"டரியல்".. ராமலிங்கம் ஏன் இப்படி சொல்றாரு.. அப்ப திமுகவுடன் இணக்கமா.. டேமேஜ் செய்ய ரெடியாகிறதா பாஜக?
சென்னை: 72 மணி நேரம் கெடு முடிந்த பிறகும், தமிழக அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி பேரணி நடக்கும், பா.முற்றுகை போராட்டமும் நடத்தப்படும், அதற்கான ஏற்பாடுகளும் தயாராகிவிட்டது என்று தமிழக பாஜக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது... இப்போது பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பை, தமிழக அரசும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்...
யார் கிட்ட..பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசின் வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகம்..அண்ணாமலை

நிர்மலா சீதாராமன்
இதற்கு நம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் தந்தார்.. அப்போது, "கடந்த 8 வருடங்களில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைப் பலமுறை உயர்த்தியபோதும், ஒருமுறை கூட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், ஆலோசனையும் செய்யாமல், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியது. இப்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியைக் குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமே இல்லை" என்றார்.

பாஜக
எனினும் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கின.. குறிப்பாக தமிழக பாஜக இந்த விஷயத்தையும் விடவில்லை.. பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் டீசல் விலை தொடர்பாகவும், நிர்மலா சீதாராமனுக்கு பதில் தந்த பிடிஆர் கூறிய கருத்து தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அவர் சொன்னதாவது:

முற்றுகை
"பிடிஆர் சொல்வதை பார்த்தால், பிரதமர் மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல.. அரசியல் லாபத்துக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. நாங்கள் புதிதாக எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதேபோல, கேஸ் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும்... 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.. " என்று விமர்சித்தார்.

ரெடியாகிறது பாஜக
இந்நிலையில், அண்ணாமலை விதித்த 72 மணி நேர கெடு இன்றுடன் முடிவடைகிறது.. இந்த 3 நாளில் திமுக அரசு எந்தவிதமான அறிவிப்பையும், பெட்ரோல் டீசல் தொடர்பான விலைகுறைப்பையும் அறிவிக்கவில்லை.. இதையடுத்து, கமலாலயத்தில் போராட்டம் தொடர்பாக ஆலோசனையும் நேற்றைய தினம் நடத்தப்பட்டது.. எப்படியும் முற்றுகை போராட்டத்தை நடத்திவிடுவது என்ற முடிவும் எடுக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்ட வேலையும் ஆரம்பமாகிவிட்டதாம்.. ஜுன் முதல் வாரத்தில் போராட்டம் நடத்த முடிவாகி உள்ளதாம்..

கருணாநிதி
ஆனால், இந்த முற்றுகை போராட்டத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும், அது திமுகவை டேமேஜ் செய்யும் வகையிலும், தமிழக மக்களின் கவனம் பாஜக பக்கம் திரும்பும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் முடிவாகி உள்ளதாம்.. எப்படி திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்ட முயன்ற அரசின் முயற்சிக்கு எதிராக, பாஜக போராட்டம் நடத்தியதோ, அதை விட பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கிய பேரணி இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவாகி உள்ளதாக தெரிகிறது.. இந்த பேரணி நடக்கும்பட்சத்தில், நிச்சயம் பாஜகவுக்கு சாதகமான சூழல்கள் அமையும் என்று தெரிகிறது.

கேபி ராமலிங்கம்
இதனிடையே, ஓசூரில் பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் பேட்டி தந்துள்ளார்.. அப்போது அவர் சொல்லும்போது, தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை 30% குறைக்காவிட்டால் அடுத்த கட்டமாக ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து விட்டு, தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்... நாங்கள் 72 மணி நேரம் அவகாசம் கொடுத்துள்ளோம். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். இந்த ஆட்சியை அகற்றும் போராட்டம், இன்னும் 3 மாதங்களில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

எப்போது முற்றுகை
அப்படியானால், கோட்டை நோக்கி பேரணி இன்று இல்லையா? ஜுன் முதல் வாரம் முற்றுகை போராட்டம் இல்லையா? 72 மணி என்று கெடு வைத்துவிட்டு 2 மாதம் அவகாசம் சொல்வது ஏன்? மறுபடியும் 3 மாதங்களில் போராட்டம் அறிவித்துள்ளது ஏன்? எதற்காக? என்ற பலவித சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.. ஆனால் பாஜகவின் வியூகம் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என்றாலும், முற்றுகை குறித்து இன்றைய தினம் ஒரு முடிவு தெரிந்துவிடக்கூடும்.. பார்ப்போம்..!