"மாஜி" எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் ஐடி ரெய்டு.. கோவை வடவள்ளியில் பரபரப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர். இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார்.
பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர்
இவரது வீட்டில் வருமான வரித் துறையினர் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். அது போல் சந்திரசேகரின் தந்தையின் பி.என்.புதூர் வீட்டிலும் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வடவள்ளி வீடு
இந்த சோதனையையொட்டி அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்திரசேகர் பல்வேறு தொழில்களையும் ஒப்பந்தத் தொழில்களையும் செய்து வருகிறார். இவரின் மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சி 38 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். ஆலயம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

எஸ் பி வேலுமணி
ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் இரு முறை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தப்பட்ட போது சந்திரசேகர் வீட்டிலும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நிர்வாகி
சந்திரசேகர் என்ஜினியர் ஆவார். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் செயலாளராக இருக்கிறார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அதிமுகவின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக கந்தசாமியை நியமித்தது.

இதுவரை 5 அமைச்சர்கள்
இதையடுத்து எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் மீதும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.