சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவிலிருந்து ஓரங்கட்டப்படுவாரா நிதின் கட்கரி?

Google Oneindia Tamil News

-ஆர். மணி

Recommended Video

    மோடி, அமித்ஷாவுக்கு எதிராக களமிறங்கும் நிதின் கட்கரி ?

    சென்னை: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஒரு வாரமாக பேசி வரும் பேச்சுக்கள் பாஜக விற்குள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளுக்குள்ளும், மீடியாக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், தான் பதினைந்து ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களையும், ஐந்து ஆண்டுகள் ஆண்ட ராஜஸ்தான் மாநிலத்தையும் காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்து விட்டு நின்று கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா கட்சி. மோடி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கும் மேலான காலம் முடிந்த நிலையில் பாஜக சந்தித்த மிக மோசமான, மிக முக்கியமான தோல்வி இந்த மூன்று மாநிலங்களில் அடைந்த தோல்விதான்.

    இதில் ராஜஸ்தான் தோல்வி அனைவராலும், பாஜக வினராலும் கூட, எதிர்பார்க்கப்பட்ட தோல்விதான். ஏனெனில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு காங்கிரஸூம், பாஜக வும் தான் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மத்திய பிரதேசம் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களில் அடைந்த தோல்விகள் பாஜக வில் விவரம் அறிந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் எந்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சர்களும் வெளிப்படையாக இந்த தோல்விகள் பற்றி விரிவாக எதுவும் பேசவில்லை. இது பற்றி பொத்தாம் பொதுவாக மோடி சொன்ன கருத்து, "தேர்தல்களில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி, மாறிதான் வரும். நாங்கள் இந்த தோல்விகளை ஏற்றுக் கொள்ளுகிறோம்" என்பதுதான். பாஜக தலைவர் அமீத்ஷா வாய் திறக்கவில்லை.

    கத்காரியின் சரமாரி கருத்துக்கள்

    கத்காரியின் சரமாரி கருத்துக்கள்

    இந்த நிலையில்தான் கடந்த பத்து நாட்களில் இரண்டு முறை பாஜக தோல்வி பற்றி நிதின் கட்கரி சொன்ன கருத்து பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. ‘'வெற்றிக்கு பல தந்தைமார்கள் உண்டு. ஆனால் தோல்வி என்பது ஒரு அனாதை. வெற்றி பெற்றால் நாங்கள் தான் காரணம் என்று பலரும் கூறிக் கொள்ளுவார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் அதற்கு பொறுப்பேற்க ஒருவர் கூட முன்வருவதில்லை. வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதற்கு பொறுப்பேற்கும் மனப்பாங்கு, அணுகுமுறை தலைமைக்கு வர வேண்டும்'' என்று ஒரு வாரத்துக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனே யில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் மாநாட்டில் பேசும் போது நிதின் கட்கரி குறிப்பிட்டார். தலைமை என்று சொல்லும் போது அவர் குறிப்பிடுவது பாஜக தலைவர் அமீத் ஷா மற்றும் ஆட்சியின் தலைமையில் இருக்கும் பிரதமர் மோடி என்றே புரிந்து கொள்ள ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை தான்.

    நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்

    நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்

    இரண்டாவது முறை அவர் பேசியது, டிசம்பர் 24, திங்கட்கிழமை. டெல்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை அதிகாரிகள் (Intelligence Bureau or IB officers) மாநாட்டில். இதில் அவரது உரை முடிந்தவுடன் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசும் போது நிதின் கட்கரி இப்படி கூறினார், ‘'நன்றாக உற்று நோக்கினால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெற்றிக்குக் காரணம், நன்கு பயிற்சி பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்தான். அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதால் இது சாத்தியமானதாக ஆகிக்கொண்டிருக்கிறது. நான் கட்சித் தலைவராக இருக்கும் போது என்னுடைய கட்சியின் எம்எல்ஏக்களும், எம் பிக்களும் நன்றாக செயற்படவில்லை என்றால் அதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் நன்றாக செயற்படாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை நான்தான் கண்டறிந்து கூற வேண்டும்''.

    விடாமல் விரட்டும் கட்கரி

    விடாமல் விரட்டும் கட்கரி

    இதோடு மட்டும் நிதின் கட்கரி நிற்கவில்லை. சகிப்புத்தன்மை இந்திய கலாச்சாரத்தின் முக்கியமான ஒரு அங்கம் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அவர் சுட்டி காட்டிய உதாரணம் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் வாசகங்களைத்தான். ‘'நேரு அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லுவார். ஒவ்வோர் மனிதனும் நான் இந்த நாட்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்துபவனாக இல்லை என்று கருத வேண்டும். இவ்வாறு எல்லா மனிதர்களும் நான் நாட்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்தால் நம்முடைய பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். நானும் (நிதின் கட்கரி) அப்படித்தான் நினைக்கிறேன்'' என்று பேசினார் நிதின் கட்கரி.

    குண்டைத் தூக்கிப் போட்டார்

    குண்டைத் தூக்கிப் போட்டார்

    நிதின் கட்கரி பாஜக வின் முன்னாள் தேசீய தலைவராக இருந்திருக்கிறார். இன்றைக்கும் பாஜக வின் நிதி நிர்வாகத்தை பார்ப்பது நிதின் கட்கரிதான். ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும் (turn over) பல தொழில்களை நிதின் கட்கரி யின் குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வருகின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில், இந்த நிறுவனங்களில், வேறு ஒரு வழக்கு சம்மந்தமாக, சிபிஐ மற்றும் வருமானவரி சோதனைகள் நடைபெற்றது. ஓராண்டுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசும் போது, தன்னுடைய வீட்டில் ஒட்டு கேட்கும் சாதனங்கள் பொறுத்தப் பட்டுள்ளதாக, ஒரு குண்டை தூக்கிப் போட்டார் நிதின் கட்கரி.

    மோகன் பகவத்தின் ஆசி

    மோகன் பகவத்தின் ஆசி

    இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம், தற்போதய ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பகவத், நிதின் கட்கரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுதான். அப்படியென்றால், நிதின் கட்கரி தற்போது பேசுவது எல்லாமே, மோஹன் பகவத்தின் ஆசிர்வாதத்தால் தானா என்ற கேள்வி எழுகிறது. ‘'அப்படித் தான் நான் நினைக்கிறேன். மோடி மற்றும் அமீத்ஷா வின் அரசியலை பற்றிய குறைந்த பட்ச புரிதல் உள்ள எவருக்கும் ஒரு விஷயம் நன்கு தெரியும். மோடியும், அமீத் ஷா வும் ஒரு குண்டு மணியளவுக்கு கூட தங்களுக்கு எதிராக பாஜக வுக்கு உள்ளேயிருந்து எந்த விமர்சனங்கள் வருவதையும் அணுமதிப்பதில்லை. இப்படித்தான் கடந்த நான்கரை ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதை மீறி விமர்சித்தவர்கள் கட்சிக்குள் ஓரங் கட்டப்பாட்டார்கள். ஆகவே இந்த பின் புலத்தில் பார்த்தால், நிதின் கட்கரி ஆர்எஸ்எஸி ன் பக்க பலம் இல்லாமல் இந்த விமர்சனங்களை செய்ய ஆரம்பித்திருக்க மாட்டார்'' என்று இந்த கட்டுரையாளரிடம் கூறினார் டில்லியில் இருக்கும் ஒரு தேசீய நாளிதழின், தலைமை செய்தியாளராக இருப்பவரும், பாஜக தலைவர்களிடம் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருப்பவருமான ஒரு பத்திரிகையாளர்.

    ஆரம்பத்திலிருந்தே உரசல்

    ஆரம்பத்திலிருந்தே உரசல்

    ‘'ஆரம்பத்திலிருந்தே நிதின் கட்கரிக்கு மோடியிடமும், அதை விட அதிகமாக அமீத் ஷா விடமும் உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. இதில் கோபத்தின் உச்சத்திற்கு நிதின் கட்கரி போனது பண மதிப்பிழப்பு (demonetization) நடவடிக்கையின் போதுதான். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதின் கட்கரி யை கடுங் கோபத்தில் ஆழ்த்தியது. அப்போது தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் போது நிதின் கட்கரி கூறியது, ‘'demonetization ஏதாவது ஒரு ரூபத்தில் பாஜக விற்கு மிக கடுமையான பாதிப்பை கொண்டு வந்தே தீரும். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்கள் கூட நான் சொல்லுவதை மறுக்க மாட்டார்கள்'' என்று கூறியிருக்கிறார் என்று மேலும் சொன்னார் அந்த பத்திரிகையாளர்.

    இவரும் ஓரம் கட்டப்படுவாரா

    இவரும் ஓரம் கட்டப்படுவாரா

    இதற்கு முன்பு மோடியை, அமீத் ஷா வை எதிர்த்தவர்கள் பாஜக விற்குள் ஓரங்கட்டப்பட்டார்கள். ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி என்று ஒரு பட்டியலை சொல்லலாம். ஆனால் நிதின் கட்கரியை இந்த பட்டியிலில் சேர்க்க முடியாது. காரணம் அவர் ஆர்எஸ்எஸூ க்கு நெருக்கமானவர், குறிப்பாக அதன் தற்போதய தலைவர் மோஹன் பகவத்துக்கு நெருக்கமானவர். நிதின் கட்கரி யின் இந்த கருத்துக்கள் பாஜக விற்குள் ஒரு கலகமாக உருவெடுக்குமா அல்லது ஆங்கிலத்தில் சொல்லுவது போல, Just a storm in a tea cup, அதாவது, இது ஒரு சிறு பிரச்சனைதான், விரைவில் அடங்கி விடும் என்பது தேர்தல்களின் நெருக்கத்தில் நமக்கு தெளிவாக தெரிய வரலாம், அதுவரை நாம் பொறுத்திருக்கவே வேண்டும்.

    English summary
    Will BJP Sideline union minister and Senior BJP leader Nitin Gadkari for his slam against Amit Shah and PM Modi for poll debacle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X