தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்.. சசிகலாவை பிடிக்கும் என்று சொன்னது ஏன்? ஜெயக்குமார் கிடுக்கிப்பிடி
சென்னை: சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டவர் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தது ஏன்?ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டு வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தனிப்பட்ட முறையில் சசிகலாவை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதும் அவர்தான் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
சட்டதிட்டங்களின் படி அதிமுக பொதுக்குழு முறையாக நடைபெற்றதாக கூறினார். பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார்.
நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் மருது அழகுராஜ். ஓ.பன்னீர் செல்வம் பக்கம் சாய்ந்து கொண்டு கூலிக்கு மாறடித்து வருகிறார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது போல பேசி வருகிறார் மருது அழகுராஜ்.
டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

நீதிமன்றம் நல்ல தீர்ப்பு
ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களும் கொதித்தெழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படிதான் அனைத்தும் நடைபெறுகிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

கோடநாடு கொலை குற்றவாளிகள்
கோடாநாடு கொலை பற்றி சந்தேகம் எழுப்புகிறார் மருது அழகுராஜ். கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போர்கால அடிப்படையில் கண்டுபிடித்து கைது செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்த குற்றவாளிகள் மீது நிறைய குற்றங்கள் உள்ளன. அந்த குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது திமுக வழக்கறிஞர்தான். குற்றவாளிகளுக்கு வக்கீல் டீமை அனுப்பியது திமுதான் இதை ஏன் மருது அழகுராஜ் கூறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தர்மயுத்தம் நடத்தியவர்
யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் என்று எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் மனச்சாட்சிப்படி நடக்கவில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டவர் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தது ஏன்?ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டு வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தனிப்பட்ட முறையில் சசிகலாவை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதும் அவர்தான்.

ஓ.பன்னீர் செல்வம்
எனக்கு வந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று சொன்னதும் ஓ.பன்னீர் செல்வம்தான். அதை ஏன் மருது அழகுராஜ் சொல்லவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறினாரே. அதைக் கேட்டு அதிமுகவினர் கொதித்து போயிருக்கின்றனர்.

திமுக தீய சக்தி
அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்ததே குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்றுதான். கருணாநிதி என்பவர் ஒரு தீய சக்தி என்று எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் விமர்சித்துள்ளனர். வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பு கொள்கையை கொண்டவர்கள். எந்த நிலையிலும் திமுக என்ற தீய சக்தியை தலைதூக்க விடக்கூடாது என்று சொன்னவர். அதை மீறி முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஜெயக்குமார்.