பிளானே வேற.. தேசிய லெவலுக்கு உயரும் முதல்வர் ஸ்டாலினின் கிரேஸ்.. இதுதான் காரணமா.. பரபரக்கும் திமுக
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தேசிய அரசியலிலும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் விரைவில் அடிபட தொடங்கும் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளும் மெல்ல நடந்து வருவதாக கூறப்படுகிறது.
10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தொடர்ந்து பிரதான இடத்தை பெற்று வருவது, தமிழகத்தின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் முன்னேற்றத்தை தேசிய அரசியலில் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
ரூமேனியாவிலிருந்து 5 தமிழர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் மும்பை புறப்பட்ட முதல் மீட்பு விமானம்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்தார்..

முதல்வர் ஸ்டாலின்
இந்தியா டுடே நாட்டின் மனநிலை என்ற தலைப்பில் மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தியது.. இதில், இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதுதான் அதில் கேட்கப்பட்டிருந்த பிரதான கேள்வி.. அதன்படி, இந்தியாவில் சொந்த மாநிலங்களில் மிகவும் பிரபலமான முதல்வராக ஸ்டாலின் 42 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்திருந்தார்..

நிர்வாகம்
ஆட்சிக்கு வந்த அந்த 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் இப்படி அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு ஸ்டாலினுக்கு பெருகியிருந்ததே இதற்கு காரணம்.. எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டதை நாடே உற்று கவனித்தது..

மாநில உரிமைகள்
அதேபோல, மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் உற்றுநோக்க வேண்டி உள்ளது.. "எல்லாருக்கும் எல்லாம்' என்பதை அடிப்படையாக கொண்டதுதான் சமூகநீதியாகும்... சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும், இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்" என்பதை விளக்க முற்பட்டுள்ளார்.

திமுகவின் கொள்கை
சொந்த மாநிலத்தில் காட்டிவரும் அக்கறை ஒருபக்கம், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சி மறுபக்கம் என இரண்டு வழிகளில் முதல்வர் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

மம்தா பானர்ஜி
விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேசியகட்சிகள் சூடுபிடித்துள்ளன.. பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கி உள்ளார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கி உள்ளன.. அதேசமயம், பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும் கண்டிப்பாக எழவே செய்யும்.. அதனால்தான் காங்கிரஸ் கட்சி, இதுவரை மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.. எனினும் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு ஸ்டாலினின் ஆதரவும் கிடைத்துள்ளது.

உங்களில் ஒருவன்
அதேசமயம், ஸ்டாலினும் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு தகுதியானவர்தான் என்பதை திமுகவினர் அடித்து சொல்கிறார்கள்.. அதற்காகவே, இன்றைய தினம் வெளியிடப்படும் ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை, ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. இந்த புத்தகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் மிசாவில் கைதானது முதல், சென்னை மேயரானது, துணை முதல்வரானது, பிறகு முதல்வரானது வரை அத்தனை தகவல்களும் திரட்டி தரப்பட்டுள்ளதாம்..

டாக்குமென்ட்ரி
மேலும் இதுவரை தமிழக நலன்களை பெற்றுத்தர, சமூகநீதி காக்க, ஸ்டாலின் மேற்கொண்ட போராட்டங்கள் அடங்கிய வீடியோக்களும் ரெடியாகி கொண்டிருக்கிறதாம். மேலும், டாக்குமென்ட்ரி படங்களும் தயாராகி கொண்டிருக்கிறதாம்.. இவையெல்லாம் வெளிவந்தால், வடமாநிலங்களிலும் ஸ்டாலின் யார் என்பது தெரியவரும் என்று திமுக தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, 3 நாட்களுக்கு முன்பு, திமுகவின் ஆ.ராசா நீலகிரியில் பேசிய பேச்சையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது..

ஆ.ராசா
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெற்றிக்கு காரணமே தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். ஸ்டாலினின் இந்த வெற்றி இந்தியாவுக்கே ஒரு செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது... திமுக தலைவர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கி வருகிறார். தமிழக முதல்வராக உள்ள அவரை அடுத்த நிலைக்கு, தேசிய அளவிலான இடத்துக்கு கொண்டுச் செல்ல நீங்கள் பாடுபட வேண்டும்" என்று ஆ.ராசா கேட்டுக் கொண்டார். எனவே, பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறாரோ இல்லையோ, நிச்சயம் அவரது புகழ் வடமாநிலங்களிலும் இந்த புத்தகங்கள் மூலமாக எதிரொலிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!