கனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்?

சென்னை: கனிமொழி ஏன் இப்படி ஒரு ட்வீட் போட்டார்?
கருணாநிதி இறந்ததிலிருந்தே அந்த குடும்ப உறுப்பினர்கள் யாருமே வெளியே பெரிய அளவில் பேசப்படவில்லை. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட கருணாநிதியின் வாரிசுகளின் தகவல்கள் அதிக அளவில் செய்திகளாக வரவும் இல்லை.
அதிக அளவு பேசப்பட்டது அழகிரிதான். எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டாரோ அதே அளவுக்கு சத்தம் இல்லாமல் போயும் விட்டார். ஆனால் கனிமொழி ஏனோ ஒதுங்கி இருக்கிறாரா, அல்லது ஒதுக்கப்பட்டுள்ளாரா என்றே தெரியவில்லை.

டெல்லி சமாச்சாரங்கள்
கருணாநிதி இருந்தபோது, கனிமொழியை இப்படி கண்டுக்காமல் விட்டது இல்லை. மகள் என்றால் அவ்வளவு பாசம் கருணாநிதிக்கு. டெல்லி சமாச்சாரங்களைகூட டி.ஆர்.பாலுவுடன் கனிமொழியை சேர்த்து கவனிக்க சொன்னார் அவர். அப்படி இருக்கும்போது, மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக நடத்தப்பட்ட கூட்டத்துக்கு கனிமொழிக்கு அழைப்பு விடுக்கவில்லை கட்சி மேலிடம். இத்தனைக்கும் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர்தானே? அந்த வகையில் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

முன்னுரிமை
திமுக என்ற பலம் பொருந்திய கட்சிக்கு மகளிரணி என்ற அமைப்பு உள்ளது. இதன் செயலாளராக கனிமொழி பொறுப்பு வகிக்கிறார். தேர்தலும் நெருங்கி வரும் சமயத்தில், மகளிர் அமைப்புகளை திரட்டுவதும் அவசியமான ஒன்றே. இந்த விதத்திலாவது கனிமொழிக்கு முன்னுரிமை தந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒதுக்கப்படுகிறாரா?
அதேபோல திருவாரூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்ட அழைப்பிதழில் பெயர் இல்லை. இப்படி நிறைய உதாரணங்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை திமுக கனிமொழியை ஒதுக்குகிறது என்பது உண்மையானால், அதற்கு சொல்லப்படும் காரணம், 2ஜி ஊழல் குற்றச்சாட்டாக வேண்டுமானால் இருக்கலாம்.

அழகிரி
இன்னும் கனிமொழி மேல் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று கட்சி ஒரு பக்கம் நினைத்தாலும், இன்னொரு பக்கம் கனிமொழியை ஒதுக்குவது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கருணாநிதியே அழகிரியை ஒதுக்கியதால் அவரை சேர்க்கவில்லை என்பதைகூட ஏற்கலாம். ஆனால் கருணாநிதி இருக்கும்போது கனிமொழி இப்படி இல்லையே?
|
ஜெயலலிதா நினைவுநாள்
இன்னும் சொல்லப்போனால் உதயநிதிக்கு தரும் முக்கியத்துவம் கனிமொழிக்கு இருக்கிறதா என தெரியவில்லை. தான் ஒதுக்கப்பட்டுள்ளோம் என்று நினைத்தோ, வருந்தியோ, இப்படி ஒரு கவிதையை கனிமொழி நேற்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதுவும் ஜெயலலிதாவுக்கு கனிமொழி என்பது ஆச்சரியம்தான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அதில் பதியப்பட்டுள்ள வரிகள்தான்.

துரதிருஷ்டவசமானது
அதில், "ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார். இதே வரிகளை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது, `Surviving as a woman in a male dominated political world is not an easy task' எனப் பதிவு செய்திருக்கிறார். அதாவது, `ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்றது சாதாரணம் அல்ல' என்கிறார்.

முக்கியத்துவம்
கருணாநிதி மகள் என்று இல்லாவிட்டாலும், ஸ்டாலினின் தங்கை என்று இல்லாவிட்டாலும், ஒரு சீனியர், மாநிலங்களவை உறுப்பினர், மகளிரணி செயலாளர்.. கவிஞர்... என்ற முறையிலாவது அவருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றே திமுக ஆதரவாளர்கள் சிலர் பொருமுகிறார்கள்.