அனைத்து சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் திமுக-வின் திராவிட மாடல் ஆகும்.. சமீபகாலமாகவே இந்த திராவிட மாடல் வளர்ச்சி குறித்துதான் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.. சமீபத்தில் நடந்த முதல்வரின் சுயசரிதை விழாவிலும் இந்த திராவிட மாடல் வளர்ச்சி குறித்த பேச்சுதான் அதிகமாகவே அடிபட்டது.

ஜோதிமணி
எனவேதான், இதனை பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் தினந்தோறும் விமர்சித்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, அண்ணாமலையும், எச்.ராஜாவும், தவறாமல் இதுகுறித்து விமர்சித்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம், "இந்திய அளவிற்கு திமுக ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? என்று சந்தேகம் எழுப்பி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஜோதிமணியால் திமுகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்னொரு தர்மசங்கடம் கார்த்தியால் ஏற்பட்டுள்ளது..!