கோவையில் கிறிஸ்துவ தேவாலயம் மீது தாக்குதல்! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துக! ம.ம.க கோரிக்கை!
சென்னை: கோவையில் கிறிஸ்துவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் ஊறு விளைவிக்கும் நோக்கில் நடைபெறும் இது போன்ற செயல்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசியல் பணிக்கு இடையே.. திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் செய்யும் உதவிகள்.. மக்கள் பாராட்டு

கிறிஸ்துவ தேவாலயம்
கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிர்னிட்டி கிறிஸ்தவ தேவாலயத்தின் நுழைவு வாயில் அருகே அமைந்திருக்கும் செபஸ்தியர் சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெறுப்பு பேச்சு
அரியலூர் மாணவி லாவண்யாவின் உயிரிழப்பு குறித்து பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பினர் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது பரப்பி வரும் உண்மைக்குப் புறம்பான வெறுப்பு பேச்சுகளின் பின்னணியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கடும் நடவடிக்கை
கோவையில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தாக்குவது, சிலைகளைச் சேதப்படுத்துவது, தந்தை பெரியார் சிலை சேதப்படுத்துவது, ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது எனத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றது. இத்தகைய கவலை தரும் போக்கைத் தடுத்து நிறுத்த கோவை காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

சட்டத்தின் முன்
சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை காவல்துறை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.