ஓடிடியால் சினிமாவிற்கு ஆபத்தா?
சென்னை: தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' படம் ஓடிடி., யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது தான் தமிழ் திரையுலகின் தற்போதைய 'ஹாட் டாப்பிக்'.
பிரச்சினைக்கு காரணமாக கூறப்படும் ஓடிடி தளம் சினிமாவிற்கு ஆபத்தானதா என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்துள்ள படம், 'பொன்மகள் வந்தாள்' .
கொரோனா ஊரடங்கால் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் தளத்தில், மே 29 அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாக ஜோதிகா தரப்பு அறிவித்துள்ளது. இதற்கு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பழசுதானே
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஓடிடி, யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது தமிழ் சினிமாவிற்கு புதியதல்ல. 2016 ம் ஆண்டு முதல் 'கர்மா' , 'சில சமயங்களில்' , 'சிகை' , 'களவு' , 'ஆர். கே. நகர்' போன்ற படங்கள் தியேட்டருக்கு செல்லாமல் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. 'விஸ்வரூபம்' பட ரிலீசுக்கு எதிர்ப்பு எழுந்த போது கூட டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவது பற்றி கமல் பேசி இருந்தார்.

தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்:
தற்போது கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அப்படி திறக்கப்படும் போது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு வரிசையாக காத்திருக்கின்றன. இதனால் குறைந்த பட்ஜெட் படங்கள் மற்றும் பிற நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர் கிடைக்க எப்படியும் 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை தயாரிப்பாளர் வட்டி கட்டும் நிலை ஏற்படும்.

ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஏன் ?
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஓடிடி போன்ற தளங்களுக்கு படங்கள் விற்கப்படும் போது தயாரிப்பாளர் நஷ்டம் என்ற நிலை ஏற்படுவது குறைகிறது. தியேட்டர் கிடைக்கவில்லை, வியாபாரம் ஆகவில்லை, ரிலீஸ் ஒத்திவைப்பு என்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கடந்த 3 மாத கால ஊரடங்கின் போது வீட்டில் இருந்தபடி ஓடிடி, நெட்பிளிக்ஸ் போன்றவற்றில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படி பார்த்தால் தியேட்டரை விட அதிகமானவர்களும் ரசிகர்கள் அல்லாதவர்களும் படங்களை பார்க்க வாய்ப்பு ஏற்படுகிறது.

வாய்ப்பு அதிகம்
ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைப்பதால் அதிக படங்கள், குறிப்பாக குறைந்த பட்ஜெட் படங்களும் புதிய இயக்குநர்களின் வருகையும் அதிகரிக்கக் கூடும். கொரோனா ஊரடங்கால் வேறு வழியின்றி ஓடிடி யில் ரிலீஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறினாலும், இது சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அந்த அரசியல் தலைவரை எந்த காலத்திலும் நம்பாதீங்கன்னு சொன்னார் கருணாநிதி.. ராமதாஸ் போட்ட பரபர ட்வீட்